Sunday, April 30, 2006

தப்புக் கணக்கு

அலுவலகத்தை விட்டு மாலை வீட்டுக்குத் கிளம்பும்போ சந்துருவுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. இன்று மிகவும் பத்திரமாக வீடு போய் சேரவேண்டுமே என்று பலமுறை வேண்டிக்கொண்டான். காலையில் படித்த பார்த்த கேட்ட ராசிபலன்கள், இந்த நாள் எப்படி? ஆகியவை வேறு அவனை பயமுறுத்தின. தன்னுடைய பேண்ட் பாக்கட்டில் சம்பளப் பணம் பத்தாயிரம் இருந்த பர்ஸை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். பஸ்ஸில் பிக் பாக்கெட் கும்பல் சம்பள நாள் அன்று அதிகமாக இருக்கும். கைப்பையில் பணத்தை வைத்தால் அரைபிளேடால் கிழித்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள். தன்னுடைய பாண்ட் பையில் இருப்பதே பாதுகாப்பானது. உடம்பில் அந்த ஸ்பரிசம் இருந்துக் கொண்டே இருக்கும். நாமும் சற்று எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று சந்துருவுக்குத் தோன்றியது.

இன்றைக்கென்று பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருப்பது போல தெரிந்தது. உட்கார இடம் கிடைக்கும் பஸ்ஸுக்காக இரண்டு பஸ்களை தவறவிட்டான். அடுத்ததாக வந்த பஸ்ஸில் நல்ல வேளையாக உட்கார இடம் இருக்கவே அதில் ஏறி உட்கார்ந்துக் கொண்டான். சந்துருவின் போறாத காலம், அடுத்த ஸ்டாப்பிலேயே பஸ்ஸில் கூட்டம் அதிகமானது. அதற்கடுத்த ஸ்டாப்பில் இன்னும் கூட்டம் நெருக்கியடித்தது.

உட்கார்ந்திருக்கும் வரையில் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீடுவரை ஜாக்கிரதையாகப் போக வேண்டுமே என்று கலக்கமாக இருந்தது. சம்பளவாள் அன்று பணம் தவறவிட்ட கதைகளை எத்தனைமுறை படித்தும் கேள்விப்பட்டும் இருக்கிறான். இன்றைக்கென்ன நம்முடைய முறையா? ‘சே, சே! இருக்காது’ சந்துரு தலையை உதறிக் கொண்டான்
.
சந்துரு இருப்பது மடிப்பாக்கத்தில். அலுவலகத்தில் இருந்து இருபத்தினாலு கிலோமீட்டர். நேரிடையான பஸ் கிடையாது. சைதாப்பேட்டையிலோ அல்லது வேளச்சேரியிலோ பஸ் மாறி போக வேண்டும். எப்படியும் வீடு சென்றடைய இரண்டு மணிநேரம் ஆகிவிடும். இன்று கிடைத்தது வேளச்சேரி பஸ். பரவாயில்லை. அங்கிருந்து மடிப்பாக்கம் போக ஆட்டோ அல்லது வேன் கிடைத்துவிடும். அதுவும் போலீஸ்காரர்கள் கெடுபிடி இல்லாமலிருந்தால்.

உட்கார்ந்திருந்த சந்துரு மேல் யாரோ உராய்வது போல இருக்கவே, யாரென்று எரிச்சலுடன் பார்த்தான். மேலே உராய்ந்தவன் சந்துரு பார்த்ததும் ‘ ஈ ’ என்று இளித்துவிட்டு, “மேலே பட்டுச்சா சார்? மன்சிக்கோ, சார்” என்றான். சந்துருக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பரட்டை தலையும், லுங்கியும், நிரந்தரமாக அவன்மீது குடியேறிவிட்ட சாராய நெடியும். திடீரென்று சந்துருவுக்கு பயமாகிவிட்டது. இவன் பிக்பாக்கெட்டாக இருக்கலாமோ?

சந்துரு மேல் அவன் அடிக்கடி சாய்வதும் சந்துரு அவனைப் பார்த்து முறைப்பதும், அந்த ஆள் ‘ ஈ ‘ என்று இளிப்பதும் அடிக்கடி நிகழ்ந்தது. “கூட்டம் நெருக்குது, சாா. நின்னுகுனு வரவுடரானுங்களா பார் சார்” என்று சந்துருவை வேறு சப்போர்ட்டுக்கு அழைத்தான். ‘வேறு வழியில்லை’ என்று சந்துரு நினைத்துக் கொண்டான். ‘வேளச்சேரி வரும்வரையில் இந்த ஹிம்சையை பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்’. ஆனால் சந்துருவுக்குள் எச்சரிக்கை மணி இன்னமும் பலமாக அடித்தது.

