Saturday, May 27, 2006

மதுமிதா - ஆய்வுக் குறிப்பு

வலைப்பதிவர் பெயர்: சந்தர்
வலைப்பூ பெயர் : எழுத்து
சுட்டி(url) : http://baksa.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: சென்னை
நாடு: தமிழ்நாடு இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பல நண்பர்கள்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : முதலில் 12 ஜூலை 2005 பிறகு 26பிப்ரவரி 2006
இது எத்தனையாவது பதிவு: 25க்கு மேல்
இப்பதிவின் சுட்டி(url): http://baksa.blogspot.com/2006/05/blog-post_27.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கதை கவிதைகளை பதிவு செய்ய
சந்தித்த அனுபவங்கள்: ஏராளம்
பெற்ற நண்பர்கள்: தாராளம்
கற்றவை: எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்து என் பிறப்பரிமை - என் எழுத்துக்கள் சுதந்திரமாகவே பிறக்கிறது
இனி செய்ய நினைப்பவை: இன்னமும் கவிதையும் கதையும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ஆறறைக்கோடி தமிழர்களில் ஒருவன்
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : நல்லதே நினை நல்லதே நடக்கும்

Monday, May 22, 2006

எழுத நினைத்த கதை

எல்லோரும் எழுதும்போது நான் மட்டும் விதிவிலக்கா? என்தான் நான் எழுத ஆசைப்பட்டேன். எங்கள் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்துகிறார்கள். அதில் எழுத தீர்மானித்தேன்.

எதைப் பற்றி எழுதுவது? “போலியோ தடுப்பு மருந்து போடுவதின் அவசியம்” குறித்து எழுதலாமா அல்லது “கண் தானம்”, “இரத்த தானம்”, “சிறுகுடல், பெருங்குடல் தானம்” போன்ற இன்ன பிற தானங்கள் குறித்து எழுதலாமா என்று யோசித்தேன். ஏதாவது மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள அறிவிப்பு பலகையில் இருந்து எழுதிக்கொண்டு வந்துவிடலாம். சுலபமான வேலை. ஆனால் முந்தைய இதழ்களில் இவையாவும் வெளியானது ஞாபகம் வந்தது. தீவிரமாக யோசித்தபோது தான் யாருமே எழுதத்த தயங்கும் விஷயங்களை நாம் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றியது.

சற்றேறக்குறைய தீர்மானித்து என் மனைவியிடம் சொன்னபோது “உங்களுக்கு ஏன்தான் இவ்வாறு புத்தி போகிறதோ” எ்னறு என் குமட்டில் குத்தாத குறையாக நொடித்துக் கொண்டாள். இதற்கெல்லாம் அசருபவனா நான்? நான் தீர்மானித்தால் தீர்மானித்தது தான்!

சற்று நேரத்திற்கெல்லாம் ‘என்னடா இது’ என்று கேட்டுக்கொண்டே வந்த என் அப்பா ‘எது’ என்று சொல்லாமலேயே ‘எக்கேடு கெட்டுப்போ!’ என்பது போல போய்விட்டார்.

சமையலறைக்குள் நுழைந்தேன். “அம்மா, கொஞ்சம் காபி கொடேன். எழுத நிறைய யோசனை செய்யவேண்டியிருக்கிறது” என்றேன். அம்மா காபி கலந்துக்கொண்டே, “ஏண்டா, இந்த கதை, கண்றாவியெல்லாம் உனக்கெதுக்குடா?” என்றாள். நான் ஏதும் பேசாமல் காபியைக் குடித்துவிட்டு நகர்ந்தேன்.

“அப்பா, நான் உனக்கு ஹெல்ப் பண்றேம்பா” என்று கத்திக்கொண்டு வந்த என் பத்துவயது அருமை புத்திரனின் குரல் திடீரென்று “ஐயோ” என்று மாற திரும்பிப் பார்த்தேன். என் மனைவி அவன் காதை திருகிக் கொண்டிருந்தாள். கதை எழுதும் என் தீர்மானம் வலுவுற்றதை உணர்ந்தேன். நான் எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது!

