Monday, April 24, 2006

மாற்றம் - சிறுகதை

 “நான் நானாக இல்லை - நிஜம்தான்
நீ, நீயாகத்தான் இருக்கின்றாயா?
மாறிவரும் இவ்வுலகில்,
நிதமும் மாறும் எல்லாவற்றிலும்
நான், நானாக இருப்பதும்
நீ, நீயாக இருப்பதும்...”

மாற்றம்

     சந்துரு உட்கார்ந்திருந்துது தூரத்தில் வரும்போதே தெரிந்தது. நான் புடவை தடுக்க நடையை எட்டிப்போட்டேன். ‘எவ்வளவு நேரமாக உட்கார்ந்திருந்தானோ?’
     “ஸாரி சந்துரு, கொஞ்சம் லேட்டாயிடுச்சு”
     “கொஞ்சம் இல்லை. நிறையவே லேட். இருந்தாலும் பரவாயில்லை”
    என் சந்துருவிடம் பிடித்ததே இதுதான். எப்பவும் கோபமே வராது அவனுக்கு. என்னிடம் மட்டுமல்ல. யாரிடமும் அவன் கோபத்தோடு பேசி பார்த்ததில்லை.
     “ஏன் சந்துரு, உனக்கு கோபமே வராதா?”
“ஏன் கோபப்படணும்? அட் த மோஸ்ட் வருத்தப்படலாம். கோபப்படும்போது அடுத்தவரை பாதிக்கிறோம். வருத்தம் நம்மை மட்டுமே பாதிக்கும். என்னைப் பொருத்தவரையில் அடுத்தவரை பாதிக்கிற உரிமை யாருக்கும் இல்லை. அவ்வளவுதான். ஆனால் எனக்கும் கோபம் வரும். அதை கத்தித்தான் தெரியப்படுத்தனும்றது இல்லை”

  சந்துரு நன்றாகப் படித்தவன். அவன் பேசும் நிறைய விஷயங்கள் எனக்குத் தெரிவதில்லை. அவன் படிக்கும் புத்தகங்கள் பார்க்கும் சினிமாக்கள் எதுவும் எனக்குப் புரிவதில்லை. இருந்தாலும் அவன் பேசுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவனுடைய கவிதைகள் பிடிக்கும். சந்துருவுக்கு எல்லாமே கவிதைதான். இந்த கடலும் சரி, கடலை விக்கிற பையனும் சரி. யோசித்துப் பார்த்ால் அவனிடம் எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது.

   நாங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சந்திப்பதாக எங்களுக்குள் ஒப்பந்தம். அதுவும் என்னால் தான். நான் ினமும் சந்துருவை சந்தித்துவிட்டு வீட்டுக்கு லேட்டாகப் போக முடியாது. என் அப்பாஈ அண்ணனின் சந்தேகத்துக்கு ஆளாக முடியாது. சந்துருவை சந்திக்கும் என்னுடைய இந்த சின்ன சந்தோஷத்தையும் இழக்க நான் தயாராக இல்லை. என் வீட்டு சகதியை சந்துருவின் மேல் பூச தைரியம் இல்லை. என் வீட்டுக்கு தெரியும் போது தெரியட்டும்.

    நான் சந்துருவிடம் என்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். சந்துருவுக்கு எல்லாம் தெரியும். என் சம்பளத்தை நம்பியிருக்கும் என் குடும்பத்தைப் பற்றி, சொற்ப சம்பளம் வாங்கும் என் அப்பாவைப் பற்றி, சமையலறையே கதி என்றிருக்கும் என் அம்மாவைப்பற்றி, பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் என் அண்ணனைப் பற்றி, பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் என் தம்பியைப் பற்றி...

