Monday, November 23, 2009

ஒபாமாவும் விஜய்யும்


எனக்கு குறுந்தகவலில் வந்த நகைச்சுவை. படித்தவுடன் குபீரென சிரித்துவிட்டேன்.

நிருபர்: (நடிகர் விஜய்யிடம்) ஒபாமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விஜய்: வெல். வாட் கேன் ஸே? ஹெள கேன் ஸே? என்னோட அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க. தமிழ்நாட்டுக்கு ஒரு வருங்கால முதலமைச்சரையே கொடுத்திருங்காங்களே!

நிருபர்: (தலையில் அடித்துக்கொண்டு) நான் ஒங்கப்பாம்மாவை கேட்கலை. ஒபாமாவை பற்றிக்கேட்டேன்.




மாயாலோகத்திற்கு சென்று வந்தேன். மொத்தம் ஒரு பத்து சதுர கிலோ மீட்டரில் லக்னோ தலைநகரம் அடங்கிவிடக்கூடும். ஆனால் ஊர் வளர்ந்துக் கொண்டு இருப்பது கண்கூடாகத்தெரிகிறது. மாயாவதியின் லோகத்தில் மக்களும் யாரையும் மதிப்பதாகத் தெரியவில்லை. மாக்களைப்போலத்தான் நடந்துக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்களே லா ஆஃப் தி ஜங்கிள் என்று. அது போலத்தான் இருக்கிறது. ஆனால் எது எப்படியோ ஊர் மிகவும் செழிப்பாகத்தான் இருக்கிறது. விலைவிவரங்களும் கட்டுப்பட்டுத்தான் இருக்கிறது. சென்னையைவிட சற்று சீப் தான்.

பழைய லக்னோ ஏறத்தாழ பழைய ஐதராபாத்தை நினைவு படுத்துகிறது. அங்கே திவான்கள். இங்கே நவாப்கள். லக்னோவின் பெயரே ‘நவாப்களின் நகரம்’ என்பது தான். பழைய கட்டடங்கள் நம்மேல் விழுந்துவிடுவது போல பயமுறுத்துகின்றன. எங்கு பார்த்தாலும் கடைகள் கடைகள் மேலும் கடைகள்.

லக்னோவில் கபாப் சிக்கன் மட்டன் ஆகிய இரு வகையறாக்களும் பிரபலம். (கபாப்பில் மாத்திரம் 20 இரகம் இருக்கிறது என்கிறார்கள்.) லக்னோ பிரியாணி, ஐதராபாத் பிரியாணி போல அல்லாமல் மசாலா கலக்காமல் ஃப்ரைட் ரைஸ் போல ஆனால் கலர்-கலராக இருக்கிறது. சுவை நன்றாக இருக்கிறது. (எண்ணெய் எண்ணெய்!) பழைய லக்னோவில் மிகவும் குறுகலான தெருக்களில் மக்கள் கபாப்புக்கும், பிரியாணிக்கும் மிகவும் பறக்கிறார்கள், தினமும். ஏறத்தாழ 250 ரூபாயில் மூன்று பேர் வயிறார சாப்பிடலாம். அதுவும் நான்-வெஜிடேரியன். பழைய லக்னோவில் இருக்கும் ‘துண்டே கபாப்’ என்னும் உணவிடத்தில் (18ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறதாம்!) உள்ளே நுழைவதற்கே அசாத்திய திறமை வேண்டும் போலிருக்கிறது. அப்பபடி ஒரு கூட்டம். இரத்த கொதிப்பு. கொலஸ்ரால் மற்றும் உடல்நலம் பேணுவோர் சற்று தள்ளி இருப்பது மிகவும் நல்லது. அவ்வளவு எண்ணெய்!

