மாயாலோகத்திற்கு சென்று வந்தேன். மொத்தம் ஒரு பத்து சதுர கிலோ மீட்டரில் லக்னோ தலைநகரம் அடங்கிவிடக்கூடும். ஆனால் ஊர் வளர்ந்துக் கொண்டு இருப்பது கண்கூடாகத்தெரிகிறது. மாயாவதியின் லோகத்தில் மக்களும் யாரையும் மதிப்பதாகத் தெரியவில்லை. மாக்களைப்போலத்தான் நடந்துக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்களே லா ஆஃப் தி ஜங்கிள் என்று. அது போலத்தான் இருக்கிறது. ஆனால் எது எப்படியோ ஊர் மிகவும் செழிப்பாகத்தான் இருக்கிறது. விலைவிவரங்களும் கட்டுப்பட்டுத்தான் இருக்கிறது. சென்னையைவிட சற்று சீப் தான்.
பழைய லக்னோ ஏறத்தாழ பழைய ஐதராபாத்தை நினைவு படுத்துகிறது. அங்கே திவான்கள். இங்கே நவாப்கள். லக்னோவின் பெயரே ‘நவாப்களின் நகரம்’ என்பது தான். பழைய கட்டடங்கள் நம்மேல் விழுந்துவிடுவது போல பயமுறுத்துகின்றன. எங்கு பார்த்தாலும் கடைகள்… கடைகள்… மேலும் கடைகள்.
லக்னோவில் கபாப் – சிக்கன் மட்டன் ஆகிய இரு வகையறாக்களும் பிரபலம். (கபாப்பில் மாத்திரம் 20 இரகம் இருக்கிறது என்கிறார்கள்.) லக்னோ பிரியாணி, ஐதராபாத் பிரியாணி போல அல்லாமல் மசாலா கலக்காமல் ஃப்ரைட் ரைஸ் போல ஆனால் கலர்-கலராக இருக்கிறது. சுவை நன்றாக இருக்கிறது. (எண்ணெய்… எண்ணெய்!) பழைய லக்னோவில் மிகவும் குறுகலான தெருக்களில் மக்கள் கபாப்புக்கும், பிரியாணிக்கும் மிகவும் பறக்கிறார்கள், தினமும். ஏறத்தாழ 250 ரூபாயில் மூன்று பேர் வயிறார சாப்பிடலாம். அதுவும் நான்-வெஜிடேரியன். பழைய லக்னோவில் இருக்கும் ‘துண்டே கபாப்’ என்னும் உணவிடத்தில் (18ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறதாம்!) உள்ளே நுழைவதற்கே அசாத்திய திறமை வேண்டும் போலிருக்கிறது. அப்பபடி ஒரு கூட்டம். இரத்த கொதிப்பு. கொலஸ்ரால் மற்றும் உடல்நலம் பேணுவோர் சற்று தள்ளி இருப்பது மிகவும் நல்லது. அவ்வளவு எண்ணெய்!
வெஜிடேரியன் உணவும் மிகவும் விலை கம்மிதான் – அதுவும் நீங்கள் சப்பாத்தி ரொட்டிக்குத் தயார் என்றால் இன்னமும் நல்லது. (ஆணால் நம்ம ஆட்கள் சென்னையில் பிஸ்ஸா, பர்கர் சாப்பிட்டுவிட்டு, பிரான்ஸில் இட்லிக்கு அலைபவர்கள் ஆயிற்றே!) டெல்லியில் ஒருவர் சாப்பிடும் விலையில் இங்கு நான்குப் பேர் தாராளமாகச் சாப்பிடலாம் – அதுவும் ஒரு நல்ல ஓட்டலில். சாட் வகைகள் விற்பதற்கென்றே இங்கு சில பிரத்தியேக கடைகள் இருக்கின்றன. அதையும், இதையும் கொட்டிக் கலந்து என்ன சுவை என்றே புரியாதபடிக்கு ஒரு தட்டில் தருகிறார்கள். இங்கு பால் தாராளமாகக் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கெட்டித் தயி்ருக்கு நமது சொத்தை எழுதி வைத்துவிடலாம். அவ்வளவு அற்புதம். தயிர்சாதக் கேஸ்கள் இங்கு வந்தால் திரும்ப மனசு வராது என்பது உத்திரவாதம். பதினைந்து ரூபாயில் கிடைக்கும் அற்புதமான லஸ்ஸியில் நமது எடையில் 5 கிலோ கூடிவிடுகிறது. நான் பார்த்த வரையில் மக்கள் எதையாவது தின்றுக்கொண்டும் மென்றுக் கொண்டும் (பான்பராக்?)தான் இருக்கிறார்கள். இவர்கள் வாய் சும்மா இருக்கும் நேரம் அநேகமாக இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரமாகத்தான் இருக்கும்.