மேஜையில் பேப்பர் பேனா. அருகில் இருக்கையில் நான். “நகரும் கை எழுதுகிறது. எழுதியதுமே நகருகிறது” என்றாரே கலில் ஜிப்ரான். அதுபோல என் கை பேனா பிடித்து பேப்ப்ர் மேல் நகர எத்தனிக்கையில் எங்கிருந்தோ வந்தாள் என் தங்கை.
“அண்ணா, நான் கேள்விப்பட்டது உண்மையா” என்றாள் மொட்டையாக.
“நீ என்ன கேள்விப்பட்டாய்?” என்றேன் நானும் வம்படியாய்.
“கண்ட கண்ட குப்பையெல்லாம் ஆபீஸ் பத்திரிகையில் எழுதி பேரைக் கெடுத்துக்காதே” என்றாள். “ஏற்கெனவே உன் பேர் சரியில்லை” என்ற த்வனி இருந்தது அவள் குரலில்.

“நான் எழுதுவது தப்பா” என்றேன் பரிதாபமாக.
“நீ எழுதுவதை தப்பென்று சொல்லல. ஆனா கண்ட கண்ட விஷயங்களை எழுதி இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்காதேன்னு தான் சொல்றேன்” என்றாள். “உன் ஆபீஸில்தான் என் ஃபிரண்டோட அண்ணனும் வேலைப்பாக்கிறார் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் முத்தாய்ப்பாக.

இதை ஏன் என்னிடம் சொல்கிறாள் என்பது புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் சரி, நான் எழுதுவதில் இருந்து பின் வாங்கப் போவதில்லை!

‘சரி. வீட்டில் எழுதினால்தானே இத்தனை கலாட்டாவும். ஆபீஸில் பெரியதாக என்ன குப்பை கொட்டுகிறோம். அங்கே வைத்துக் கொள்வோம் கச்சேரியை’, என்று தீர்மானித்தேன்.

வருகை பதிவேட்டில்கையொப்பம் இடுவது தவிர வேறு எதற்கும் பேனா எடுக்காத நான் பேனாவும் கையுமாக உட்கார்ந்திருந்தது என் சக அலுவலரை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.

“என்ன சார், ஏதோ எழுதறீங்க?” என்றார். குரலில் சற்று நக்கல் இருந்தாற் போலிருந்தது.
“இல்ல, நம்ப ஆபீஸ் கையெழுத்து பிரதிக்கு...” என்று இழுத்தேன்.
அப்போதுதான் நான் எழுதியிருந்த தலைப்பை பார்த்தவர், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு சரேலென விலகினார். நான் கவலைப்படவில்லை. தலைப்பைத் தவிர வேறு ஏதும் தோன்றாமல், பரிட்சைக்கு வந்த படிக்காத மாணவன் போல வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சார், குமுதம் வாரஇதழில் இருந்து உங்களுக்கு போன்” என்று என்னுடைய முதன்மை அலுவலர் என்னை விளித்தார். என்னால் நம்ப முடியாமல்ஈ தொலைப்பேசியை எடுக்க, “நீங்கள் உங்கள் அலுவலகத்தில் நடத்தும் கையெழுத்துப் பிரதியில் எழுதியிருந்ததை எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஒருவர் படித்து மிகவும் நன்றாக இருப்பதாக சிலாகித்தார். நீங்க எங்களுக்கு ஒரு கதை எழுதவேண்டும். தொடர்கதையாக இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்” என்றார்.
“சார், நான் வந்து...” என்பதற்குள், அவரே மீண்டும், “நீங்கள் எதுவும் சொல்லக்கூடாது. கல்கி ராஜேந்திரன் உங்களை அப்ரோச் பண்ணுவார். விகடன் பாலசுப்ரமணியன் கூட உங்களை நேரில் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தார். ஆனால், நீங்க எங்களுக்குத்தான் முதலில் எழுதவேணும்” என்றார். நான் பதில் சொல்லும் முன்னர், பக்கத்து மேஜைக் காரர் ‘தொப்’பென்று ஃபைலை போட்ட சத்தத்தில் கனவு கலைந்தேன்.

‘அட, கனவா!’ என்று வியந்தேன். இதெல்லாம் நிஜமாகப்போகிறது என்று நினைத்தபோது, “சார்... சார்...” என்ற குரல். “ஆ! நிஜமாகவே ஃபோனா! ஒரு வேளை விகடன் ஆபீஸில் இருந்து தானோ?” என்று நினைத்தபோது, என்னுடைய முதன்மை அலுவலர், என்னை அழைத்துக் கொண்டு வந்தார்.
“வாங்க சார்” என்றேன் சம்பிரதாயமாக.
“நீங்க ஏதோ எழுதுவதாக கேள்விப்பட்டேன்” என்றேன் நேரிடையாக.
“ஆமாம் சார். நம்முடைய கையெழுத்துப் பிரதிக்காக...” என்றேன்.
“அதெல்லாம் வேண்டாம். நன்றாக எழுதத்தெரிந்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றார் அதிரடியாக.
“சார், நான்கூட நன்றாக எழுதுவேன்” என்றேன் அழாதகுறையாக.
“எது? இதுவா?” நான் எழுதி வைத்திருந்த தலைப்பைக் காட்டினார். சற்று கேலியாக சிரித்தது போலிருந்தது. போய்விட்டார்.