வெஜிடேரியன் உணவும் மிகவும் விலை கம்மிதான் அதுவும் நீங்கள் சப்பாத்தி ரொட்டிக்குத் தயார் என்றால் இன்னமும் நல்லது. (ஆணால் நம்ம ஆட்கள் சென்னையில் பிஸ்ஸா, பர்கர் சாப்பிட்டுவிட்டு, பிரான்ஸில் இட்லிக்கு அலைபவர்கள் ஆயிற்றே!) டெல்லியில் ஒருவர் சாப்பிடும் விலையில் இங்கு நான்குப் பேர் தாராளமாகச் சாப்பிடலாம் அதுவும் ஒரு நல்ல ஓட்டலில். சாட் வகைகள் விற்பதற்கென்றே இங்கு சில பிரத்தியேக கடைகள் இருக்கின்றன. அதையும், இதையும் கொட்டிக் கலந்து என்ன சுவை என்றே புரியாதபடிக்கு ஒரு தட்டில் தருகிறார்கள். இங்கு பால் தாராளமாகக் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கெட்டித் தயி்ருக்கு நமது சொத்தை எழுதி வைத்துவிடலாம். அவ்வளவு அற்புதம். தயிர்சாதக் கேஸ்கள் இங்கு வந்தால் திரும்ப மனசு வராது என்பது உத்திரவாதம். பதினைந்து ரூபாயில் கிடைக்கும் அற்புதமான லஸ்ஸியில் நமது எடையில் 5 கிலோ கூடிவிடுகிறது. நான் பார்த்த வரையில் மக்கள் எதையாவது தின்றுக்கொண்டும் மென்றுக் கொண்டும் (பான்பராக்?)தான் இருக்கிறார்கள். இவர்கள் வாய் சும்மா இருக்கும் நேரம் அநேகமாக இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரமாகத்தான் இருக்கும்.

சாப்பாட்டுக்குப் பிறகு அதிக மக்கள் கூட்டம் சினிமா தியேட்டர் களில். என்பது ரூபாய், நூறு ரூபாய் என்பதெல்லாம் இவர்களுக்கு பெரிய விஷயமாகப் படவில்லை என்பது அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தால் தெரிகிறது. மன்னன் படத்தில் ரஜனியும் கவுண்டமணியும் டிக்கட் வாங்கும் பாணியில் ஒருவர் தலைமேல் மற்றோருவர் என்று டிக்கட் கவுண்டரில் ஒரே கூட்டம்.

நகரம் மிகவும் வளர்ந்திருந்தாலும் எங்குப் பார்த்தாலும் சைக்கிள் ரிக்ஷ்ஷாக்கள் தான். ஆட்டோக்கள் மிகவும் சொற்பம். பேருந்து அதைவிட சொற்பம். இந்த பேருந்து விஷயத்தில் நமது அரசை கோயில் கட்டி கும்பிடவேண்டும். இது போல வெளியூர் சென்றால் தான் நமது தமிழ்நாட்டின் அருமை நமக்குத் தெரிகிறது.

ஆட்டோக்கள் மிகவும் குறைவு. மேலும் பிராதன சாலைகளில் மட்டும் ஆட்டோ பயனிக்கிறது. நான்குப் பேரை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோ உண்டு. ஆட்டோ காரருக்கு வசதிபடாதபோது ஃபுல் ஆட்டோ. சென்னையைப் போலவே (!) மீட்டர் எல்லாம் கிடையாது. பேரம் தான். ஆனால் சென்னை அளவுக்கு ரேட்டும் இல்லை, அடாவடிதனமும் இல்லை. சந்துபொந்தில் பறப்பதில் ஆகட்டும் கலந்து கட்டிப்போகும் இந்த ட்ராஃபிக்கில் (சைக்கிள், சைக்கிள் ரிக்ஷ்ஷா, மோட்டார் சைக்கிள், கார், பஸ் எல்லாவற்றுக்கும் ஓரே பாதைதான்.) வெளுப்பதாகட்டும், சென்னை ஆட்டோக்காரர்கள் இந்த ஆட்டோகாரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு வேகம் பறக்கிறார்கள். வழியில் இருக்கும் எல்லாமும் துவம்சம் தான். நமக்கு கதிகலங்கிப் போகிறது. நெருக்கமான சாலையில் சர்க்கஸில் ஓட்டுவது போல மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார்கள். இங்கு வண்டி ஓட்டுவதற்று அசாத்திய திறமை வேண்டும் என்று தெரிகிறது. லெஃப்ட்-ரைட்-சென்டர் என்று மக்கள் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக எல்லா வண்டிகளுக்கும் ஹாரனும் ஆக்ஸிலேட்டரும் தான் இருக்கும் போலிருக்கிறது. அது போலவே மோட்டார் சைக்கிளை குறுக்கே ஓட்டுவதற்கும் யாரும் சண்டை பிடிப்பதில்லை. இதைவிட பிரமாதம், இரண்டு வாகனங்கள் சற்று மோதிக்கொண்டால் கூட, அவரவர் வண்டியை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். டிராஃப்பிக்கை நிறுத்தி, ரகளை செய்து பெரும் கூட்டத்தைக் கூட்டுவது இல்லை.

