Sunday, April 30, 2006

தப்புக் கணக்கு

அலுவலகத்தை விட்டு மாலை வீட்டுக்குத் கிளம்பும்போ சந்துருவுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. இன்று மிகவும் பத்திரமாக வீடு போய் சேரவேண்டுமே என்று பலமுறை வேண்டிக்கொண்டான். காலையில் படித்த பார்த்த கேட்ட ராசிபலன்கள், இந்த நாள் எப்படி? ஆகியவை வேறு அவனை பயமுறுத்தின. தன்னுடைய பேண்ட் பாக்கட்டில் சம்பளப் பணம் பத்தாயிரம் இருந்த பர்ஸை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். பஸ்ஸில் பிக் பாக்கெட் கும்பல் சம்பள நாள் அன்று அதிகமாக இருக்கும். கைப்பையில் பணத்தை வைத்தால் அரைபிளேடால் கிழித்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள். தன்னுடைய பாண்ட் பையில் இருப்பதே பாதுகாப்பானது. உடம்பில் அந்த ஸ்பரிசம் இருந்துக் கொண்டே இருக்கும். நாமும் சற்று எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று சந்துருவுக்குத் தோன்றியது.

இன்றைக்கென்று பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருப்பது போல தெரிந்தது. உட்கார இடம் கிடைக்கும் பஸ்ஸுக்காக இரண்டு பஸ்களை தவறவிட்டான். அடுத்ததாக வந்த பஸ்ஸில் நல்ல வேளையாக உட்கார இடம் இருக்கவே அதில் ஏறி உட்கார்ந்துக் கொண்டான். சந்துருவின் போறாத காலம், அடுத்த ஸ்டாப்பிலேயே பஸ்ஸில் கூட்டம் அதிகமானது. அதற்கடுத்த ஸ்டாப்பில் இன்னும் கூட்டம் நெருக்கியடித்தது.

உட்கார்ந்திருக்கும் வரையில் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீடுவரை ஜாக்கிரதையாகப் போக வேண்டுமே என்று கலக்கமாக இருந்தது. சம்பளவாள் அன்று பணம் தவறவிட்ட கதைகளை எத்தனைமுறை படித்தும் கேள்விப்பட்டும் இருக்கிறான். இன்றைக்கென்ன நம்முடைய முறையா? ‘சே, சே! இருக்காது’ சந்துரு தலையை உதறிக் கொண்டான்
.
சந்துரு இருப்பது மடிப்பாக்கத்தில். அலுவலகத்தில் இருந்து இருபத்தினாலு கிலோமீட்டர். நேரிடையான பஸ் கிடையாது. சைதாப்பேட்டையிலோ அல்லது வேளச்சேரியிலோ பஸ் மாறி போக வேண்டும். எப்படியும் வீடு சென்றடைய இரண்டு மணிநேரம் ஆகிவிடும். இன்று கிடைத்தது வேளச்சேரி பஸ். பரவாயில்லை. அங்கிருந்து மடிப்பாக்கம் போக ஆட்டோ அல்லது வேன் கிடைத்துவிடும். அதுவும் போலீஸ்காரர்கள் கெடுபிடி இல்லாமலிருந்தால்.

உட்கார்ந்திருந்த சந்துரு மேல் யாரோ உராய்வது போல இருக்கவே, யாரென்று எரிச்சலுடன் பார்த்தான். மேலே உராய்ந்தவன் சந்துரு பார்த்ததும் ‘ ஈ ’ என்று இளித்துவிட்டு, “மேலே பட்டுச்சா சார்? மன்சிக்கோ, சார்” என்றான். சந்துருக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பரட்டை தலையும், லுங்கியும், நிரந்தரமாக அவன்மீது குடியேறிவிட்ட சாராய நெடியும். திடீரென்று சந்துருவுக்கு பயமாகிவிட்டது. இவன் பிக்பாக்கெட்டாக இருக்கலாமோ?

சந்துரு மேல் அவன் அடிக்கடி சாய்வதும் சந்துரு அவனைப் பார்த்து முறைப்பதும், அந்த ஆள் ‘ ஈ ‘ என்று இளிப்பதும் அடிக்கடி நிகழ்ந்தது. “கூட்டம் நெருக்குது, சாா. நின்னுகுனு வரவுடரானுங்களா பார் சார்” என்று சந்துருவை வேறு சப்போர்ட்டுக்கு அழைத்தான். ‘வேறு வழியில்லை’ என்று சந்துரு நினைத்துக் கொண்டான். ‘வேளச்சேரி வரும்வரையில் இந்த ஹிம்சையை பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்’. ஆனால் சந்துருவுக்குள் எச்சரிக்கை மணி இன்னமும் பலமாக அடித்தது.

அவன் பிக்பாக்கெட் என்பதும் அவனுடைய இன்றைய குறி தாான் தான் என்பதும் சந்துருவுக்கு உள்ளங்கையில் நெல்லிக்கனி போல எந்தவித சந்தேகமும் இன்றி புரிந்துவிட்டது. அவனிடம் இருந்து தப்பிப்பதில் தான் தன்னுடைய சாமர்த்தியம் இருக்கிறது என்று சந்துரு எண்ணிக் கொண்டான். நல்லவேளையாக இந்த பஸ் வேள்சசேரியோடு சரி. வழியில் இறங்கவேண்டும் என்றால் தான் எல்லோரையும் இடித்துக் கொண்டு இறங்கவேண்டும். பிக்பாக்கெட்காரர்களுக்கும் சுலபமான வேலை. ஆனால் வேளச்சேரியில் பஸ் நின்றதும் அனைவரும் இறங்கினால் போயிற்று, என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

அந்த ஆள் வழியில் எங்காது இறங்குகிறானா என்றால் அதுவும் இல்லை. அவனும் வேளச்சேரிவரை வருவான்போல. அல்லது ‘நாம் எங்கு இறங்குகிறோமோ பின்தொடர்ந்து இறங்குவான் போலும்’ என்று எண்ணும்போதே சந்துருவுக்கு வியர்த்துக் கொட்டியது. பஸ்ஸில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனதே தவிர குறையவில்லை. அந்த லுங்கி ஆசாமியும் அவன் நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை.

‘எல்லாம் என் போறாத காலம்’ என்று எண்ணிக்கொண்டான். ‘நேரம் வேறு தெரியவில்லை’. கடிகாரம் கட்டிய கையை கஷ்டப்பட்டு முன்கொண்டுவந்து இருந்த வெளிச்சத்தில் நேரம் பார்க்க முற்பட்டபோது, ஸ்ட்ராப் போடும் ‘பின்’ விட்டுப்போய் கைகடிகாரம் நல்லகாலம் சந்துரு மடியிலேயே விழுந்தது. “என்னா சார், வாட்ச் புட்டுக்கிச்சா?” என்றான் லுங்கி. “வாட்சி கெடையிலே ஒரூபா, ரெண்ரூபா குட்தியானா ‘பின்’ போட்டுத் தர்வான்” என்றான் லுங்கி மேலும் அவனாகவே. சந்துரு மனதுக்குள் ‘நேரம் சரியில்லை என்பார்களே, அது இதுதான் போலும்’ என்று எண்ணிக்கொண்டு கஷ்டப்பட்டு வாட்ச்சை தன்னுடைய இடது பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான். அது அவன் அப்பா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவன் வேலையில் சேர்ந்தபோது கொடுத்த வாட்ச். ‘என்னப்பா, இந்த காலத்தில் போய் இந்த டப்பா வாட்ச் கட்டியிருக்கே’ என்று நண்பர்கள் கிண்டலடித்ததப்போது கூட இந்த வாட்சை மாற்றத் தோன்றவில்லை சந்துருவுக்கு. கொஞ்சம் சென்டிமென்டான வாட்ச். ‘சம்பளத்தில் முதல் வேலையாக இதற்கு ‘பின்’ போட வேண்டும்’. பஸ் வேளச்சேரியை நெருங்கிக்கொண்டிருந்தது.