அவன் பிக்பாக்கெட் என்பதும் அவனுடைய இன்றைய குறி தாான் தான் என்பதும் சந்துருவுக்கு உள்ளங்கையில் நெல்லிக்கனி போல எந்தவித சந்தேகமும் இன்றி புரிந்துவிட்டது. அவனிடம் இருந்து தப்பிப்பதில் தான் தன்னுடைய சாமர்த்தியம் இருக்கிறது என்று சந்துரு எண்ணிக் கொண்டான். நல்லவேளையாக இந்த பஸ் வேள்சசேரியோடு சரி. வழியில் இறங்கவேண்டும் என்றால் தான் எல்லோரையும் இடித்துக் கொண்டு இறங்கவேண்டும். பிக்பாக்கெட்காரர்களுக்கும் சுலபமான வேலை. ஆனால் வேளச்சேரியில் பஸ் நின்றதும் அனைவரும் இறங்கினால் போயிற்று, என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

அந்த ஆள் வழியில் எங்காது இறங்குகிறானா என்றால் அதுவும் இல்லை. அவனும் வேளச்சேரிவரை வருவான்போல. அல்லது ‘நாம் எங்கு இறங்குகிறோமோ பின்தொடர்ந்து இறங்குவான் போலும்’ என்று எண்ணும்போதே சந்துருவுக்கு வியர்த்துக் கொட்டியது. பஸ்ஸில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனதே தவிர குறையவில்லை. அந்த லுங்கி ஆசாமியும் அவன் நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை.

‘எல்லாம் என் போறாத காலம்’ என்று எண்ணிக்கொண்டான். ‘நேரம் வேறு தெரியவில்லை’. கடிகாரம் கட்டிய கையை கஷ்டப்பட்டு முன்கொண்டுவந்து இருந்த வெளிச்சத்தில் நேரம் பார்க்க முற்பட்டபோது, ஸ்ட்ராப் போடும் ‘பின்’ விட்டுப்போய் கைகடிகாரம் நல்லகாலம் சந்துரு மடியிலேயே விழுந்தது. “என்னா சார், வாட்ச் புட்டுக்கிச்சா?” என்றான் லுங்கி. “வாட்சி கெடையிலே ஒரூபா, ரெண்ரூபா குட்தியானா ‘பின்’ போட்டுத் தர்வான்” என்றான் லுங்கி மேலும் அவனாகவே. சந்துரு மனதுக்குள் ‘நேரம் சரியில்லை என்பார்களே, அது இதுதான் போலும்’ என்று எண்ணிக்கொண்டு கஷ்டப்பட்டு வாட்ச்சை தன்னுடைய இடது பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான். அது அவன் அப்பா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவன் வேலையில் சேர்ந்தபோது கொடுத்த வாட்ச். ‘என்னப்பா, இந்த காலத்தில் போய் இந்த டப்பா வாட்ச் கட்டியிருக்கே’ என்று நண்பர்கள் கிண்டலடித்ததப்போது கூட இந்த வாட்சை மாற்றத் தோன்றவில்லை சந்துருவுக்கு. கொஞ்சம் சென்டிமென்டான வாட்ச். ‘சம்பளத்தில் முதல் வேலையாக இதற்கு ‘பின்’ போட வேண்டும்’. பஸ் வேளச்சேரியை நெருங்கிக்கொண்டிருந்தது.