எனக்குத்தெரிந்து இந்த நகரத்தில் மிகவும் ஏமாற்றப்படுபவர்கள் இந்த ரிக்ஷ்ஷாவாலாக்கள் தான் என்று நினைக்கிறேன். மாடு பொதி சுமப்பது போல இவர்கள் மக்களைச் சுமக்கிறார்கள். பழைய லக்னோவில் பெரும்பாலும் சைக்கிள் ரிக்ஷ்ஷாக்கள் தான். குறுகலான தெருக்களில் இந்த ரிக்ஷ்ஷாவாலாக்கள் அனாயாசமாகப் போகும்போது நமக்குத்தான் எங்கே யார்மீதாவது மோதி சண்டை வரப்போகிறதோ என்று பயமாக இருக்கிறது. இரண்டு பேர்களை சைக்கிள் ரிக்ஷ்ஷாவில் ஏற்றிக் கொண்டு (ஒருமுறை 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தையே ஏற்றிக் கொண்டு போனதைப் பார்த்தேன்!) ஏறத்தாழ 4 கி.மீ. மிதித்துக் கொண்டு ரூபாய் 15 மட்டும் (அதற்கும் பேரம் தான்) வாங்கிக் கொண்டு குதூகலமாகப் போகிறார்கள். ஒரு ஐந்து ரூபாய் அதிகம் கொடுத்தால் ஏறத்தாழ கோவில் கட்டும் ரேஞ்சில் பரவசமடைகிறார்கள். இதுபோல மக்கள் இருக்கும் வரையில் மாயாவதியை யாரும் அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது

தெருக்களும் சாலைகளும் மிகவும் குறுகலாக இருக்கிறது. சற்று அகலமாக இருக்கும் சாலைகளில் ஆக்ரமிப்புக்கள். ப்ளாட்பாரக் கடைகள்.

ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் ஏதாவது ஒரு சிலை. சிலைகள் இல்லாத சாலை சந்திப்பை எங்கும் காணவில்லை. (அதனால் தான் சிலைகளை வைப்பதற்காகவே பிரத்தியேக இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.)

எங்குப் பார்த்தாலும் இருக்கும் ஜனக்கூட்டத்தைப் பார்த்தால் வாரநாட்களில் கூட்டமாக இருக்கும் சென்னையின் பாரிஸ் கார்னரை நினைவு படுத்துகிறது. எங்கு பார்த்தாலும், எல்லா சாலைகளிலும் ஒரே கூட்டம். எங்கு போகிறார்கள் எதற்கு வருகிறார்கள் என்று யூகிக்கமுடியாதபடிக்கு எங்கும் கூட்டம். ஆனால் ஒரு விஷயம் இரவு ஏழு எட்டு மணிக்கெல்லாம் முக்கிய சாலைகளில் கூட, இரயில்வே ஸ்டேஷன் ஒட்டிய இடங்கள் போன்றவைத் தவிர்த்து ஜனநடமாட்டம் குறைந்து விடுகிறது.

இன்னொரு விஷயம் முக்கிய இடங்களைத் தவிர்த்து எங்கும் ஒரு மூத்திர நெடி. பிளாட்பாரத்தில் நடக்கும்போது தாண்டித்தாண்டி பாண்டி ஆடவேண்டியிருக்கிறது. போதாதகுறைக்கு பான்பராக் துப்பல் வேறு. வரவர இந்தியாவின் பிரத்தியேக வண்ணம் சிகப்பு என்றாகிவிடப் போகிறது. அந்த அளவுக்கு பான்பராக், குட்கா, புகையிலை இத்யாதிகள். பிளாட்பாரக் கடைகளில் சிகரெட்டுக்களை பகிரங்கமாக விற்கிறார்கள். பகிரங்கமாகப் புகைக்கிறார்கள். அன்புமணியின் எச்சரிக்கை மண்டைஓடு விவகாரங்கள் எல்லாம் தமிழ்நாடு வரைக்கும் தான் போலிருக்கிறது.

மக்கள் பெரும்பாலும் மிகவும் வெகுளியாக இருக்கிறார்கள். அவர்கள் வழியில் அவரவர்கள் போகிறார்கள். அனாவசிய சண்டைக் கெல்லாம் போவதில்லை. யாரையாவது அழைத்து ‘பளார்’ என்று அறைந்தால் கூட அவர்கள் நமக்கு ‘சாரி’ சொல்லிவிட்டுப் போவார்கள் போலிருக்கிறது. நான் இருந்தவரையில் எங்கும் சண்டை சச்சரவுகளைப் பார்க்கவில்லை. நமக்குத்தான் ஏதும் பரபரப்பில்லாமல் போர் அடிக்கிறது.