என்னுடைய எழுத்துக்கு, எழுதும் முன்னரே இருக்கும் எதிர்ப்பு என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இன்னமும் எழுதியபிறகு எப்படி இருக்குமோ என்று பயமாக இருந்தது. என்னைப் போன்ற எழுத்தாளர்களை இந்த உலகம் புரிந்துக் கொள்ளப் போவதில்லை என்ற அலுப்புடன், தலைப்பு மட்டிலும் எழுதியிருந்த காகிதத்தை கசக்க மனமில்லாமல் அப்படியே குப்பைக் கூடையில் வீசினேன்.
‘கில்லி விளையாடுவது எப்படி?’ என்ற அந்தத் தலைப்பு என்னைப் பார்த்து ‘ஸில்லி’ என்பது போல இருந்தது.

Thursday, May 18, 2006

வாகனங்கள் ஓட்டும் பெண்கள்

சமீப காலத்தில் சென்னையின் நெருக்கடிமிகுந்த சாலைகளில் ஒரு விநோதத்தைக் கவனிக்க முடிந்தது. Pulserகளும் Unicornகளும் Apacheகளும் Bulletகளும் திக்கி திணறிக் கொண்டிருக்கும் போது மங்கையர்களின் Scooty Pep, Honda Activa போன்ற Gearless ஸ்கூட்டர்கள் அநாயாசமாக முன்னேறி சென்றுக் கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சிலசமயம் அரசு பேருந்துகளின் ஆக்ரோஷ ஓட்டங்களின் நடுவே மேற்கண்ட Pulserகளும் Unicornகளும் Apacheகளும் Bulletகளும் பதறி அடித்து விலகும் போது, இந்த Scooty Pep, Honda Activaக்கள் கவலைசிறிதும் இன்றி அரசு பஸ்களுக்கு தண்ணி காட்டும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த சுலபமான வண்டியோட்டத்திற்கு கியர் இல்லாமல் இருப்பது தான் காரணமா என்றால் மேற்கண்ட Scooty Pep, Honda Activa வண்டிகளை ஆண்கள் ஓட்டும்போது அவ்வாறு பெண்களுக்கு இணையாக வேகமாக ஓட்டவில்லை. வாகனங்கள் ஓட்டுவதில் பெண்கள் திறமைசாலிகளா? அல்லது பெண்கள் வண்டியோட்டுகிறார்கள் என்று எல்லோரும் ஒதுங்கி வழிவிடுகிறார்களா?

Friday, May 12, 2006

ஒரு சின்ன சந்தோஷம்!

 ஆபீஸ்... வீடு...
வீடு... ஆபிஸ்...

சாப்பாடு... தூக்கம்...
தூக்கம்... சாப்பாடு...

வாரம் ஒருநாள் வாங்கும் பூ
மல்லிகையா... முல்லையா...

யோசனை செய்யும்
இந்த இடைப்பட்ட நேரத்தில்
விடையெட்டும் முன்னர்
கிடைக்கும்
ஒரு சின்ன சந்தோஷம்!