    சந்துரு ரொம்பவும் நல்லவன். அவனுக்கு என்னைப் பற்றிய கவலை நிறைய உண்டு. ஆனால் வெளிக்காட்ட மாட்டான். நாங்கள் சந்திக்கும்போதுகூட நேரமாகிவிட்டடால் எனக்கு நினைவூட்டுவான். என் மேல் தன் விரல்நுனிகூட படாமல் தான் பழகுவான். சில சமயம் நானே அவன் என்னைத் தொடமாட்டானா என்றுகூட வெட்கத்தைவிட்டு ஏங்கியிருக்கிறேன். ஊர்உலகத்தில் இருக்கும் காதலர்கள் போல் ஒரு சினிமா இல்லை, பார்க் இல்லை. இந்த கடற்கரைகூட என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது என்பதால் தான்.
நாங்கள் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்து நிறைய பேசியிருக்கிறோம். சந்துருவுக்கு ஆசைகள் அதிகம் இல்லை. ஒரு வீடு, வேலைக்குப் போகாத நான். இரண்டு குழந்தைகள். (“ஒரே குழந்தை என்றால் மிகவும் பிடிவாமாக வளரும். இரண்டு குழந்தைகள் என்றால் விட்டுக் கொடுக்கும் மனோபாவம் இருக்கும்” என்பான்.) காலையில் வேலைக்குப் போய் சாயுங்காலம் வரும் சந்துரு. இரவு தூக்கம் வரும் வரையில் மொட்டை மாடியில் பேச்சு. (“ஏதாவது பேசணும். உன்னுடைய உணர்வுகள், என்னோட கவிதைகள், குழந்தைகள் வளர்ப்பு... இப்படி ஏதாவது பேசணும். பேச்சுக்கூட முக்கியமில்லை. நானும் நீயும் அருகருகே இருக்கணும். நம் மனங்கள் மட்டும் பேசணும். அதுதான் முக்கியம்”)

     “என்ன வந்ததிலிருந்து ஏதோ யோசனை?”
     “ஒன்றுமில்லை. நம்மைப்பற்றி யோசித்தேன்”
     “எப்படி இதெல்லாம் முடியப்போகிறதோ என்றா?”
     நான் பேசாமல் தலையாட்டினேன்
     “கவலைப்படாதே. நாம் கவலைப்பட்டு ஏதும் ஆகப்போறதில்லை. அதது நடக்கும்போது நடக்கட்டும்”
    நான் ஏன் லேட்டாக வந்தேன் என்பதை அவன் கேட்காமலே கூறினேன்.
   “கடங்கார ஆபீஸர். கிளம்பும் போதுதான் போன வருஷ டீடெயில்ஸ் எல்லாம் வேண்டும்னார். அவசரஅவசரமாக எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.”
“சரி விடு அவருக்கு என்ன ப்ரஷரோ”
அப்புறம் சந்துரு அவன் படித்த புத்தகத்தைப் பற்றி, வாசித்த கவிதைகளைப் பற்றி,,, சந்துருவுக்கு பேச நிறைய விஷயங்கள் இருந்தன. நான் எப்போதும்போல மக்குப் பண்டாரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சந்துரு பேசும் போது அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னைப் பொருத்தவரையில் மிகவும் சுவாரசியமான விஷயம்.
“உனக்கு நேரமாகல்லே?”
மணியைப் பார்த்தேன். நேரமாகிவிட்டது தான்.
“சரி சந்துரு. நான் கிளம்பறேன். புதன் கிழமை பார்க்கிறேன்” அவனைவிட்டுப் பிரிவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

திடீரென்று மறுநாள் சந்துருவிடம் இருந்து போன். சந்துரு எப்போதாவதுதான் இப்படி போன் பண்ணுவான். கேட்டால் பேசவேண்டும் போல இருந்தது என்பான்.
‘என்ன சந்துரு?”
இன்றைக்கு பர்மிஷன் போட்டுட்டு வரமுடியுமா?”
“என்ன சந்துரு, என்ன விஷயம்?”
“நீ வாயேன். சொல்றேன்”
வழக்கம் போல நான் போகும் முன்னர் சந்துரு காத்திருந்தான்.
“என்ன சந்துரு, என்ன விஷயம்?”
“பிரிட்டிஷ் கெளன்ஸிலில் எனக்குப்பிடித்த டைரக்டரின் படம். பிரத்தியேக ஷோ. ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்தப் படம். ரொம்ப கஷ்டப்பட்டு, அலைந்துத் திரிந்து இரண்டு டிக்கட் வாங்கினேன். எனக்கு உன்னோட அந்தப் படத்தைப் பார்க்கணும்னு ஆசை. உன்னிடம் இந்த கதையை விளக்ககணும். விவாதிக்கணும். டைரக்க்ஷனைப் பற்றி பேசணும். நான் ரொம்ப எதிர்பார்த்ப் படம்பா. ப்ளீஸ்.”