பஸ் வேளச்சேரியை அடைந்தது. அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த லுங்கி ஆளும் இறங்கியபிறகு, கடைசி ஆளாக சந்துருவும் இறங்கிக் கொண்டான். வலது பேண்ட் பாக்கெட்டில் தொட்டுப் பார்த்துக் கொண்டான். பர்ஸ் பத்திரமாக இருந்தது. பாதி கிணறு தாண்டிய திருப்தி சந்துருவுக்கு. அடுத்த பஸ்ஸுக்கு காத்திராமல் ஏதாவது ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போய்விட வேண்டியது தான். சற்று தூரமாக ஒரு ஆட்டோ. அதைநோக்கி நடந்தபோது, தற்செயலாக பின்னால் பார்த்தான். அந்த லுங்கி ஆள் சந்துருவின் பின்னால் வருவது தெரிந்தது. சந்துருவுக்கு குபீரென வியர்த்தது. கைகுட்டை எடுத்து வியர்வை வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்டான். வேகமாக ஆட்டோவை நோக்கி நடந்தபோது, அந்த லுங்கி ஆள், “சார், சார்” என்று கூப்பிடுவது கேட்டது. கேட்காதது போல சந்துரு ஆட்டோவை நெருங்கியபோது, எதிரில் வந்த ஒரு ஆள், “சார், உங்களைத்தான் அவர் கூப்பிடுகிறார் சார்” என்றார் கர்மசிரத்தையாக. சந்துரு திரும்பிப் பார்த்ததான். அந்த லுங்கி ஆள் நின்றுக்கொண்டு அழைப்பது தெரிந்தது.

பேண்ட் பாக்கெட்டில் பத்திரமாக இருந்த பர்ஸை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான் சந்துரு. ‘கத்தி, கித்தி காட்டி பணம் பிடுங்கப் போகிறானா?’ பஸ் ஸ்டான்ட் முழுவதும் நிறையப்பேர் இருப்பதால் லுங்கி இதுபோல செய்யத் துணியமாட்டான் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, லுங்கியைப் பார்த்தது “என்னப்பா என்ன வேணும்?” எ்னறான் சந்துரு குரலில் சற்று கடுமையைக் கலந்து. “இந்த வாட்ச் உன்னுதா பார், சார்” என்றான் லுங்கி ஆசாமி. அவனுடைய காலடியில் சந்துருவுடைய வாட்ச் இருந்தது. “நீ. கர்சீப் உறுவச்சொல்ல உயுந்திருக்கும் போல” என்று அவனுடைய ஊகத்தையும் சொன்னான்.

அமாம் அது சந்துருவின் வாட்ச் தான். “ரொம்ப தேங்ஸ்பா” சந்துரு குனிந்து அந்த வாட்சை எடுத்துக் கொண்டு, இதுவரை அந்த லுங்கி ஆசாமியை தப்பாக நினைத்ததற்கு மனதுக்குள் மிகப்பெரிய ‘சாரி’ சொல்லிக் கொண்டான். இந்த உயர்ந்த உள்ளத்தை ‘பிக்பாக்கெட்’ என்று முடிவு செய்ததற்காக மிகவும் வருத்தப்பட்டான் சந்துரு. இதற்குத்தான் ‘உருவத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்த லுங்கி ஆள் சந்துருவின் மனதுக்குள் மிகவும் உயர்ந்துப் போனான். லுங்கி ஆசாமி மனதுக்குள் உயரஉயர சந்துரு தன் மனதுக்குள் மிகவும் தாழ்ந்துப் போனான். ‘என்ன மனுஷன் நான். உருவத்தை பார்த்து எப்படி ஒரு ஆளை எடைப்போடலாம், சே!’

ஆட்டோவில் வீடு வரும்பரையில், அந்த லுங்கி ஆசாமியைத் தப்பாக நினைத்ததற்கு மனதுக்குள் மிகவும் வருந்தியபடியே வந்தான். அந்த ஏழ்மைநிலையிலும் சீலனாக விளங்கும் அவனை தப்பாக நினைத்ததற்கு மனதில் மறுகினான். நினைக்க நினக்க அந்த லுங்கி ஆள் சந்துர மனதுக்குள் மிகப் பெரிய மகானாகவே ஆகிப்போனான். இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவரே!

சந்துருவின் வீட வந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி காசு கொடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவன் தேள் கொட்டியதுபோல திடுக்கிட்டான்.

பேண்ட் பாக்கெட்டில் பர்ஸை காணவில்லை!

* * *

Saturday, April 29, 2006

காக்கைகள்

“மீனாட்சி... மீனாட்சி...”

பூஜையில் இருந்த சங்கரைய்யர் குரல் கொடுத்தார். மீனாட்சிக்கு அவர் அழைப்பதற்கான காரணம் தெரியும். பூஜை அறையும் சமையலரையும் பக்கம் பக்கத்தில். ஜன்னலின் வெளியே பார்த்தாள். எப்போதும்போல காக்கைகள் அருகில் இருந்த மரத்தில் உட்கார்ந்திருந்தது..

“மீனாட்சி... மீனாட்சி...” மீண்டும் சங்கரைய்யர் இரைந்தார்.

“இதோ வரேன்னா” மீனாட்சி பூஜை அறைக்கு விரைந்தாள்.

“பாத்தியா மீனாட்சி. எப்போதும்போல நான் பூஜை ஆரம்பிச்சதும் இந்த காக்கைகள் வந்துட்டது” சங்கரைய்யர் குரலில் ஒரு பரவசம் தெரிந்தது.

மீனாட்சி ஆமோதித்தாள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. தினம் பூஜை ஆரம்பித்ததும்
சங்கரைய்யர் காக்கைகளை பார்த்துவிட்டு குரல் கொடுப்பார். இது அவர் தினமும் சிலாகிக்கும் நிகழ்ச்சி. இந்த காக்கைகள் வருவது அவருடைய பூஜாபலன் என்கிற அசையாத நம்பிக்கை.

சில சமயம் சங்கரைய்யர் அழைக்கும் போது மீனாட்சி கைக்காரியமாக இருப்பாள். சட்டென வர இயலாமல் உள்ளிருந்தே குரல் கொடுத்தாள் போச்சு. பிலுபிலுவென பிடித்துக்கொள்வார்.
“காக்கா தானேன்னு அலட்சியமா நினைக்காதேடி, மீனாட்சி. காக்காக்கள் எல்லாம் நம்மோட பித்ருக்கள். சனீஸ்வரன் வாகனம் மட்டுமில்லேடி, விநாயகனும் அதுதான். காக்கா இல்லேன்னா நமக்கு காவேரி ஏதுன்னேன்?”

இதற்குத்தான் என்ன கைக்காரியமாக இருந்தாலும் போட்டுவிட்டு மீனாட்சி ஓடிவருவாள்.

“எனக்கும் இந்த காக்காக்களுக்கும் ஏதோ பந்தம் இருக்குபோல. இப்படி ஒரு நாளா இரண்டு நாளா இத்தனை வருஷம் இந்த காக்காக்கள் வருதுன்னா, ஏதோ ஒரு விட்டகுறை தொட்டகுறை இருக்குடி”

இந்த காக்கைகள் மூலமாக தன்னுடைய ஜபங்கள் இறைவனை அடைவதாக நம்பினார். சில நாள் இந்த காக்கைகள் வர சற்று நேரமானாலும் மிகவும் நிலைக்கொள்ளாது போவார். பூஜைமீது நாட்டம் குறைந்து போகும்.