Wednesday, May 10, 2006

நிதர்ஸனம்

நான் வீட்டை அடையுமுன்னர் அம்மாவின் குரல் என்னை வரவேற்றது.
“வாடா சந்துரு, வாயைத் திற” என்று நீராவி எஞ்ஞினில் கரி அள்ளிக் கொட்டுவதைப்போல எ்ன வாயியல் சர்க்கதையை ஸ்பூனால் அள்ளிப் போட்டாள்.
“என்னம்மா விஷேஷம்” என்றேன் முகத்தில் இருந்த சர்க்கரையை துடைத்துக்கொண்டு.
“உங்கப்பாவுக்கு ஜியெம் அவார்ட் கிடைச்சிருக்குடா” அம்மாவின் குரல் இரயில்வே காலனியெங்கும் எதிரொலித்தது. அம்மா எப்போதும் இப்படித்தான். எதையும் அடக்கி வாசிக்கத் தெரியாது. நான் போனவருடம் பத்தாவது வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றபோது அம்மா செய்த கலாட்டாவில் பக்கத்துவீட்டு தினேஷ் அண்ணன் IASல் தேர்வு பெற்றது சாதாரண நிகழ்ச்சியாகிப் போனது.
அப்பாவுக்கு ‘ஜியெம்’ அவார்ட்! அம்மாவின் சந்தோஷம் என்னையும் தொற்றிக்கொண்டது. அம்மாவின் கையைப் பிடித்துக் குலுக்கினேன்.
“அப்பா எங்கேம்மா?”
“உள்ளே தான் இருக்கார். ஏதோ ஆபீஸ் வேலை” என்றாள் சற்று சலிப்புடன்.
அப்பா எப்போதும் இப்படித்தான். எப்போது பார்த்தாலும் ஏதோ ஆபீஸ் வேலைதான். நான் அவரை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.
“ஏம்பா, உங்கள் ஆபீஸில் உங்களைவிட்டா வேலை செய்ய யாரும் இல்லையா?”
“நான் எனக்காக வேலை செய்யறேன்டா. எனக்கு வேலை செய்வது பிடிச்சிருக்கு”
“அது சரி. வீட்டுவேலையும் கொஞ்சம் பாருங்க” - இது அம்மா.
“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே” என்பார் அப்பா. அம்மா மோவாய்கட்டையை இடித்துக் கொண்டு போவாள்.

அப்பா அடிக்கடி ஏதாவது அவார்ட் வாங்கிக்கொண்டு வருவார். ஐம்பது, நூறு, அதிகபட்சமாக இருநூறு. இவையாவும் அப்பா வீட்டுக் இனிப்பாகத்தான் கொண்டு வருவார்.
“அம்மா என்னம்மா திடீரென்று ஸ்வீட்?”
“அப்பாவுக்கு ஏதோ அவார்ட் கொடுத்தாங்களாம். அந்த பணத்துக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தார்”

ஆனால் ‘ஜியெம்’ அவார்ட் அப்படியில்லை. மிகப் பெரிய கெளரவம். இந்த அவார்ட் கிடைப்பது மிகவும் கஷ்டம். அப்பா சொல்லியிருக்கிறார். அப்பா மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். அவருக்கு அவார்ட் கிடைத்தது பெரிய விஷயம் இல்லைதான். இருந்தாலும் இது மிகப் பெரிய கெளரவம். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அப்பா உள் அறையில் - ஏதோ ஆபீஸ் வேலை.
“கங்ராஜூலேஷன்ஸ் அப்பா”
“தேங்ஸ்டா”
“நீங்க கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு பலன்” என்றேன் பெரிய மனுஷன் போல.
“அதிர்ஷ்டமும் கூட. என்னைவிட எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இன்னமும் கிடைக்கலை. எனக்கு கிடைச்சிருக்கு”.
அப்பாவிடம் இது தான் எனக்கு பிடிக்காத விஷயம். தான் ஒரு பெரிய ஆள் எ்னறு ஒத்துக் கொள்ளவே மாட்டார். ஈகோவே இல்லாத மனுஷன்.

எனக்குத் தெரிந்து அப்பா போல யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக தெரியவில்லை. கோடி வீட்டில் இருக்கும் ராமநாதன் மாமா வேலைக்குப்போயே நான் பார்க்கவில்லை. அவரும் அப்பா போல ஒரு ஆய்வாளர் தான். ஆனால் எப்போது பார்த்தாலும் வீட்டில் தான் வாசம். இரயில்வேயில் இருக்கும் சலுகைகள், விடுப்புகள், வசதிகள், வாய்ப்புகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி.

“என்ன மாமா, ஆபீஸ் போகலையா?”
“இல்லேடா சந்துரு. மாமி தூரம். ஆத்துல இல்ல. நான்தான் சமைக்கணும். அதான் சியெல் போட்டிருக்கேன்”.

இன்னொருநாள்.
“மாமாஈ நீங்க போகலையா? அப்பா ஏதோ இன்ஸ்பெக்ஷன்னு லைன்ல போயிருக்கார்”
“காலம்பர இருந்தே தலை கிர்ர்ருனு இருக்குடா சந்துரு. அதான் ‘ஸிக்’ பண்ணிட்டேன்”
“அது சரி. உடம்பு சரியில்லன்னு இப்ப எங்க போயிண்டிருக்கீங்க?”
“மதியம் முறுக்கு சுட்டுத் தரேன்னா மாமி. அது தான் மாவு அரைக்க போயிண்டிருக்கேன். துணி வேற ஏகப்பட்டது இருக்கு. ஊர வச்சிருக்கேன். வந்து தொவைக்கணும். தலைக்கு மேல வேல இருக்குடா. நான் வரேண்டா சந்துரு”
இந்த ராமநாதன் மாமாவுக்கு ஜன்பத்துக்கும் ‘ஜியெம்’ அவார்ட் கிடைக்காது.