சாஹாரா மால் என்று ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில் ஒரு மால் இருக்கிறது. 5 மாடிகள். நமது ஒட்டு மொத்த ஸ்பென்சர்ஸ் ஒரே இடத்தில் மாடிமாடியாக கட்டியது போல. அந்த மாலில் இல்லாததே இல்லை என்று சொல்லிவிடலாம். பிவியார் தியேட்டர் வேறு. மக்டோனால்ட்லிருந்து கென்டக்கி ப்ரைட் சிக்கன் வரைக்கும், கர்சீப்லிருந்து காட்டன் பேண்ட் வரைக்கும், இவ்வளவு ஏன் கம்ப்யூட்டர் கேம்ஸ் கூட இருக்கிறது. வாண்டுகளை அழைத்துக்கொண்டு 5ம் மாடிக்கு போகாமல் இருப்பது நலம். (இல்லையேல் தொலைந்தோம்!)

லக்னோவில் ‘லக்னோ சிக்கான்’ என்கிற துணி வகை மிகவும் பிரபலம். லக்னோ காட்டன் துணியில் எம்பிராய்டரி வேலை செய்திருக்கிறார்கள். சாதாரணத்துணியில் இருந்து மிகவும் காஸ்ட்லியான துணிவகைகள் வரை கையால் எம்பிராய்டரி செய்வது சிக்கான். குர்த்தாவாகட்டும் சுரிதார் ஆகட்டும் அல்லது புடவைவகைகளாகட்டும், துணிதரத்திற்கும் வேலைப்பாடுக்கேற்ப விலை. அசால்ட்டாக ஆயிரங்களில் விலை சொல்கிறார்கள். இலட்சங்கள் எல்லாம் சாதாரணம் என்கிறார்கள்.

லக்னோவில் நமது அடையார் அண்ணாநகர் போல கோமதி நகர். கோமதி நதியின் இருபுறமும் அமைந்திருக்கும் காஸ்ட்லி ஏரியா. பெரும்பாலான அமைச்சர்களின் மற்றும் அதிகாரிகளின் வீடுகள் இந்த ஏரியாவில் தான் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதுபோலவே இங்கு மால்களும் எக்கச்சக்கம்.

நம்முடைய ரிட்சி ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் இடத்தைப்போல இங்கும் லால்பாக் என்று ஒரு இடம் இருக்கிறது. இந்த இடத்தில் நுழைந்தால் நாம் இருப்பது சென்னையில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் ரிட்சி ஸ்ட்ரீட்டா என்று வியப்பு மேலிருகிறது. அவ்வளவு ஒற்றுமை.

அருகருகே இரண்டு இரயில்வே ஸ்டேஷன்கள். ஒன்று லக்னோ சிடி வடக்கு இரயில்வேயை சேர்ந்தது. மற்றொன்று லக்னோ ஜங்ஷன். வடகிழக்கு இரயில்வேவை சார்ந்தது. இரண்டும் மிகப்பழைய கட்டிடங்கள். ஊரின் மையப்பகுதியில் இருக்கிறன. இரண்டு இரயில்வே கோட்டங்களின் தலைமையகம் இங்கு இருக்கிறது. அமெளசி ஏர்போர்ட் என்ற பெயர் கொண்ட மிகச் சிறிய லக்னோ ஏர்போர்ட் ஊரைவிட்டு 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. அதுபோலவே லக்னோவுக்கு பெருமை சேர்க்கும் ஐஐஎம் லக்னோவும் ஒரு 15 கிமீ தள்ளி இருக்கிறது.

பொதுவாக லக்னோவில் முக்கிய சாலைகளும் நெருக்கமாக இருக்கிறது. தெருக்களும் குமட்டிக்கொண்டு வருகிறது. கன்ஷிராம் பார்க் அமைப்பதில் காட்டும் அக்கறையை இந்த ஊரை தேற்றுவதில் காட்டலாம். இத்தனைக்கும் லக்னோவில் வியாபாராத்தில் கோடிகோடியாக பணம் புரளுகிறது என்பதற்கு இங்கு இருக்கும் எல்லா முன்னனி நிறுவனங்களே சாட்சி. உள்கட்டுமான வசதிகள் மட்டும் அதிகரித்தால் லக்னோ மும்பையை தூக்கி சாப்பிட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.