சிலசமயம் சங்கரைய்யர் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்.
“என்னோட ஜன்மம் அடங்கினால் தான் இந்த காக்கா வரது நிக்கும்” என்றார் ஒருநாள். மீனாட்சிக்கு பகீலரன்றது.
“ஏன்னா இப்படி அச்சானியமா பேசரேள்?” என்றாள் அழமாட்டாகுறையாக.
“இவை வெறும் காக்காக்கள் இல்லேடி. நம்ப பந்துக்கள். நம்ப பந்துக்களைத் தேடி நான் போனா அவை ஏன் என்னத்தேடி இங்கே வரணும்?”
மீனாட்சி அவருடன் தர்க்கம் பண்ண தைரியம் இல்லாமல் விலகிப் போவாள். தர்க்கத்துக்கு சளைக்காதவர். இறுதியில் மனசை கலங்கடித்துவிடுவார்.
சங்கரைய்யருக்கும் இந்த காக்கைகளுக்கும் உள்ள உறவு சொல்லி மாளாது!

அன்று இரவு படுக்கும்போ சங்கரைய்யருக்கு கடும் காய்ச்சல்.. டாக்கரிடம் போவது மட்டும் அவருக்கு பிடிக்காத விஷயம். என்னத்தான் உடம்பு படுத்தினாலும் டாக்டரிம் போவதற்குமட்டும் உடன்படமாட்டார். இத்தனைவருஷம் அவர் டாக்டரிடம் எதற்காகவும் போனதில்லை.

“ஏன்னா, டாக்டரை வரச்சொல்லட்டா?” மீனாட்சி விம்மினாள்.
“துளசி தீர்த்தத்துக்கு மிஞ்சிய டாக்டர் உண்டா என்ன? இந்த உடம்புக்கெல்லாம் ஒன்னும் ஆகா பயப்படாதேடி, மினாட்சி”
“இல்லேன்னா, உடம்பு இந்த கொதி கொதிக்கிறதேன்னா”
“நன்னா படுத்து எழுந்தா சரியாயிடும்டி”

சரியாகவில்லை. ராத்திரி பூராவும் சங்கரைய்யர் அனத்திக்கொண்டே இருந்தார். ஜுரம் எந்த துளசி தீர்த்ததுக்கும் கட்டுப்படாமல், உடம்பு கொதித்துக்கொண்டே இருந்தது. மீனாட்சி அவர் படுக்கை பக்கத்திலேயே தூங்காமல் உட்கார்ந்து மிகவும் சோர்ந்துப் போனாள்.

விடிந்தும் விடியாததுமாக சங்கரைய்யர் எழுந்துக் கொண்டார். இன்னமும் உடம்பு சூடாகத் தான் இருந்தது.

“பூஜைக்கு எல்லாம் எடுத்து வையடி. நான் குளிச்சிட்டு வந்துடரேன்” அவரால் திடமாகக்கூட பேச இயலவில்லை. இடையிடையே இருமல் வேறு.

மீனாட்சி பயந்துப் போனாள். “வேணாம்னா. இன்னைக்கு பூஜை பண்ணலேன்னா பரவாயில்லைனா” என்ற அவளைப்பார்த்து அந்த ஜுரத்திலேயும் ஒரு முறை முறைத்தார்.

“குளிச்சிட்டு வரேன். எல்லாம் எடுத்து வை” என்றார் ஆணித்தரமாக.

"பச்சத் தணிணிலேயா குளிக்கப்போறேள். உங்களுக்கு்தான் உடம்பு சரியில்லையே. நான் கொஞ்சம் வென்னி வெச்சுத்தரேன்னா” மீனாட்சி கெஞ்சினாள்.

“பிராமணனுக்கு பச்சதண்ணி ஆகாதுன்னு சொன்ன மொத ஆள் நீதான்” சங்கரைய்யர் குளிக்கச் சென்றுவிட்டார்.

சங்கரைய்யர் குளித்துவிட்டு வரும்போது உடம்பு அளவுக்கு அதிகமாக நடுக்கமாக இருந்தது. நடக்கக்கூட சற்று தள்ளாடினார். மீனாட்சி எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டாள்.
சங்கரைய்யர் பூஜை செய்துக்கொண்டிருக்க, அருகில் மீனாட்சி கண்களை மூடிக்கொண்டு அவருக்கு குணமாக பிராத்தித்துக் கொண்டிருந்தாள்.

சற்றேரக்குறைய அரைமணி நேரம் கழித்து சங்கரைய்யர் “ மீனாட்சி” என்று பலவீனமாக கூப்பிட்டார். அருகில் இருந்த மீனாட்சி மிகவும் பயத்தில் இருந்தாள். “என்னன்னா” என்றாள். அவள் குரல் மேலெழும்பவில்லை.

“இன்னிக்கு ஒரு காக்காகூட வரலை பாத்தியா?” சங்கரைய்யர் அப்படியே கண்கள் நிலைகுத்த தரையில் சரிந்தார்.

மீனாட்சிக்கு பகீரென்றது.

தினமும் காக்கைக்கு வைக்கும் கவளம் சாதம் சமையலறை ஜன்னலில் இன்றைக்கு வைக்காதது ஞாபகம் வர தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

***

Wednesday, April 26, 2006

ஹைகூ

 ஹைகூ (ஹை கூமுட்டை! என்றும் சொல்வதுண்டு)

அம்மாவை அந்தரத்தில்
தொங்கவிட்டனர் தொண்டர்கள்
தோரணத்தில்...

அம்மாவும் கலைஞரும்
அருகருகே சிரித்தபடி
படக்கடையில்...  

பூட்டிய கோவிலுக்குள்
காக்கும் கடவுள்
வெளியே காவலாளி!




Monday, April 24, 2006

HOPE

 Little Drops of Tear
Has the world within
When it trickles down
And then
Crumbles to ground...

மாற்றம் - சிறுகதை

 “நான் நானாக இல்லை - நிஜம்தான்
நீ, நீயாகத்தான் இருக்கின்றாயா?
மாறிவரும் இவ்வுலகில்,
நிதமும் மாறும் எல்லாவற்றிலும்
நான், நானாக இருப்பதும்
நீ, நீயாக இருப்பதும்...”

மாற்றம்

     சந்துரு உட்கார்ந்திருந்துது தூரத்தில் வரும்போதே தெரிந்தது. நான் புடவை தடுக்க நடையை எட்டிப்போட்டேன். ‘எவ்வளவு நேரமாக உட்கார்ந்திருந்தானோ?’
     “ஸாரி சந்துரு, கொஞ்சம் லேட்டாயிடுச்சு”
     “கொஞ்சம் இல்லை. நிறையவே லேட். இருந்தாலும் பரவாயில்லை”
    என் சந்துருவிடம் பிடித்ததே இதுதான். எப்பவும் கோபமே வராது அவனுக்கு. என்னிடம் மட்டுமல்ல. யாரிடமும் அவன் கோபத்தோடு பேசி பார்த்ததில்லை.
     “ஏன் சந்துரு, உனக்கு கோபமே வராதா?”
“ஏன் கோபப்படணும்? அட் த மோஸ்ட் வருத்தப்படலாம். கோபப்படும்போது அடுத்தவரை பாதிக்கிறோம். வருத்தம் நம்மை மட்டுமே பாதிக்கும். என்னைப் பொருத்தவரையில் அடுத்தவரை பாதிக்கிற உரிமை யாருக்கும் இல்லை. அவ்வளவுதான். ஆனால் எனக்கும் கோபம் வரும். அதை கத்தித்தான் தெரியப்படுத்தனும்றது இல்லை”

  சந்துரு நன்றாகப் படித்தவன். அவன் பேசும் நிறைய விஷயங்கள் எனக்குத் தெரிவதில்லை. அவன் படிக்கும் புத்தகங்கள் பார்க்கும் சினிமாக்கள் எதுவும் எனக்குப் புரிவதில்லை. இருந்தாலும் அவன் பேசுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவனுடைய கவிதைகள் பிடிக்கும். சந்துருவுக்கு எல்லாமே கவிதைதான். இந்த கடலும் சரி, கடலை விக்கிற பையனும் சரி. யோசித்துப் பார்த்ால் அவனிடம் எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது.