ஜியெம் அவார்ட் ஃபங்ஷன். அப்பாவைப்போல நிறையப்பேர் அவார்ட் வாங்க வந்திருந்தார்கள். அவர்களுடன் கூட அவர்கள் நண்பர்கள்... உறவினர்கள்... பெண்கள் பட்டுச் ்சேலை அணிந்துக் கொண்டு ஒரு திருமண விழா போல... அரங்கம் பூராவும் நிறைந்திருந்தது. அப்பாவைப் பார்க்கப் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது. நிறையப் பேர் அப்பாவிடம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். கை குலுக்கினார்கள். அப்பா சற்று கூச்சப்படுவதாகத் தோன்றியது. அப்பாவும் எல்லோருக்கும் வாழ்த்துச் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அப்பாவின் பெயரை வாசித்ததும் விழாத் தலைவரிடம் இருந்து விருது பெற நடந்தபோது அவர் செய்த பணிகளைக் குறித்தும் அவருக்கு ஏன் விருது தரப்படுகிறது என்றும் வாசித்தார்கள். அனைவரும் கரகோஷம் செய்தார்கள். அப்பாவின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம். நான் என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய சக்தியெல்லாம் திரட்டி கைதட்டினேன். அப்பா கரம் கூப்பி நன்றியுடன் விருது பெற்றுக் கொண்டார். என்னுடைய சந்தோஷம் அளவிடமுடியாததாக இருந்தது.

அப்போதுதான் அடுத்த விருது பெற ராமநாதன் ஆய்வாளர் என்று வாசித்ததும் என்னால் நம்ப முடியாமல் மேடையைப் பார்க்க சரிதான். கோடிவீட்டு ராமநாதன் மாமா தான். அவருடைய கணிகளைகுறித்து வாசித்ததை என்னால் கேட்க முடியவில்லை. என் காதில் ஏதும் விழவில்லை. நம்பஇயலாமல் மேடையை பார்த்துக் கொண்டிருந்தேன். ராமநாதன் மாமா பரிசை பவ்யமாக பெற்றுக்கொண்டு நகர்ந்தார். நான் நம்ப இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சந்தோஷம் வடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ‘ஜியெம் அவார்ட்’ ? ராமநாதன் மாமாவுக்கு?

வீட்டுக்கு திரும்பும்போது அடக்கமாட்டாமல் அப்பாவிடம் கேட்டேன்.
“அப்பா, ராமநாதன் மாமாவுக்குக்கூட ஜியெம் அவார்டா? அவர் வேலையே செய்யமாட்டாரே அப்பா”

“இது மூன்றாவது முறை” என்றார் அப்பா.

Sunday, May 07, 2006

ஓட்டா அல்லது வேட்டா?

 ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு இந்த பதிவை இடுகிறேன்.  நான் இருந்த பகுதியில் மிகவும் பரபரப்பு.  மக்கள் அனைவரும் தெருவில் போய்க்கொண்டும் வந்துக்கொண்டும்.  நான் முன்எப்போதும் பார்த்திராத மக்கள் கூட இன்று ஓட்டுப் போடுவதில் கொண்ட ஆர்வம் காரணமாக ஓட்டுப் பதிவுக்கு ஆளாய்ப் பறந்துக் கொண்டிருந்தார்கள்.  ஏதும் இலவசமாய் கொடுப்பதாக இருந்தாலும் இந்த கூட்டம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது.  ஒன்று மட்டும் புரிந்தது.  மக்களுக்கு ஏதோ ஒரு மாற்றம்  தேவைப்படுகிறது.  இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவு 80% அளவுக்கு குறையாத ஓட்டுப் பதிவு இருக்கும் என்று தெரிகிறது.  நிறைய படித்தவர்கள் ஓட்டுப் போட வருகிறார்கள்.  அவர்கள் யாருக்கு வைக்கப் போகிறார்கள் வேட்டு என்பது மூன்றாம் நாள் தெரிந்து விடும்.