Monday, August 17, 2009

தீர்க்கதரிசி கமல்!


கமலஹாசனுடைய படங்கள் அனைத்தும் வரும் முன் உரைப்பவைகளாகத்தான் இருந்திருக்கின்றன. நம்முடைய சிற்ற்றிவுக்குத்தான் சரியாக புலப்படவில்லை.


1978ல் வெளியான சிவப்பு ரோஜாக்கள். அதில் அவர் பெண்களை கொலைச் செய்யும் சைக்கோ கேரக்டரில் நடித்திருப்பார். 1979ல் அது போலவே பெண்களை கொலைச் செய்துக் கொண்டு எல்லோரையும் அளற வைத்த சைக்கோ ராமன் என்பவன் பிடிபட்டான்.


1988ல் சத்யா என்ற படத்தில் கமல் வேலையில்லாத படித்த பட்டதாரி வேடத்தில் நடித்திருப்பார். நண்பர்களுடன் வெளியில் சுற்றித் திரியும் சத்யா சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களைக் கண் கொடுத்துப் பார்த்து கோபம் கொள்கின்றான். நல்லவனாக சத்யாவைத் தனது பக்கம் இருக்குமாறு கூறிக்கொள்ளும் ஒரு தீயவனால் சத்யா கைக்கூலியாக்கப்படுகின்றான். தனக்கு இந்நிலமையினை ஏற்படுத்தியவர்களைப் பழி வாங்குகின்றான். அதுபோலவே 1989ல் படித்த பட்டதாரிகள் நக்ஸலைட்டுகளாக உருமாறியதும் நடந்த்து.


1992ல் கமலுடைய தேவர்மகன் படத்தில் ஜாதிய சண்டையை பிரதானமாக்கி கதை சொல்லியிருப்பார். 1993ல் தென்மாவட்டங்களில் தொடர்ந்த சாதிக் கலவரங்களுக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் அதை முன்கூட்டியே கமல் சொல்லியிருந்த்தை யாரும் மறுக்கமுடியாது. 


1994ல் மகாநதி படத்தில் ஒரு ஃபைனாண்ஸ் கம்பெனி மூலம் சிறைக்குப்போன கமல் எப்படி ஃபைனாண்ஸ் கம்பெனிகள் மக்களை ஏமாற்றுகின்றன என்றும் கூறியிருப்பார். 1996ல் எல்லா டிவி சேனல்களும் மக்களை ஏமாற்றிய பைனாண்ஸ் கம்பெனிகளை பற்றியும் போலீஸ் ஸடேஷனுக்கு படையெடுத்த மக்களையும் தினம் தினம் பட்டியலிட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.


2000 ஆண்டு வெளியான ஹேராம் படத்தில் பழைய மதக்கலவரங்களை தொட்டுகாட்டியிருப்பார். 2002ல் இந்து முஸ்லிம் கலவரம் நடந்த்தை நாடே அறியும்.


2003ல் அன்பே சிவம் படத்தில் சுனாமி என்னும் வார்த்தையை முதன்முறையாக உபயோகப்படுத்தி இருப்பார். அதுவரை தமிழன் யாருக்கும் தெரியாத வார்த்தை அது. 2004ல் அந்த சுனாமி என்ற வார்த்தையே தமிழன் யாருக்கும் மறக்கமுடியாத வார்த்தையாக மாறிப்போனது.


2006ல் வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் தொடர் கொலைகளைப்பற்றி சொல்லியிருப்பார். ,இதே ஆண்டு கடைசியில் டெல்லியை அடுத்த நொய்டாவில் தோண்டத்தோண்ட பிணமாக கிடைத்த அதிர்ச்சியில் மக்கள் உறைந்து போனார்கள்.


2008ல் தசாவதாரம் படத்தில் மக்களை தாக்கும் மரண வைரஸ் அமெரிக்காவில் இருந்து வருவதாக காட்டியிருப்பார். 2009ல் நாமெல்லோரும் செய்வதறியாது திகைத்திருக்கும் ஸ்வைன் ஃப்ளு, அதுவும் அமெரிக்காவில் இருந்துதான் வந்த்து எனபது எல்லோருக்கும் தெரிந்தது தானே!


இப்போது என்னுடைய கவலைகள் எல்லாம் கமலின் அடுத்து வரப்போகும் படங்களைப் ப்ற்றிதான்!


ஒன்னுமே புரியலை உலகத்திலே!