   நாங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சந்திப்பதாக எங்களுக்குள் ஒப்பந்தம். அதுவும் என்னால் தான். நான் ினமும் சந்துருவை சந்தித்துவிட்டு வீட்டுக்கு லேட்டாகப் போக முடியாது. என் அப்பாஈ அண்ணனின் சந்தேகத்துக்கு ஆளாக முடியாது. சந்துருவை சந்திக்கும் என்னுடைய இந்த சின்ன சந்தோஷத்தையும் இழக்க நான் தயாராக இல்லை. என் வீட்டு சகதியை சந்துருவின் மேல் பூச தைரியம் இல்லை. என் வீட்டுக்கு தெரியும் போது தெரியட்டும்.

    நான் சந்துருவிடம் என்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். சந்துருவுக்கு எல்லாம் தெரியும். என் சம்பளத்தை நம்பியிருக்கும் என் குடும்பத்தைப் பற்றி, சொற்ப சம்பளம் வாங்கும் என் அப்பாவைப் பற்றி, சமையலறையே கதி என்றிருக்கும் என் அம்மாவைப்பற்றி, பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் என் அண்ணனைப் பற்றி, பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் என் தம்பியைப் பற்றி...

    சந்துரு ரொம்பவும் நல்லவன். அவனுக்கு என்னைப் பற்றிய கவலை நிறைய உண்டு. ஆனால் வெளிக்காட்ட மாட்டான். நாங்கள் சந்திக்கும்போதுகூட நேரமாகிவிட்டடால் எனக்கு நினைவூட்டுவான். என் மேல் தன் விரல்நுனிகூட படாமல் தான் பழகுவான். சில சமயம் நானே அவன் என்னைத் தொடமாட்டானா என்றுகூட வெட்கத்தைவிட்டு ஏங்கியிருக்கிறேன். ஊர்உலகத்தில் இருக்கும் காதலர்கள் போல் ஒரு சினிமா இல்லை, பார்க் இல்லை. இந்த கடற்கரைகூட என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது என்பதால் தான்.
நாங்கள் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்து நிறைய பேசியிருக்கிறோம். சந்துருவுக்கு ஆசைகள் அதிகம் இல்லை. ஒரு வீடு, வேலைக்குப் போகாத நான். இரண்டு குழந்தைகள். (“ஒரே குழந்தை என்றால் மிகவும் பிடிவாமாக வளரும். இரண்டு குழந்தைகள் என்றால் விட்டுக் கொடுக்கும் மனோபாவம் இருக்கும்” என்பான்.) காலையில் வேலைக்குப் போய் சாயுங்காலம் வரும் சந்துரு. இரவு தூக்கம் வரும் வரையில் மொட்டை மாடியில் பேச்சு. (“ஏதாவது பேசணும். உன்னுடைய உணர்வுகள், என்னோட கவிதைகள், குழந்தைகள் வளர்ப்பு... இப்படி ஏதாவது பேசணும். பேச்சுக்கூட முக்கியமில்லை. நானும் நீயும் அருகருகே இருக்கணும். நம் மனங்கள் மட்டும் பேசணும். அதுதான் முக்கியம்”)

     “என்ன வந்ததிலிருந்து ஏதோ யோசனை?”
     “ஒன்றுமில்லை. நம்மைப்பற்றி யோசித்தேன்”
     “எப்படி இதெல்லாம் முடியப்போகிறதோ என்றா?”
     நான் பேசாமல் தலையாட்டினேன்
     “கவலைப்படாதே. நாம் கவலைப்பட்டு ஏதும் ஆகப்போறதில்லை. அதது நடக்கும்போது நடக்கட்டும்”
    நான் ஏன் லேட்டாக வந்தேன் என்பதை அவன் கேட்காமலே கூறினேன்.
   “கடங்கார ஆபீஸர். கிளம்பும் போதுதான் போன வருஷ டீடெயில்ஸ் எல்லாம் வேண்டும்னார். அவசரஅவசரமாக எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.”
“சரி விடு அவருக்கு என்ன ப்ரஷரோ”
அப்புறம் சந்துரு அவன் படித்த புத்தகத்தைப் பற்றி, வாசித்த கவிதைகளைப் பற்றி,,, சந்துருவுக்கு பேச நிறைய விஷயங்கள் இருந்தன. நான் எப்போதும்போல மக்குப் பண்டாரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சந்துரு பேசும் போது அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னைப் பொருத்தவரையில் மிகவும் சுவாரசியமான விஷயம்.
“உனக்கு நேரமாகல்லே?”
மணியைப் பார்த்தேன். நேரமாகிவிட்டது தான்.
“சரி சந்துரு. நான் கிளம்பறேன். புதன் கிழமை பார்க்கிறேன்” அவனைவிட்டுப் பிரிவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

திடீரென்று மறுநாள் சந்துருவிடம் இருந்து போன். சந்துரு எப்போதாவதுதான் இப்படி போன் பண்ணுவான். கேட்டால் பேசவேண்டும் போல இருந்தது என்பான்.
‘என்ன சந்துரு?”
இன்றைக்கு பர்மிஷன் போட்டுட்டு வரமுடியுமா?”
“என்ன சந்துரு, என்ன விஷயம்?”
“நீ வாயேன். சொல்றேன்”
வழக்கம் போல நான் போகும் முன்னர் சந்துரு காத்திருந்தான்.
“என்ன சந்துரு, என்ன விஷயம்?”
“பிரிட்டிஷ் கெளன்ஸிலில் எனக்குப்பிடித்த டைரக்டரின் படம். பிரத்தியேக ஷோ. ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்தப் படம். ரொம்ப கஷ்டப்பட்டு, அலைந்துத் திரிந்து இரண்டு டிக்கட் வாங்கினேன். எனக்கு உன்னோட அந்தப் படத்தைப் பார்க்கணும்னு ஆசை. உன்னிடம் இந்த கதையை விளக்ககணும். விவாதிக்கணும். டைரக்க்ஷனைப் பற்றி பேசணும். நான் ரொம்ப எதிர்பார்த்ப் படம்பா. ப்ளீஸ்.”

சந்துரு எப்போதும் இப்படி என்னை கெஞ்சியதில்லை. எதற்காகவும், எப்போதும். ஆணால் என்னால் சந்துருவுடன் சினிமா போக முடியாது. போய்விட்டு வீட்டுக்கு லேட்டாகப் போய் எல்லோருக்கும் பதில் சொல்ல என்னால் முடியாது. பத்தாவது படிக்கும் தம்பிகூட என்னை கேள்வி கேட்பான். எங்கள் வீடு ஒரு ஆண்கள் கூடாரம். பெண்களுக்கு எ்னறு தனித்த உணர்வுகள் உரிமைகள் இல்லை.