எப்போதோ எழுதியது

உனக்கும் எனக்கும் இரவுகள் ஒன்றா
விடியல்கள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் கனவுகள் ஒன்றா
நினைவுகள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் துயரங்கள் ஒன்றா
ஆறுதல்கள் மட்டும் ஏன் எனக்கில்லை

உனக்கும் எனக்கும் காதல் ஒன்றா
கண்ணீர் கவிதைகள் ஏன் உனக்கில்லை?

Monday, May 01, 2006

வேலை - சிறுகதை

“சந்துரு, கொஞ்சம் கடைக்குப் போய் வா” அம்மா சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள். நான் – சந்துரு, வேலையில்லா பொறியியல் பட்டதாரி - தினமும் இப்படி நூறுமுறை கடைக்கும், ரேஷனுக்கும், மாவுமில்லுக்கும் அலைந்துக் கொண்டிருக்கிறேன். கூடவே, தினப்படி, walk-in interview, spot selection interview போல இன்னபிற நேர்முகத் தேர்வுகளுக்கும் எழுத்து தேர்வுகளுக்குமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

“சந்துரு, இன்னுமா நோக்கு வேலை கிடைக்கலை? உங்கப்பா சொன்னாறே, நீ First Class Graduate-னு. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. நீ இன்னும் சிரத்தையா வேலைத் தேடணும். நான் உங்கப்பா எல்லாம் SSLC முடிச்சதும் TVS-ல கதறிட்டு எங்களுக்கு வேலை குடுத்தான் தெரியுமா?” என்றார் அப்பாவுடன் சேர்ந்து வேலைப்பபார்த்து சேர்ந்து ரிடையர் ஆன ஈஸ்வரைய்யர் ஒருநாள்.

“அது தெரியாது மாமா. வேலை குடுத்துட்டு கதறினான். அதுதான் எனக்குத் தெரியும்” என்றேன் எரிச்சலில்.

“இதுதான்... இந்த வாய்க்குத்தான் நோக்கு வேலை கிட்டமாட்டன்றது. ரொம்ப கஷ்டம்” என்று முணுமுணுத்துக்கொண்டே அவர் போய்விட்டார்.

ஈஸ்வரைய்யராவது பரவாயில்லை. இந்த அப்துல் கரீம் சாயபு இருக்காறே அவர் என்றால் தான் ரொம்ப பயம். அப்பாவுடன் ஐந்தாவது வரைக்கும் படித்துவிட்டு கடைத்தெருவில் ஒரு செருப்புக்கடை வைத்திருக்கிறார். “சந்துரு பேட்டா... என்னா நீ எப்போ பாத்தாலும் ஊர் சுத்து. உங்க வாப்பா கிட்ட சொல்லி என் ஷு கடையில் வேலை போட்டு தரேன். டெய்லி பேட்டா தரேன். என்னா சொல்றே?” என்பார் ஸ்பஷ்டமாக. அவர் டெய்லி பேட்டா தருவாரோ அல்லது காலில் இருக்கும் Bata-வால் தருவாரோ... அதனாலேயே அவரை தெருக்கோடியில் பார்த்தாலே அவர் கண்ணுக்குப் படாமல் வேறே சந்துக்கு திரும்பி விடுவேன்.

‘ஐயா, நான் என்ன வேலை செய்யமாட்டேன் என்றா சொல்கிறேன்? ஆனால் ஏதாவது ஒரு வேலைப்பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்ள தயாரில்லை. கிடைக்கும் எனக்கும் ஒரு வேலை... எனக்குப் பிடித்த வேலை. அப்போது வைத்துக் கொள்கிறேன் உங்களையெல்லாம்...’

“எண்டா சந்துரு, கொஞ்சம் செட்டியார் கடைக்குப் போய் வாயேன்டா” என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் என் அம்மா.

சற்றுமுன்னர் தான் மாவுமில்லுக்குப் போய் வந்திருந்தேன். மீண்டும் கடைக்குப் போக எரிச்சலாக இருந்தது. “ஏம்மா, ரமேஷை அனுப்பேம்மா” என்றேன் படிப்பது போல பாவலா காட்டிக்கொண்டிருந்த என் தப்பியை பார்த்துக் கொண்டு. அவன் +1 படிக்கிறான். இப்போது study holidays. “டேய். உன்கிட்ட சொன்னா நீ செய். அவனுக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு. நீ சும்மாதானே இருக்க!”

இன்னமும் அம்மா வாயில் விழுந்து எழுந்திரிக்க திராணியில்லாமல் “சரி, சரி குடும்மா” என்று பையையும் பணத்தையும் அம்மா எழுதிவைத்திருந்த பெரிய லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன். கிளம்பும்போது தம்பி நமுட்டு சிரிப்பு சிரித்தது வேறு எரிச்சலைக் கிளப்பியது.