செய்தி 1
ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு ஃப்ளு மாதிரியான காய்ச்சலாம். மாமனார் அமிதாப் பச்சன் மிகவும் வருத்தத்துடன் விஷயத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.அமிதாப்புக்கும் முதுகு வலியாம். அவருக்கும் உடம்புக்கு முடியலையாம். அவரை பார்த்துக் கொள்ள அவருடைய மனைவி ஜெயா பச்சன் அருகில் இல்லையாம். அவர் அமர்சிங் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதால் அவரை கவனித்துக்கொள்ள கடந்த ஒருமாதமாக அவருடன் இருக்கிறாராம். ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு உடம்பு சரியில்லை என்றதும் அமர்சிங் ஏகமாய் கவலையுடன் இருக்கிறாராம்.  மேற்கண்ட செய்தியில் ஐஸ்வர்யா ராய் பச்சனுடைய கணவர் பெயரை நானும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்தேன். ஒரு பத்திரிகையிலும் கண்ணில் படவில்லை. அது சரி. கவலைபடத்தான் நிறையபேர் இருக்கிறார்களே!

                                     

செய்தி 2
ஷாருக்கானை அமெரிக்காவில் இரண்டு மணிநேரத்திற்கு நிற்க வைத்து கேள்வி கேட்டார்களாம். மனிதர் தான் ஆசியநாட்டைச் சேர்ந்த முஸ்லிம் எனபதால் தான் இந்த அளவுக்கு மோசமான வரவேற்பு என்பது அவரது வாதம். இனிமேல் அமெரிக்க மண்ணை மிதிப்பதில்லை என்ற சபதம் வேறு. (என்னுடைய ரசிகர்கள் அழைத்தால் அமெரிக்கா செல்வது குறித்து யோசிப்பேன் எனறு ஒரு சப்பைக்கட்டு - அரசியல்வாதிகள் போல!) 
அமெரிக்க மண்ணில் ஷாருக்கானை கேள்விகேட்டு வாட்டிய அன்றே, உலகம் முழுவதும் தெரிந்த பாப் டைலான் எனற பாடகரையும் கேள்வி கேட்டுத் தொலைத்தெடுத்திருக்றார்கள். அவருடைய  ஐ.டி கார்டை கேட்டு குடைந்தி ருக்கிறார்கள். இத்தனைக்கு அவர் அமெரிக்க நாட்டவர் என்பது கூடுதல் செய்தி.  
இவ்வளவு ஏன்? மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான். எப். கென்னடியின் சகோதரர் செனட்டராக இருந்த போதிலும் விமானம் ஏறவிடாமல் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர் பெயரில் இருந்த கென்னடி என்ற பெயரில் ஒரு தீவிரவாதியின் புனைப்பெயர் இருந்தது தான் காரணம். அமெரிக்கர்களின் கெடுபிடியில் ஒபாமா மாட்டாமல் இருந்தால் சரி!


 செய்தி 3

நடிகை ஸ்னேகாவுக்கு குருந்தகவல் அனுப்பி தொந்தரவு கொடுத்த்தாக ஒரு பெங்களுர் தொழிலதிபரை கைது செய்திருக்கிறார்கள். நடிகை ஸ்னேகா தன்னுடைய செல்போனின் எண்களை மாற்றியபோதும் அதுகுறித்து தெரிந்துக்கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்தாராம். போதாதகுறைக்கு நடிகை ஸ்னேகாவின் தந்தைக்கு வேறு போன் செய்து பெண் கேட்டாராம். நடிகை போலீஸில் புகார் கொடுக்க தொழிலதிபரை புழலில் வைத்து விட்டார்கள். தொலைக்காட்சியில் அவரை கைது செய்து போன காட்சியை காட்டும்போது தன் முகத்தை ஒரு கடிதம் போலிருந்த பேப்பரில் மறைத்துக் கொண்டார். ஒரு வேலை நடிகைக்கு எழுதிய காதல் கடிதமா என்பது தெரியவில்லை.