“இல்லை சந்துரு. என்னால் வர முடியாது”
சந்துருவின் முகம் வாடிவிட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் என்னால் அவனுடன் சினிமாவுக்கு போக முடியாது. என்மேல் எனக்கே வெறுப்பாக இருந்தது. என்ன செய்ய?
“இந்தப் படம் உன்னுடன் பார்க்கவேண்டும் என்பது என்னோட கனவு தெரியுமா? இங்கிலீஷ் படம். சீக்கிரம் முடிந்துவிடும்.”
“எத்தனை மணிக்கு?”
“ஒன்பதரை மணிக்கு” என்று சொல்லும்போதே சந்துருவுக்கு நான் வரஇயலாது என்பது புரிந்துவிட்டது.
“சரி, நீ விட்டுக்கு கிளம்பு”
“இல்ல சந்துரு, இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்.” என்றேன் கெஞ்சலாக.
“வேணாம்டா. எனக்கு மனசு சரியில்லை. நீ கிளம்பு. உன்னை பஸ் ஏற்றிவிட்டு நானும் கிளம்பறேன். இங்க இருந்தா இன்னும் மனசு கஷ்டமாயிடும்.”

எனக்கு என்மேலேயே எரிச்சல் வந்தது. என்ன ஜென்மம் நான்? ஒருவரையும் சந்தோஷப்படுத்தாத, சந்தோஷப்படாத ஜென்மம்! சந்துரு என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். நான் நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தேன். சந்துருவின் வாடின முகம் என்னை மிகவும் ஹிம்ஸை படுத்தியது. அன்று இரவு நான் தூங்கவில்லை. சந்துரு தனியாகவாவது அந்த சினிமா போயிருப்பானா? என்னையே நான் வெறுத்தேன்.

மறுநாள் புதன்கிழமை. காலையிலிருந் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. பார்த்தவுடன் சந்துருவிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். சாயுங்காலம் எப்போது வரும் என்று மனம் ஏங்கியது. சந்துரு அவனுக்குப் பிடித்த அந்தப் படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவன் சிறிதளவாவது சந்தோஷம் பெற்றால எனக்கும் சந்தோஷம். மாலையானதும் அரக்கப் பரக்க கடற்கரைக்கு ஓடினேன். எனக்கு முன்னால் சந்துரு வழக்கம்போல வந்து காத்திருந்தான்.
“ஸாரி சந்துரு.” என்றேன் குற்ற மனப்பான்மையுடன்.
“எதுக்கு ஸாரி?”
“நேற்று என்னால் வரமுடியாததற்கு. அந்தப் படம் எப்படி இருந்தது?”
“நான் போகலைடா. தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலை”
“ரொம்ப நாளா காத்திருந்த படம்னு சொன்னியே சந்துரு” எனக்குள் அழுகை வெடித்தது.
“இல்லைடா, தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலைடா” என்றான் என்னை இதமாக பார்த்துக்கொண்டு.
எனக்குள் குற்ற மனப்பான்மை குறுகுறுத்தது.
திடீரென முடிவெடுத்தேன். நான் இனிமேல் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன ஆனாலும் சரி. நான் என் சந்துருவுக்காகவே வாழப்போகிறேன்.
“இனிமேல் இதுபோல படம் பார்க்கணும்னா சொல்லு சந்துரு. நான் வரேன். இரவு காட்சியானாலும் சரி”

***



Sunday, April 23, 2006

BAKthavatchaluSAvithri



என்னுடைய தந்தையும் தாயும்.  என் அப்பாவிடம் நினைவு தெரிந்த நாள் முதல் பேசிய வார்த்தைகள் இருகை விரல்களில் எண்ணிவிடலாம்... அவருக்கு
48வது வயதில் paralitic stroke வந்த போது நான் 9வது படித்துக்கொண்டிருந்தேன்.  அரைகுறை படிப்போடு வேலையில் சேர்ந்து... அப்பா 13 வருடங்கள்  61வது வயது வரை அவர் பாரிசவாய்வுடன் இருந்தார் 1981 ஆண்டு மே 21 வரை.
அப்பாவை விதி தாக்கியபோது,  அம்மாவுக்கு வயது 43.  அன்றிலிருந்து ஒரு தியாகி வாழ்க்கை 2005 ஜுன் 7ல் விதி அம்மாவை என்னிடம் இருந்து பிரித்தவரையில்.  
எனக்கு இப்போது வயது 49.... அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.  அம்மாவையும் அப்பாவை இப்போது நினைக்கும் போதும்...
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் நெஞ்சார்ந்த நமஸ்காரம்...
உங்களை நான் சேரும் வரையில் என்னுடனே இருங்கள்.

 Posted by Picasa

Saturday, April 22, 2006

எதை நோக்கி இந்த ஓட்டம்?

 இப்போதைய இளைஞர்களை நினைத்தால் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எனக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொறியியல் கல்லூரியில் மகன் இருக்கிறான். எப்போதும் எதை நோக்கியோ ஓட்டம். உடல் நலக்குறைவானால் கூட காலை 700-730க்குள் கல்லூரி தாளாளரை தொலைபேசி அனுமதி வாங்க வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கமுடியாது. ஒரு நாள் welding class சென்று கண்வலியோடு வந்தான். என்ன சொல்லியும் கேட்காமல் மறுநாள் அதே வலியுடனும் கண் எரிச்சலுடனும் கல்லூரி சென்றான். எனக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. எதை நோக்கி இந்த ஓட்டம். நாற்பது வயதில் முதுமை அடைவதற்கா? யாரேனும் புரியவைத்தால் தேவலை.


அன்புள்ள மாலனுக்கு

 அன்பு திரு மாலன் அவர்களுக்கு
என்னை நீங்கள் நினைவில் கொள்ள நியாயம் இல்லை. ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களிடமிருந்து கடிதம் பெற்ற பாக்கியவான் நான். அப்போது நீங்கள் திசைகள் ஆரம்பித்த புதிது. நான் 23 வயது இளைஞன். திசைகளில் பங்குபெற வேண்டி என்னுடைய குறிப்பேட்டின் ஒரு பக்கத்தையும், எழுதிய (கிறுக்கிய?) கவிதையையும் உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அந்தக் குறிப்பேட்டின் பக்கத்தில் "ஒரு துடிப்பான இளைஞன் ஏன் ஒடுங்கிப் போனான் என்று யாரும் யோசிக்கப் போவதில்லை" என்று குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் உங்கள் கைப்பட எழுதிய அந்த 2 பக்க கடிதத்தில், "துடிப்பான இளைஞன் ஏன் ஒடுங்கிப்போனான் என்று நான் யோசிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த கடிதம் கிடைத்த அன்றைய முன்தினம் இரவுதான் என் அப்பா மரித்திருந்தார். என் துக்கத்தையும் மீறி கடிதம் பெற்ற சந்தோஷம். அவ்வளவுதான். அவ்வபோது என்னுடைய வடிகாலுக்காக நான் கவிதையையும் கட்டுரையையும் கதையையும் எழுதிதானும் பதிப்புக்கு அனுப்புவதில்லை. சமீப காலத்தில் வலைப்பூக்களில் என்னுடைய படைப்புக்களையும் http://baksa.blogspot.com தமிழில் வெளிப்படுத்த உத்தேசித்து இணையத்தில் தேடியபோது என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! திசைகள் இணையத்தில்!! 2 ஆண்டுகளாக வந்துக்கொண்டிருக்கிறதா! நானும் பங்குபெற ஆசை. மீண்டும் திசைகளோடு தொடர்பு கொள்ள மிக்க ஆசையுடன்.
சந்துரு



யூனிகோட் தமிழ் யாஹுவில் சரியாகத் தெரிய

 நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு யூனிகோட் தமிழ் ஏன் யாஹுவில் சரிவர தெரிவதில்லை என்பதற்கு விடை கிடைத்துள்ளது என்றே நான் நம்புகிறேன். எனக்கும் முதலில் சரியாகத் தெரியாமல் தான் இருந்தது. பிறகு சரிபார்த்ததில் ( IE/OPERA/MOZILLA FireFox)  பிரெளஸரில்  default ஆக encoding western european ISO என்றிருக்கக் கண்டேன். அதை UTF-8 என மாற்றியதும் எனக்கு யாஹு உ.கை.நெ.கனியாக தெரிகிறது. நீங்களும் செய்து பார்க்கலாம்.