வழியில் ப்ரதிமா. பெயருக்கேற்றது போல பொம்மை மாதிரி இருப்பாள். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள் போலும். சற்று பின்னிய அவளுடைய நடை அதை உணர்த்தியது.

“எங்கே” என்றேன்.
“college… Hall ticket” என்றாள் தந்தி பாஷையில். எப்போதும் வாயாடும் அவளின் தந்தி பாஷைக்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், பின்னால் அவள் அப்பா.

“என்னடா சந்துரு, எப்போ வேலைக்குப் போறதா உத்தேசம்?” என்றார் அவள் அப்பா.
“சீக்கிரம் போவேன், மாமா” என்றான் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு... மாமாவில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.
“என்னவோ போ! ஏதோ வேலையை தேடிண்டோமோ, அப்பனுக்கு பாரத்தை கொரைச்சோம்மோன்னு இல்லாம... இந்த காலத்ததுப் பசங்க” என்று முணுமுணுத்துக்கொண்டு போய்விட்டார்.

இந்த நாட்டில் வேலையில்லா இளைஞனுக்குத்தான் எத்தனையெத்தனை தொல்லைகள்.

செட்டியார் கடையில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லாவில் calculator- ஐ காட்டிலும் அதி வேகமாக கணக்குப் போட்டுக் கொணடிருந்த போதிலும், செட்டியார் என்னைப் பார்த்து, “சந்துரு தம்பி, லிஸ்ட்டை கொடுத்துட்டுப் போங்க மதியம் அனுப்பி வைக்கிறேன்” என்று பையையும், லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டார்.

செட்டியார் கடையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு போகலாமா அல்லது லைப்ரரிக்குப் போகலாமா என்று யோசித்தக்கொண்டு நடந்தபோது சற்றுத் தொலைவில் போஸ்ட்மேன் கந்தசாமி வருவது தெரிந்தது. இப்போதெல்லாம் என்னுடைய ஒரே ஆறுதல். நம்பிக்கை எல்லாம் அவர்தான்.

“கந்தசாமி அண்ணே, எனக்கு ஏதாச்சும் லெட்டர்...” என்று இழுத்தேன்.
“யாரு? சந்துரு தம்பியா?” கந்தசாமிக்கு கொஞ்சம் வெள்ளெழுத்து. அவர் ரிடையர் ஆகும் முந்தையமாதம் தான் கவர்மெண்ட்டில் ரிடையர் வயதை அறுபது ஆக்கிவிட்டார்கள். இன்னமும் ஆறுமாதம் இருக்கின்றதாம் அவருக்கு அறுபது வயதாக. என்னிடம் அடிக்கடி “தம்பி, ரிடையர் வயசு அறுபத்தைஞ்சு ஆக்கப் போறாங்களாமே நிஜமா?” என்று கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு கல்யாண வயசில் ஒரு பெண் இருப்பதாக கேள்வி!

“ஒரு லெட்டர் இருக்கு தம்பி” என்று தன் கையில் வைத்திருந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை என்னிடம் கொடுத்தார். கவரைப் பார்த்ததும் என்நெஞ்சு சற்று படபடத்தது. கடந்த மாதம் நான் interview attend செய்த L&T நிறுவனத்திலிருந்து வந்திருந்தது. கடவுளை நேர்ந்துக் கொண்டு கவரைப் பிரித்தேன். மனசெல்லாம் பரபரக்க அங்கேயே கடிதத்தைப் படித்தேன்.

‘Congratulations…’ என்று ஆரம்பித்த கடிதம் எப்போது நான் வேலையில் சேர்ந்துக் கொள்ள இயலும் என்பதை தெரிவிக்கக்கோரி முடிந்திருந்தது... என்னுடைய சந்தோஷத்தில் போஸ்ட்மேன் கந்தசாமியை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றவேண்டும் போலிருந்தது. அதிவேகமாக அவர் கையைப் பிடித்து குலுக்கினேன். “ரொம்ப தேங்ஸ்ண்ணே” என்றேன்.

“என்ன தம்பி, நல்ல விஷயமா?”

“ஆமாண்ணே, எனக்கு வேலை கிடைச்சிடுச்சு!” அம்மா கடைக்கு கொடுத்திருந்த பணத்திலிருந்து பத்து ரூபாயை அவருக்கு தாராளமாகப் பரிசளித்தேன்.