பஸ் வேளச்சேரியை அடைந்தது. அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த லுங்கி ஆளும் இறங்கியபிறகு, கடைசி ஆளாக சந்துருவும் இறங்கிக் கொண்டான். வலது பேண்ட் பாக்கெட்டில் தொட்டுப் பார்த்துக் கொண்டான். பர்ஸ் பத்திரமாக இருந்தது. பாதி கிணறு தாண்டிய திருப்தி சந்துருவுக்கு. அடுத்த பஸ்ஸுக்கு காத்திராமல் ஏதாவது ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போய்விட வேண்டியது தான். சற்று தூரமாக ஒரு ஆட்டோ. அதைநோக்கி நடந்தபோது, தற்செயலாக பின்னால் பார்த்தான். அந்த லுங்கி ஆள் சந்துருவின் பின்னால் வருவது தெரிந்தது. சந்துருவுக்கு குபீரென வியர்த்தது. கைகுட்டை எடுத்து வியர்வை வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்டான். வேகமாக ஆட்டோவை நோக்கி நடந்தபோது, அந்த லுங்கி ஆள், “சார், சார்” என்று கூப்பிடுவது கேட்டது. கேட்காதது போல சந்துரு ஆட்டோவை நெருங்கியபோது, எதிரில் வந்த ஒரு ஆள், “சார், உங்களைத்தான் அவர் கூப்பிடுகிறார் சார்” என்றார் கர்மசிரத்தையாக. சந்துரு திரும்பிப் பார்த்ததான். அந்த லுங்கி ஆள் நின்றுக்கொண்டு அழைப்பது தெரிந்தது.

பேண்ட் பாக்கெட்டில் பத்திரமாக இருந்த பர்ஸை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான் சந்துரு. ‘கத்தி, கித்தி காட்டி பணம் பிடுங்கப் போகிறானா?’ பஸ் ஸ்டான்ட் முழுவதும் நிறையப்பேர் இருப்பதால் லுங்கி இதுபோல செய்யத் துணியமாட்டான் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, லுங்கியைப் பார்த்தது “என்னப்பா என்ன வேணும்?” எ்னறான் சந்துரு குரலில் சற்று கடுமையைக் கலந்து. “இந்த வாட்ச் உன்னுதா பார், சார்” என்றான் லுங்கி ஆசாமி. அவனுடைய காலடியில் சந்துருவுடைய வாட்ச் இருந்தது. “நீ. கர்சீப் உறுவச்சொல்ல உயுந்திருக்கும் போல” என்று அவனுடைய ஊகத்தையும் சொன்னான்.

அமாம் அது சந்துருவின் வாட்ச் தான். “ரொம்ப தேங்ஸ்பா” சந்துரு குனிந்து அந்த வாட்சை எடுத்துக் கொண்டு, இதுவரை அந்த லுங்கி ஆசாமியை தப்பாக நினைத்ததற்கு மனதுக்குள் மிகப்பெரிய ‘சாரி’ சொல்லிக் கொண்டான். இந்த உயர்ந்த உள்ளத்தை ‘பிக்பாக்கெட்’ என்று முடிவு செய்ததற்காக மிகவும் வருத்தப்பட்டான் சந்துரு. இதற்குத்தான் ‘உருவத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்த லுங்கி ஆள் சந்துருவின் மனதுக்குள் மிகவும் உயர்ந்துப் போனான். லுங்கி ஆசாமி மனதுக்குள் உயரஉயர சந்துரு தன் மனதுக்குள் மிகவும் தாழ்ந்துப் போனான். ‘என்ன மனுஷன் நான். உருவத்தை பார்த்து எப்படி ஒரு ஆளை எடைப்போடலாம், சே!’

ஆட்டோவில் வீடு வரும்பரையில், அந்த லுங்கி ஆசாமியைத் தப்பாக நினைத்ததற்கு மனதுக்குள் மிகவும் வருந்தியபடியே வந்தான். அந்த ஏழ்மைநிலையிலும் சீலனாக விளங்கும் அவனை தப்பாக நினைத்ததற்கு மனதில் மறுகினான். நினைக்க நினக்க அந்த லுங்கி ஆள் சந்துர மனதுக்குள் மிகப் பெரிய மகானாகவே ஆகிப்போனான். இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவரே!

சந்துருவின் வீட வந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி காசு கொடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவன் தேள் கொட்டியதுபோல திடுக்கிட்டான்.

பேண்ட் பாக்கெட்டில் பர்ஸை காணவில்லை!

* * *

1 comment:

ஜயராமன் said...

மீண்டும் அழகான சிறுகதை.

லுங்கி ஆசாமியை வில்லனாக்கி விட்டீர்கள். இதுதான் எதிர்பாராத்து.

இந்த கதையின் முத்தாய்ப்பே இந்த சிடுக்குதான்.

நன்றாக மனதில் நிற்கிறது.

நன்றி