Saturday, April 15, 2006

மாற்றம்

நான் நானாக இல்லை - நிஜம் தான்
நீ நீயாகத் தான் இருக்கின்றாயா?
மாறி வரும் இவ்வுலகில்
நிதமும் மாறும் எல்லாவற்றிலும்
நான் நானாக இருப்பதும்
நீ நீயாக இருப்பதும்...

Wednesday, April 12, 2006

அப்பா

 ஊனும் உதிரமுமாய், உயிரும் உணர்வுமாய் கலந்திட்ட என் தந்தைக்கு...


    தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது. வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டிவிட்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். ஹாலில் படித்துக்கொண்டிருந்த தங்கை உள் அறையைக்காட்டி, “அப்பா” என்றாள் சன்னமாக.

   உள்அறையில் அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்ருந்தார். சமையலறையில் அம்மா. "கைகாலை அலம்பிண்டு வாடா, சாப்பிடுவே” என்றாள். அவன் "சரி" என்றான்.

“அப்பா?”
“எல்லோரும் சாப்பிட்டாச்சு. நீயும் சாப்பிட்டு முடிச்சியானா, சமையல்கட்டை ஏறக்கட்டணும்” என்றாள்.

சாப்பிடும்போது கேட்டான். “அப்பாகிட்ட சொல்லிட்டியாம்மா?”
“அவர் வந்தபோதே சொல்லிட்டேன். சரின்னார். நீயும் அவர்கிட்டசொல்லிடு” என்றாள் அம்மா. தலையாட்டினான். மெளனமாக சாப்பிட்டுவிட்டு, தட்டை அலம்பிவைத்துவிட்டு, அப்பா இருந்த அறைக்குள் வந்தான். அப்பா இன்னமும் படித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா என்று மெதுவாகக் கூப்பிட்டான். அவர் படிப்பதை நிறுத்திவிட்டு ஏறிட்டுப் பார்த்தார்.

“நாளைக்கு ஒரு இன்டர்வியூ போகனும்பா” என்றான் மெதுவாக.

அப்பா ‘சரி’ என்பதுபோல ஆமோதித்துவிட்டு, புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தார். மெல்ல அங்கிருந்து நகர்ந்தான். ஹாலில் தங்கை படித்துக் கொண்டிருந்தாள். நாளைக்கு ஏதோ பரீட்சை போல. சமையலறையில் அம்மா அலம்பிவிட்டுக்கொண்டிருந்தாள். மறுநாள் வெள்ளிக்கிழமை என்பது ஞாபகம் வந்தது.

மெதுவாக பின்கட்டுக்கு வந்து துவைக்கிற கல் மேல் உட்கார்ந்துக்கொண்டான். யோசித்துப் பார்த்ததில்ஈ நாளைக்குப் போவது ஒன்பதாவது இன்டர்வியூ. முதல் இன்டர்வியூவில் இருந்த பரபரப்போ அல்லது நம்பிக்கையோ துளியும் இப்போது இல்லாமல் இருந்தது. அம்மாதான் பாவம். ஒவ்வொருமுறையும் அத்தனை நம்பிக்கையோடு இன்டர்வியூக்கு அனுப்புவாள். அதேபோல, தேராமல் போணாலும் அதே வாத்சல்யத்தோடு ஆறுதல் சொல்வாள்.
“இது போனா போறதுடா. உனக்கு பகவான் நல்ல வேலையா நினைச்சுண்டிருக்கார். அதுதான் இதெல்லாம் தள்ளி போறது” என்பாள்.

நன்றாகவே தெரியும். சிலசமயம், இதுபோல எத்தனைமுறை இன்னமும் சொல்லப் போகிறாள் என்றுகூட நினைத்துக் கொள்வான்.

அப்பா... அவர் எப்போது வேலைக்குப் போவார்? எப்போது வருவார்? என்று தெரியாது. அவர் இரயில்வேயில் கார்டு. ஆனால் ஒன்று கவனித்திருக்கிறான். தேவையானபோது அவர் எப்போதும் வீட்டில் இருந்திருக்கிறார். வேலைக்குப் போய்வந்தாரென்றால், இந்த சாய்வு நாற்காலியும் புத்தகங்களும் தான்...
ஒவ்வொருமுறை இன்டர்வியூ போகுமுன்னரும் அப்பாவிடம் இதுபோலத்தான். அவருக்கு எல்லாம் முன்னமே தெரிந்திருக்கும். அம்மா சொல்லியிருப்பாள். இவன் சொல்லும்போதும் பேசாமல் கேட்டுக்கொள்வார். அவ்வளவுதான். மறுநாள், அம்மா இவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து, “அப்பா கொடுக்கச் சொன்னாருடா” என்பாள். இன்டர்வியூ போவதற்கு சட்டைபேண்ட் எல்லாம் அயர்ன் செய்து வைத்திருப்பாள்.

“இந்த தடவை உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கப்போறது பாரேன்” என்பாள். இந்த தடவை, இந்த தடவை என்று எத்தனை தடவை......

யோசித்துப் பார்க்கையில், அப்பா இவனிடம் பேசியதுண்டா எ்னறு ஆச்சரியமாக இருந்தது. +2வில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியபோதுக்கூட, அவர் ஏதும் பேசாமல் இவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். அவ்வளவுதான். பள்ளியில் ப்ரேயர் ஹாலில் மொத்த பள்ளிமாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் பாராட்டியபோதுகூட ஏற்படாத மகிழ்ச்சி அப்பா தட்டிக்கொடுத்தபோது ஏற்பட்டது.

அப்பா இவனிடம் பேசியதில்லையே தவிர, அவரது எண்ணங்கள் எல்லாவற்றையும் இவன் அறிந்தே இருந்தான். அம்மாவிடம் கூட அப்பா பற்றி விவாதித்திருக்கிறான்.

“ஏம்மா, அப்பா என்னிடம் ஏதும் பேசமாட்டேங்கிறார்?”

அப்பாவைப்பற்றி அறிந்துக்கொள்ள இவனுக்கு வயது போதாதென்றாள். “உங்கப்பா ஒரு ஞானிடா” என்றாள்.

“இல்லேமா, அவர் என்னிடம் பேசினால் எத்தனையொ விஷயங்களை நான் தெரிந்தக்கொள்ளலரம் இல்லையா?” என்று வாதிட்டிருக்கிறான்.

“ஏண்டா வாய்வார்த்தையாய் பேசினால் தானா? அவரப்பற்றி உனக்கு எதுடா தெரியாது?” என்று சிரித்திருக்கிறாள்.

உண்மைதான். அப்பாவிடம் வார்த்தையாய் பேசவில்லையே தவிர, அப்பாவைப்பற்றி எல்லாமே தெரிந்திருந்தது. அவர் பழக்க வழக்கங்கள், அவர் படிக்கும் புத்தகங்கள், அவரது எண்ணங்கள்... அம்மாகூட ஞானி என்று தோன்றியது. அப்பாவுக்கு வெளியில் நல்ல மரியாதை. சிடுமூஞ்சியாக எல்லோரையும் எடுத்தெரிந்து பேசும் ஸ்டேஷன் மாஸ்டர் கந்தசாமிகூட ஒருமுறை, “நீங்க கேவி சாரோட ஸன்னுங்களா?” என்று மரியாதையொடு கேட்டது ஞாபகம் வந்தது.