சந்துரு எப்போதும் இப்படி என்னை கெஞ்சியதில்லை. எதற்காகவும், எப்போதும். ஆணால் என்னால் சந்துருவுடன் சினிமா போக முடியாது. போய்விட்டு வீட்டுக்கு லேட்டாகப் போய் எல்லோருக்கும் பதில் சொல்ல என்னால் முடியாது. பத்தாவது படிக்கும் தம்பிகூட என்னை கேள்வி கேட்பான். எங்கள் வீடு ஒரு ஆண்கள் கூடாரம். பெண்களுக்கு எ்னறு தனித்த உணர்வுகள் உரிமைகள் இல்லை.

“இல்லை சந்துரு. என்னால் வர முடியாது”
சந்துருவின் முகம் வாடிவிட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் என்னால் அவனுடன் சினிமாவுக்கு போக முடியாது. என்மேல் எனக்கே வெறுப்பாக இருந்தது. என்ன செய்ய?
“இந்தப் படம் உன்னுடன் பார்க்கவேண்டும் என்பது என்னோட கனவு தெரியுமா? இங்கிலீஷ் படம். சீக்கிரம் முடிந்துவிடும்.”
“எத்தனை மணிக்கு?”
“ஒன்பதரை மணிக்கு” என்று சொல்லும்போதே சந்துருவுக்கு நான் வரஇயலாது என்பது புரிந்துவிட்டது.
“சரி, நீ விட்டுக்கு கிளம்பு”
“இல்ல சந்துரு, இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்.” என்றேன் கெஞ்சலாக.
“வேணாம்டா. எனக்கு மனசு சரியில்லை. நீ கிளம்பு. உன்னை பஸ் ஏற்றிவிட்டு நானும் கிளம்பறேன். இங்க இருந்தா இன்னும் மனசு கஷ்டமாயிடும்.”

எனக்கு என்மேலேயே எரிச்சல் வந்தது. என்ன ஜென்மம் நான்? ஒருவரையும் சந்தோஷப்படுத்தாத, சந்தோஷப்படாத ஜென்மம்! சந்துரு என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். நான் நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தேன். சந்துருவின் வாடின முகம் என்னை மிகவும் ஹிம்ஸை படுத்தியது. அன்று இரவு நான் தூங்கவில்லை. சந்துரு தனியாகவாவது அந்த சினிமா போயிருப்பானா? என்னையே நான் வெறுத்தேன்.

மறுநாள் புதன்கிழமை. காலையிலிருந் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. பார்த்தவுடன் சந்துருவிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். சாயுங்காலம் எப்போது வரும் என்று மனம் ஏங்கியது. சந்துரு அவனுக்குப் பிடித்த அந்தப் படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவன் சிறிதளவாவது சந்தோஷம் பெற்றால எனக்கும் சந்தோஷம். மாலையானதும் அரக்கப் பரக்க கடற்கரைக்கு ஓடினேன். எனக்கு முன்னால் சந்துரு வழக்கம்போல வந்து காத்திருந்தான்.
“ஸாரி சந்துரு.” என்றேன் குற்ற மனப்பான்மையுடன்.
“எதுக்கு ஸாரி?”
“நேற்று என்னால் வரமுடியாததற்கு. அந்தப் படம் எப்படி இருந்தது?”
“நான் போகலைடா. தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலை”
“ரொம்ப நாளா காத்திருந்த படம்னு சொன்னியே சந்துரு” எனக்குள் அழுகை வெடித்தது.
“இல்லைடா, தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலைடா” என்றான் என்னை இதமாக பார்த்துக்கொண்டு.
எனக்குள் குற்ற மனப்பான்மை குறுகுறுத்தது.
திடீரென முடிவெடுத்தேன். நான் இனிமேல் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன ஆனாலும் சரி. நான் என் சந்துருவுக்காகவே வாழப்போகிறேன்.
“இனிமேல் இதுபோல படம் பார்க்கணும்னா சொல்லு சந்துரு. நான் வரேன். இரவு காட்சியானாலும் சரி”

***



2 comments:

Karthigeyan said...

அழகிய சிறுகதை!

சந்தர் said...

நன்றி, கார்த்தி.