வீட்டை நோக்கி சென்றபோது, சென்னை நகரின் உச்சிவெயில் மிகவும் இரம்யமாக இருப்பதாகப் பட்டது. பஜாரில் கூட்டமாக இருந்தபோதிலும் எனக்கு எல்லோரும் வழிவிட்டது போலிருந்தது. என்னை நோக்கி அனைவரும் புன்னகைத்தனர். காலடியில் மார்க்கெட் சகதி பூக்களாக மாறிப் போனது. ஒற்றை காக்கை இனிமையாக கரைந்துக் கொண்டு பறந்தது. கறிக்கடை பாய் எறிந்த எலும்புக்காக இரண்டு நாய்கள் ‘அன்புடன்’ சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வேகமாக சைக்கிளில் மோத வந்த ஒருவரைப் பார்த்து, “ஏண்டா கஸ்மாலம், வூட்ல சொல்லிகினு வந்திட்டியா” என்று ஒரு பெண்மணி ‘அக்கரையுடன்’ விசாரித்தாள். திடீரென்று உலகம் உன்னதமாக மாறிப் போனது.

ஓட்டமும் நடையுமாக நான் வீட்டை அடைந்தபோது, அப்பாவுடன் ஈஸ்வரைய்யரும் அப்துல கரீம் சாயபுவும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். காலனி விஷயமாக இருக்கும் போலும்.

“அப்பா, எனக்கு வேலைகிடைச்சாச்சிப்பா” என்று L&T நிறுவனத்திலிருந்து வந்த கடிதத்தைக் கொடுத்தேன். அப்பாவின் முகம் அதுபோல மலர்ந்து நான் பார்த்ததில்லை. கடிதத்தைக் படித்துவிட்டு “very good” என்று என் கையை பிடித்துக் குலுக்கினார். “சந்துருவுக்கு L&T-ல Engineer வேலை கிடைச்சிருக்கு” என்று மற்ற இருவருக்கும் தெரிவித்தார்.

“நேக்கு எப்பவோ தெரியும். சந்துருவுக்கு பெரிய வேலை கிடைக்கும்னு. அவன்தான் first class graduate ஆச்சே!” என்றார் ஈஸ்வரைய்யர்.

“சந்துரு பேட்டா நல்ல புள்ள ஆச்சே. மத்த புள்ளைங்க மாதிரி அங்க இங்க போவாது. அது உண்டு அது படிப்பு உண்டுன்னு இருக்கும். அதுபடிப்புக்கு இன்னும் பெரிய இடத்துக்குப் போகும் பாருங்கோ” என்றார் அப்துல கரீம் சாயபு.
இருவா பேசியதைக் கேட்டதும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

“சந்துரு, முதல்ல அம்மாகிட்டச் சொல்லுடா. ரொம்ப சந்தோஷப்படுவாள்” என்றார் அப்பா.

“அம்மா, எனக்கு L&T ல Engineer வேலை கிடைச்சிருக்கும்மா” என்றேன் சமையலறையில் வேலையாக இருந்த அம்மாவிடம். அம்மா அப்படியே பூரித்துப் போனாள். மாவு கையோடேயே எனக்கு திருஷ்டி கழித்தாள்.

“டேய் சந்துரு, எனக்கு சந்தோஷத்துல தலைக்கால் புரியலேடா” என்று பதட்டப்பட்டாள். “ஏதாவது ஸ்வீட் பண்ணனுமே, செட்டியார் எப்படா மளிகை சாமான் அனுப்பறதா சொன்னார்?”
“மதியம் அனுப்பறேன்னாருமா”
“அடடா, சர்க்கரை வேற தீர்ந்து போச்சே” என்றவள், “டேய் ரமேஷ், சீக்கிரம் செட்டியார் கடைக்குப் போய் சர்க்கரையை மட்டும் சீக்கிரம் கொடுக்கச் சொல்லி வாங்கிட்டுவாடா” படித்துக் கொண்டிருந்த என் தம்பியிடம்.

“அவனை ஏம்மா டிஸ்டர்ப் பண்ற. நான் போயிட்டு வரேன்மா. அவன் படிக்கட்டும். நான் சும்மாதானே இருக்கேன்” என்றேன்.

“அவன் படிச்சு கிழிச்சான். நீயெல்லாம் இனிமேல் கடைக்கெல்லாம் போகக்கூடாது. அவனே போகட்டும்” என்றாள் அம்மா.

ஏரிச்சலுடன் கடைக்குக் கிளம்பிய என் தம்பியை அனுதாபத்துடன் பார்த்தேன்.

***