அம்மா எப்போதும் சொல்வாள். ‘அப்பாவோட பழக்கவழக்கங்கள் பிள்ளைகள் மீது பாயும்’ என்பாள். உண்மைதான். சிலசமயம் தனக்கு அப்பா போ குணநலன்கள் வந்து விட்டதாகத் தோன்றும். யாராவது பித்துக்குளிபோல பேசினால் சிரிப்பு வரும். யோசித்துப் பார்த்தால், அப்பா மேல் இருப்பது பயமில்லைஈ மரியாதை. அதையும் தாண்டி பக்தி என்பதாகப் பட்டது. வெளியே மிகவும் சில்லென்றிருந்தது. இரவு மழை பெய்யும் போல.

“சீக்கிரம் வந்து படேன்டா. நாளைக்கு இன்டர்வியூ போகனும்னு சொன்னீயே” எ்னறு அம்மா குரல் கொடுத்தாள். பின்கதவை அடைத்துவிட்டுப் போய் படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை.

ஒருமுறை இப்படி வேலைக்கிடைக்காத விரக்தியில், ஓட்டல் ஒன்றில் க்ளீனர் வேலைக்காவது போக முடிவெடுத்து, அப்பாவிடம் சொன்னான்.
“அப்பா, நம்ப ராமசுப்பைய்யர் மெஸ்ஸில் வேலைக்குச் சொல்லியிருந்தேன். நாளைக்கு வரச்சொன்னார்”
அப்பா சரேலென்று ஒரு அடிப்பட்ட பார்வைப் பார்த்தார். வேறு எதுவும் பேசவில்லை. சற்றுநேரம் அங்கேயே மெளனமாக நின்றுவிட்டு நகர்ந்தான். எதுவும் தோன்றாமல் வெளியே சென்றுவிட்டான்.
அவன் திரும்பி வந்ததும் அம்மா பிடித்துக்கொண்டாள்.
“ஏன்டா அப்பாவிடம் ஏதோ ஓட்டல் வேலைக்குப் :போறேன்னியாமே?”
“ஆமாம்மா” என்றான் இவன் சன்ன குரலில்.
“அப்பா எவ்வளவு மனசொடிந்து போயிட்டார் தெரியுமா? உன்னை எதுக்கும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லச் சொன்னார்”
“ஏம்மா, அதை அவரே என்னிடம் சொல்லியிருக்கலாமேம்மா” என்றான் உடைந்த குரலில்.
“நானே அப்பாகிட்ட சொன்னேன்டா. நீங்களே அவன்கிட்ட ஒரு வார்த்தை ஆறுதல்ா சொல்லக்கூடாதான்னு கேட்டேண்டா. அப்பா சொன்னார், ‘நான் பேசினால் குழந்தை இன்னும் மனசொடிந்து போயிடுவான்னாருடா” என்றாள்.

உண்மைதான். அப்பா நேரிடையாக ஆறுதல் சொல்லியிருந்தால், அவனால் தாங்கியிருக்க முடிந்திருக்காது என்று பட்டது. ஆனால் அப்பா மனசை காயப்படுத்தியிருப்பது புரிந்தது. மனசுக்குள் “ஸாரிப்பா” என்று சொல்லிக்கொண்டான்.

நாளைக்கு போவது ஒன்பதாவது இன்டர்வியூ. ஒன்பதாம் நம்பர் எல்லோருக்கும் ராசியாமே? சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும். தங்கைக்கு தானே கல்யாணம் செய்யவேண்டும். அம்மாவை, அப்பாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கனவுகள்... கனவுகள் ... கனவுகள்... அப்படியே தூங்கிப் போணான்.

காலையில் எழுந்தபோது அம்மா குளித்துவிட்டு சமையலறையில் வேலையாக இருந்தாள். தங்கை படித்துக்கொண்டிருந்தாள். மெதுவாக அப்பாவைத் தேடினான். இல்லை. வேலைக்குப் போய்விட்டார் போல. இத்தனைக் காலம் தாழ்த்தி எழுந்ததில் சற்று வெட்கமாகக்கூட இருந்தது. முகம் கழுவிக்கொண்டு அம்மாவிடம் போய், அம்மா கொடுத்த காபியைக் குடித்துக்கொண்டே, மெதுவாகக் கேட்டான்.
“அப்பா எங்கேம்மா?”
“அவர் காலம்பர அஞ்சு மணிக்கே கிளம்பி போயிட்டாருடா” என்றாள் அம்மா.
“சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகனுமில்ல. இன்னிக்கு இன்டடர்வியூ இருக்குன்னியே” என்று ஞாபகப்படுத்தினாள்.

குளித்துமுடித்து, பூஜை செய்து ரெடியானபோது, தங்கை வழக்கம் போல கோவிலுக்குப் போய் வந்திருந்தாள்.
“அண்ணா, இன்னிக்கு கண்டிப்பாக வேலைக் கிடைக்கும் பாரேன்” என்றாள் விபூதி பிரசாதத்தை நீட்டியபடி. விபூதி இட்டுக்கொண்டு மெளனமாகப் புன்னகைத்தான்.

அம்மா உள்ளிருந்து வந்து, “இதை அப்பா குடுக்கச் சொன்னாருடா” என்று வழக்கம்போல பணத்தைக் கொடுத்தாள். “இந்த வேலை கண்டிப்பாகக் கிடைக்கப்போறது பாரேன்” என்றாள். இப்போது இந்த வாசகங்கள் எல்லாமும் பழகிவிட்டது. ‘இவர்களுக்காவது வேலை கிடைக்கவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.

நேற்றிரவு பெய்த மழையில் தெருவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. சீராக நடப்பதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. உடைகள் அழுக்காகாமல் இன்டர்வியூ போகமுடியுமா என்று கவலைப்பட்டான். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சென்னைக்கிளையில் வேலைக்கான இன்டர்வியூ. வேலைக்கிடைத்தால் நிஜமாகவே அதிர்ஷ்டம் தான். வேலைக் கிடைத்தால்...

நிறுவனத்தை அடைந்தபோது ஏற்கெனவே நிறையபேர் அங்கு காத்திருந்தார்கள். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான். பக்கத்திலிருந்தவன்ஈ “ஹலோ” என்று கைநீட்டினான். ‘இது எனக்கு 13வது. உங்களுக்கு?” என்றான். மெதுவாக “ஒன்பதாவது” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாதவனாக மெளனமானான். அவன் விடவில்லை. “மொத்தம் 3 வேகன்ஸின்னு சொன்னாங்க. இப்ப என்னடானா, 2 ஏற்கெனவே முடிஞ்சிபோச்சாம். ஒரு போஸ்ட்க்கு எத்தனைப் பேர் பாருங்க.” என்றான். “இந்த போஸ்ட்டும் ஏற்கெனவே ரிசர்வ் ஆகியிருக்கும். நமக்கு வெட்டிவேலை” என்று அலுத்துக் கொண்டான். இவனுக்கு பகீரென்றது. அம்மா, அப்பா, தங்கை என்று எல்லோரும் கண்ணெதிரே வந்து போனார்கள். மிகவும் சோர்ந்துப்போய் பேச்சற்று இருந்தபோது இவனைக் கூப்பிட்டார்கள்.
இன்டர்வியூ முடிந்து வெளியே வந்தபோதுஈ எல்லோரும் இவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். யாரிடமும் பேசத்தோன்றாமல், மெதுவாக வெளியே நடந்தான். கேள்விகள்... கேள்விகள்... கேள்விகளின் முடிவில் மீண்டும் கேள்விகள்! இதெற்கெல்லாம் முடிவே இல்லையா என்று தோன்றியது. இந் வேலை கிடைக்கும் எ்னற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டதாக உணர்ந்தான்.