 செய்தி 4

எம்ஜியார் நினைவிடத்திற்கு வெடிகுண்டு வைத்த்தாக ஒருவர புரளி செய்து அதுவும் அவசரபோலீஸ் 100 க்கு போன் செய்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர ஆம்பூரை சேரந்தவராம். அடிக்கடி சென்னை வருவாராம். அவ்வாறு அவர் சென்னை வந்த சுபதினத்தில், அவரது செல்போனில் பேலண்ஸ் இல்லாததால் யாருக்கும் போன் செய்ய இயலவில்லையாம். எமர்ஜென்ஸி கால்கள் மட்டும்செய்ய முடிந்த்ததாம். அவருக்கு மிகவும் போர் அடிக்கவே போலீஸ் எமெர்ஜென்ஸிக்கு போன்செய்து வெடிகுண்டு புரளி செய்தாராம். ஆம்பூர் அண்ணனுக்கு சென்னை போலீஸ் பற்றித் தெரியாது போலிருக்கிற்து. அவரை கோழி அமுக்குவது போல அமுக்கி புழலுக்கு அனுப்பிவிட்டார்கள். இனிமேல் அவருக்கு கண்டிப்பாக போர் அடிக்காது!






Thursday, August 13, 2009

எனக்குத் தெரிந்த பாலகுமரன்

பாலகுமரன் எப்போது எழுதத்தொடங்கினார் என்பது எனக்குத் தெரியாது. நான் படித்த பாலகுமரனது முதல் கதை 1977 ஆண்டு மாலைமதியில், இரண்டாம் வெளியீட்டில் மகரிஷி எழுதிய “புவனா ஒரு கேள்விக்குறி“ (பின்னர் வெற்றிகரமான திரைப்படமானது. சிவக்குமார் அயோக்கிய ஹீரோவாகவும் ரஜனிகாந்த் அற்புதமான குணசித்திர வேடத்திலும் நடித்திருப்பார்கள்) கடைசிபக்கங்களில் ”ப்ளீஸ் பாலா” என்ற சிறுகதை வெளியாகி இருந்தது. மிகவும் அற்புதமான நடை. அதன்பிறகு பாலகுமரனது சிறுகதைகளை மட்டும் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். (எனக்கு ஏனோ பாலகுமரனது சிறுகதைகளில் இருந்த ஆழம் தொடர்கதைகளிலோ நாவல்களிலோ இல்லை என்றே இன்றும் படுகிறது.) அந்த காலத்தில் சாவி அவர்கள் பாலகுமரனுக்கு ”ஏதோ ஒரு நதியில்” என்ற தலைப்பிலும் சுப்ரமணியராஜுவுக்கு (இவர் இளம் வயதில் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் காலமானார்) ”எங்கோ ஒரு இரவில்” என்றும் தலைப்புக் கொடுத்து ஒரு மாத இதழில் வெளியிட்டார். இந்த “ஏதோ ஒரு நதியில்“ இருக்கிறது பாருங்கள் நான் இன்று வரையில் ஸ்லாகிக்கும் ஒரு அற்புதமான கதை. இ்ந்த கதையை படிக்கக்கூடாது. அனுபவிக்க வேண்டும்! பிறகு மெல்ல மெல்ல “யாதுமாகி நின்றாள்” “மெர்க்குரிப்பூக்கள்“ என்று பல கதைகள். நான் சிலவருட காலமாக பாலகுமரனது கதைகளை படிப்பதில்லை. எனக்குத் தெரிந்த பாலகுமரன் வேறு. இப்போது இருக்கும் பாலகுமரன் வேறு. அதை விடுங்கள். மீண்டும் எழுபதின் கடைசி ஆண்டுகளில் பாலகுமரன் எழுதிய கவிதைகள் இருக்கிறதே அவை ஒரு சுகானுபவம். எழுபதின் கடைசியிலும் என்பதின் ஆரம்பத்திலும் மாலன் அவர்கள் “திசைகள்” என்றொரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். (திரு சாவி அப்போது ஏகப்பட்ட பத்திரிக்கைகள் நடத்தி வந்தார். அவற்றில் திசைகளும் ஒன்று.) “திசைகள்“ குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வந்தது. (அந்த காலத்தில் ஆங்கிலத்தில் Youth Times என்றொரு பத்திரிக்கை இதுபோல வெளிவந்துக்கொண்டிருந்தது. அதனுடைய பாதிப்பாக இருக்கலாம்). அதில் மாலனும் பாலகுமரனும் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைகள் எழுதினர். ”வீடென்று எதைச்சொல்வீர்… அதுவல்ல எனது வீடு…“ என்ற மாலனது கவிதைகள் அற்புதமானவை. (வைரமுத்து கூட ஒரு கவிதை எழுதியதாக ஞாபகம். “அது ஒரு காலம் கண்ணே கனாக்காலம்” என்று தொடங்கும் அந்த கவிதை என்னுடைய ஞாபகப்பெட்டகத்தில் இருந்து எடுத்து பின்னொரு காலத்தில் தருகிறேன். அந்தக்கால வைரமுத்து நிஜமாகவே ஒரு வைரப் பெட்டகம்!) குறிப்பாக பாலகுமரனது இரண்டு கவிதைகள் எனக்கு இன்னமும் மறக்காமலிருக்கிறது.