தெருவில் நடந்தபோது மிகவும் ஈரமாக இருந்தது. மெதுவாக நடந்தவன், ஊர்க்கோடியில் இருந்த கோவிலில் சென்று உட்கார்ந்துக் கொண்டான். கோவில் நடை அடைத்திருந்தது. யாரும் இல்லை. ஒவ்வொரு இன்டர்வியூ சென்றதும் ஏனோ ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது. ஒவ்வொரு இன்டர்வியூக்கும் ஏக நம்பிக்கையாக அனுப்பும் அம்மா, வாழ்த்துச் சொல்லும் தங்கை, எதிர்பார்ப்புடன் அப்பா... இதெற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? ஏனோ நெஞ்சில் துக்கம் அடைத்தது. எத்தனை நம்பிக்கைகள்... எத்தனை எதிர்பார்ப்புக்கள்... மீண்டும் மீண்டும் எத்தனைமுறை? எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு...

திடீரென முடிவுக்கு வந்தவனாக எழுந்தான். தன்னுடைய சான்றிதழ் ஃபைலை கீழே வைத்து, அதன்மேல் ஒரு கல்லை வைத்தான். மெதுவாக குளக்கரைக்குச் சென்று ஒவ்வொரு படியாக இறங்கி காணாமல் போணான்.

மூன்று நாட்களாகியும் வீடு சோகத்தில் இருந்தது. வேலைக்குப் போகாத அப்பா. வீட்டு வேலை செய்யத் தோன்றாக அம்மா. பள்ளிக்குச் செல்லாத தங்கை. அழுது அழுது அனைவரின் கண்களும் வீங்கியிருந்தன. யாரும் யாரோடும் பேசத் தோன்றாமல் ஒவ்வொரு இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
வெளியே “சார் போஸ்ட்” என்று போஸ்ட்மேன் குரல் கொடுக்க, அப்பா மெதுவாகப்போய் கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தார். ஏதும் தோன்றாதவராக சற்றுநேரம் சும்மா இருந்தவர், கவரை மெதுவாகப் பிரித்து படிக்கத் தொடங்கினார். திடீரென்று “ஹோ” என்று பெருங்குரலில் ஆரம்பித்தவர், “ஏமாந்திட்டேயேடா கடைசியில்” என்றார் சத்தமாக. பிறகு உடம்பு குலுங்க அழ ஆரம்பித்தார் அப்பா.

***








Tuesday, April 11, 2006

பாமினி தமிழ் தட்டச்சு

டியர் கிளெமெண்ட்,

இக் கடிதம் உனக்கு ஆச்சரியமூட்டக்கூடும். இக்கடிதம் தூயதமிழில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது உனக்கு மேலும் ஆச்சரியம் தரச்கூடும். அதுவல்லாமல் இக்கடிதம் எனக்குத் தெரிந்த ‘பாமினி வகை’யில் தட்டச்சு செய்யபட்டது. இதற்கு நான் வெகுநாள் முயற்சி செய்து வந்தது உனக்கு நினைவிருக்கக் கூடும். மிகுந்த பிரயாசைக்குப் பிறகு அதே இகலப்பைக் கொண்டு பாமினி உருக்கொண்டு தட்டச்சு செய்ய முடிகிறது. எனக்கு முதலில் வேர்டு-2003ல் இவ்வாறு தட்டச்சு இயலாததாக இருந்தது. மற்றபடி அனைத்து செயல்பாடுகளையும் செய்யமுடிந்ததது. (ஐகான்களை மறுபெயர் செய்வது உட்பட) அப்போதுதான் நோட்பேட் ல் செய்யமுடிந்தது ஏன் வேர்டுல் செய்யமுடியவில்லை என்று ஆய்ந்த போதுதான் நான் TSCu_Paranar என்ற எழுத்து:ரு கொண்டு செய்யமுடிந்ததை கண்டுபிடித்தேன். ஆனால் என்னுடைய பழைய படைப்புக்களை மீண்டும்தான் தட்டச்சு செய்யவேண்டும். பழைய படைப்புக்களை உரு மாற்ற முடியுமெனில் நல்லது. இல்லாவிடினினும் சற்று நேரம் ஆகும். பரவாயில்லை.

தமிழ் வாழ்க என்று கூக்குரல் செய்யத் தோன்றுகிறது.

வாழ்க தமிழ்!!! வெல்க நிலம்புலர்ந்த தமிழர் பணி!!!

அன்புடன
சந்துரு

(இக்கடிதத்தின் பதிலை தமிழில் எழுத இயலுமாயின் நன்று!)

இன்றைய அரசியல்

கலைஞர் கருணாநிதி அவர்கள் இதுவரையில் டிவி இல்லாத ஏழை மக்களுக்கு ஒரு கலர் டிவி கொடுப்போம் என்றதும், அதிமுகவுக்கும் மதிமுகவுக்கும் குறிப்பாக வைகோ அவர்களுக்கும் பற்றிக் கொண்டு வருகிறது. கலர் டிவி கொடுக்கிறார்களே கேபிள் இணைப்பு கொடுப்பார்களா என்று மூச்சுக்கு மூச்சு மேடைக்கு மேடை கேட்டுக் கொண்டு இருக்கிறார். கலைஞர் கேபிள் இணைப்பும் முடிந்தால் கொடுப்போம் என்றதும் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவருக்கு சில டிப்ஸ். கேபிள் இணைப்பு கொடுக்கிறேன் என்று சொல்கிறாரே, மின்சார கட்டணம் செலுத்தத் தயாரா? மின்சார கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமா? பொதுமக்கள் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது சமைப்பது யார்? சமைத்துப் போட தயாரா? என்று கூட கேட்கலாம். அவருக்கு இன்னும் சில கேட்க மறந்து விட்டார். ரூபாய் 2க்குஅரிசி கொடுப்பேன் என்று சொல்கிறாரே பருப்பு கொடுப்பாரா? ஏழைகளுக்கு நிலம் கொடுக்கிறீர்களே விவசாயம் செய்து கொடுப்பீர்களா என்று கூட கேட்கலாம். என்ன சொல்வது கேட்பவர்கள் ‘கேணையர்கள்’ என்று நினைத்தால் எதை வேண்டுமானாலும் ஆக்ரோஷத்துடன் பேசலாம்.

Sunday, April 09, 2006

DREAMS

May be all my dreams are lost
Or not at an affordable cost...

May be all my dreams are dreamt
Or could I have them all spent...

May be all my dreams are bleached
Or could I have my goals reached?

May be I still weave my dreams
Or is it just reality as it seems…


Saturday, April 08, 2006

நினைவுத் துளிகள்

 

நினைவின் ஈரப்பசையில்
மீண்டும்
சிறிதாய் மலரும்
கனவில்
ஒரு பூ!
***
மனதில் கவிதை
மீண்டும் மீண்டும்
எழுதி அழித்ததில்
வலி தான் மிச்சம்...
***
என்னில் என்னை
தொலைத்து விட்டு
உன்னில் தேடும்
அற்பன் நான்!
***
முதிர்கன்னி
மூலைக்கிழங்கள் இரண்டோடு
மூன்றாம் கிழமாய்
மூலையில் நானும்...


Friday, April 07, 2006

என்னைத் தேடி...

 என்னில் என்னைத்
தேடித்
தேடி
களைத்துப் போன
கண்கள் மூட
கண்டேன் மனதில்
மூலையில் என்னை
முழங்காலிட்டு...

கடிதம்

 கவிதைகள் ஏதும் கைவசம் இல்லை
கிணற்றில் போட்ட கல்லாய்
மனதை அழுத்தும்
கவலையைக்
கிள்ளி அனுப்பட்டுமா?


அதிகாலை நேரம்

புலரும் பொழுதில்
புதிதாய் கவிதை
மலர்ந்து மடியும்
மனதின் அடியில்