உனக்கென்ன கோவில் குளம்

சாமிபூதம் ஆயிரம் ஆயிரம்

வலப்பக்க கடல் மண்ணை

இடப்பக்கம் இரைத்திரைத்து

நகக்கணுக்கள் வலிக்கின்றன

அடியே, நாளைக்கேணும் தவறாமல் வா!”

கடற்கரையில் காத்திருந்த காதலனை, வேறு எப்படியும் சொல்ல முடியாது. இந்தகால பாஷையில் சொல்லவேண்டுமென்றால் “சான்ஸே இல்லை!”

இதே போல மற்றொரு கவிதை. அட்டைபடத்தில் வந்திருந்தது என்று நினைக்கிறேன். சுகாசினி படம் போட்டிருந்தாக நினைவு.

‘பறித்து எறிந்தவைக் கொஞ்சம்

உருவி அறுத்தவைக் கொஞ்சம்

புரண்டு படுக்கையில்

நசுங்கி மடிந்தவைக் கொஞ்சம்

பதறி தவிக்கையில்

வேறுடன் போனவை ஆயிரம்…

நீயின்றி தளர்ந்த நாளில்

இப்புற்களின் மேலே அமர்ந்து

மொத்தமும் மீண்டும் நினைக்க

மனசுக்குள் சோகம் வளரும்

புற்களாய்… புதராய்… காடாய்…’

ஹும்எனக்குத் தெரிந்த பாலகுமரன் வேறு. அது அந்தக் காலம்!

Sunday, August 09, 2009

மீண்டும் மீண்டும் நான்...

ஏறத்தாழ நான் வலைப்பூத் தொடுத்து ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நான் எழுதாததில் தமிழுக்கும் தமிழ் கற்ற சான்றோருக்கும் ஏதும் வருத்தமோ இழப்போ இல்லை என்பது மனதுக்கு (வருத்தம் அளித்தாலும்) இதமாக இருக்கிறது. இதைவிட தமிழ்மணமோ, சக வலைப்பதிவாளர்களோ யாரும் கிஞ்ஞித்தும் மாறாமல் இருப்பது ஆறுதலை அளிக்கிறது. நான் மீண்டும் எழுதவேண்டும் என்று யாரேனும் உண்ணாவிரதமோ, போராட்டமோ செய்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்ததில், எல்லோரும் “விட்டது கருப்பு“ என்று சந்தோஷமாக இருப்பதாகத்தான் தெரிகிறது. இதை விடக்கூடாது. ஆக மொத்தம் என்னுடைய வலைப்பூவினை மீண்டும் தொடுக்க நான் வந்துவிட்டேன் என்பதனை கூறி எல்லோரையும் மிரளவைப்பதை தவிற வேறு வழியில்லை.

நான் எழுதுவில்லையே தவிற, வலைப்பூக்களை படித்துக் கொண்டிருந்தேன். அவ்வபோது பின்னூட்டமும் இட்டுக்கொண்டு தான் இருந்தேன். வியாபாரிகளான வலைப்பதிவாளர்களையும், வாள்பிடிக்காத குறையாக சண்டையிட்டவா்களையும் கண்டு கலங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

என்னைப்பொருத்தவரையில் விலைபேசாதவரையில் தான் கலை.

என்னுடைய இந்த அபிப்பிராயத்திற்காக சம்பந்தப்பட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக!. (மன்னிக்காவிட்டாலும் ஏதும் ஆகிவிடப்போவதில்லை!)

அதே நேரத்தில் புதிதாக முளைத்த வலைப்பூக்களும் அதன் வாசமும் நெஞ்சை கொள்ளைக் கொண்டதையும் கொள்வதையும் சொல்லாமல் இருக்க முடியாது. பழையன கழிதலும்…புதியன புகுதலும் தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ்மணத்துக்கும் புதிதல்லவே!

எது எப்படியோ. நானும் என்னால் முடிந்த அளவு தமிழையும் தமிழ்மணத்தையும் கலங்கடிக்க வந்துவிட்டேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

(எங்கப்பா எல்லோரும் தலைதெறிக்க ஓடுராங்க…?)