சாப்பாட்டுக்குப் பிறகு அதிக மக்கள் கூட்டம் சினிமா தியேட்டர் களில். என்பது ரூபாய், நூறு ரூபாய் என்பதெல்லாம் இவர்களுக்கு பெரிய விஷயமாகப் படவில்லை என்பது அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தால் தெரிகிறது. மன்னன் படத்தில் ரஜனியும் கவுண்டமணியும் டிக்கட் வாங்கும் பாணியில் ஒருவர் தலைமேல் மற்றோருவர் என்று டிக்கட் கவுண்டரில் ஒரே கூட்டம்.
நகரம் மிகவும் வளர்ந்திருந்தாலும் எங்குப் பார்த்தாலும் சைக்கிள் ரிக்ஷ்ஷாக்கள் தான். ஆட்டோக்கள் மிகவும் சொற்பம். பேருந்து அதைவிட சொற்பம். இந்த பேருந்து விஷயத்தில் நமது அரசை கோயில் கட்டி கும்பிடவேண்டும். இது போல வெளியூர் சென்றால் தான் நமது தமிழ்நாட்டின் அருமை நமக்குத் தெரிகிறது.
ஆட்டோக்கள் மிகவும் குறைவு. மேலும் பிராதன சாலைகளில் மட்டும் ஆட்டோ பயனிக்கிறது. நான்குப் பேரை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோ உண்டு. ஆட்டோ காரருக்கு வசதிபடாதபோது ஃபுல் ஆட்டோ. சென்னையைப் போலவே (!) மீட்டர் எல்லாம் கிடையாது. பேரம் தான். ஆனால் சென்னை அளவுக்கு ரேட்டும் இல்லை, அடாவடிதனமும் இல்லை. சந்துபொந்தில் பறப்பதில் ஆகட்டும் கலந்து கட்டிப்போகும் இந்த ட்ராஃபிக்கில் (சைக்கிள், சைக்கிள் ரிக்ஷ்ஷா, மோட்டார் சைக்கிள், கார், பஸ் எல்லாவற்றுக்கும் ஓரே பாதைதான்.) வெளுப்பதாகட்டும், சென்னை ஆட்டோக்காரர்கள் இந்த ஆட்டோகாரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு வேகம் பறக்கிறார்கள். வழியில் இருக்கும் எல்லாமும் துவம்சம் தான். நமக்கு கதிகலங்கிப் போகிறது. நெருக்கமான சாலையில் சர்க்கஸில் ஓட்டுவது போல மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார்கள். இங்கு வண்டி ஓட்டுவதற்று அசாத்திய திறமை வேண்டும் என்று தெரிகிறது. லெஃப்ட்-ரைட்-சென்டர் என்று மக்கள் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக எல்லா வண்டிகளுக்கும் ஹாரனும் ஆக்ஸிலேட்டரும் தான் இருக்கும் போலிருக்கிறது. அது போலவே மோட்டார் சைக்கிளை குறுக்கே ஓட்டுவதற்கும் யாரும் சண்டை பிடிப்பதில்லை. இதைவிட பிரமாதம், இரண்டு வாகனங்கள் சற்று மோதிக்கொண்டால் கூட, அவரவர் வண்டியை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். டிராஃப்பிக்கை நிறுத்தி, ரகளை செய்து பெரும் கூட்டத்தைக் கூட்டுவது இல்லை.
எனக்குத்தெரிந்து இந்த நகரத்தில் மிகவும் ஏமாற்றப்படுபவர்கள் இந்த ரிக்ஷ்ஷாவாலாக்கள் தான் என்று நினைக்கிறேன். மாடு பொதி சுமப்பது போல இவர்கள் மக்களைச் சுமக்கிறார்கள். பழைய லக்னோவில் பெரும்பாலும் சைக்கிள் ரிக்ஷ்ஷாக்கள் தான். குறுகலான தெருக்களில் இந்த ரிக்ஷ்ஷாவாலாக்கள் அனாயாசமாகப் போகும்போது நமக்குத்தான் எங்கே யார்மீதாவது மோதி சண்டை வரப்போகிறதோ என்று பயமாக இருக்கிறது. இரண்டு பேர்களை சைக்கிள் ரிக்ஷ்ஷாவில் ஏற்றிக் கொண்டு (ஒருமுறை 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தையே ஏற்றிக் கொண்டு போனதைப் பார்த்தேன்!) ஏறத்தாழ 4 கி.மீ. மிதித்துக் கொண்டு ரூபாய் 15 மட்டும் (அதற்கும் பேரம் தான்) வாங்கிக் கொண்டு குதூகலமாகப் போகிறார்கள். ஒரு ஐந்து ரூபாய் அதிகம் கொடுத்தால் ஏறத்தாழ கோவில் கட்டும் ரேஞ்சில் பரவசமடைகிறார்கள். இதுபோல மக்கள் இருக்கும் வரையில் மாயாவதியை யாரும் அசைச்சுக்க முடியாது… அசைச்சுக்க முடியாது…
தெருக்களும் சாலைகளும் மிகவும் குறுகலாக இருக்கிறது. சற்று அகலமாக இருக்கும் சாலைகளில் ஆக்ரமிப்புக்கள். ப்ளாட்பாரக் கடைகள்.
ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் ஏதாவது ஒரு சிலை. சிலைகள் இல்லாத சாலை சந்திப்பை எங்கும் காணவில்லை. (அதனால் தான் சிலைகளை வைப்பதற்காகவே பிரத்தியேக இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.)
எங்குப் பார்த்தாலும் இருக்கும் ஜனக்கூட்டத்தைப் பார்த்தால் வாரநாட்களில் கூட்டமாக இருக்கும் சென்னையின் பாரிஸ் கார்னரை நினைவு படுத்துகிறது. எங்கு பார்த்தாலும், எல்லா சாலைகளிலும் ஒரே கூட்டம். எங்கு போகிறார்கள் எதற்கு வருகிறார்கள் என்று யூகிக்கமுடியாதபடிக்கு எங்கும் கூட்டம். ஆனால் ஒரு விஷயம் இரவு ஏழு எட்டு மணிக்கெல்லாம் முக்கிய சாலைகளில் கூட, இரயில்வே ஸ்டேஷன் ஒட்டிய இடங்கள் போன்றவைத் தவிர்த்து ஜனநடமாட்டம் குறைந்து விடுகிறது.
இன்னொரு விஷயம் முக்கிய இடங்களைத் தவிர்த்து எங்கும் ஒரு மூத்திர நெடி. பிளாட்பாரத்தில் நடக்கும்போது தாண்டித்தாண்டி பாண்டி ஆடவேண்டியிருக்கிறது. போதாதகுறைக்கு பான்பராக் துப்பல் வேறு. வரவர இந்தியாவின் பிரத்தியேக வண்ணம் சிகப்பு என்றாகிவிடப் போகிறது. அந்த அளவுக்கு பான்பராக், குட்கா, புகையிலை இத்யாதிகள். பிளாட்பாரக் கடைகளில் சிகரெட்டுக்களை பகிரங்கமாக விற்கிறார்கள். பகிரங்கமாகப் புகைக்கிறார்கள். அன்புமணியின் எச்சரிக்கை மண்டைஓடு விவகாரங்கள் எல்லாம் தமிழ்நாடு வரைக்கும் தான் போலிருக்கிறது.
மக்கள் பெரும்பாலும் மிகவும் வெகுளியாக இருக்கிறார்கள். அவர்கள் வழியில் அவரவர்கள் போகிறார்கள். அனாவசிய சண்டைக் கெல்லாம் போவதில்லை. யாரையாவது அழைத்து ‘பளார்’ என்று அறைந்தால் கூட அவர்கள் நமக்கு ‘சாரி’ சொல்லிவிட்டுப் போவார்கள் போலிருக்கிறது. நான் இருந்தவரையில் எங்கும் சண்டை சச்சரவுகளைப் பார்க்கவில்லை. நமக்குத்தான் ஏதும் பரபரப்பில்லாமல் போர் அடிக்கிறது.
சாஹாரா மால் என்று ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில் ஒரு மால் இருக்கிறது. 5 மாடிகள். நமது ஒட்டு மொத்த ஸ்பென்சர்ஸ் ஒரே இடத்தில் மாடிமாடியாக கட்டியது போல. அந்த மாலில் இல்லாததே இல்லை என்று சொல்லிவிடலாம். பிவியார் தியேட்டர் வேறு. மக்டோனால்ட்லிருந்து கென்டக்கி ப்ரைட் சிக்கன் வரைக்கும், கர்சீப்லிருந்து காட்டன் பேண்ட் வரைக்கும், இவ்வளவு ஏன் கம்ப்யூட்டர் கேம்ஸ் கூட இருக்கிறது. வாண்டுகளை அழைத்துக்கொண்டு 5ம் மாடிக்கு போகாமல் இருப்பது நலம். (இல்லையேல் தொலைந்தோம்!)
லக்னோவில் ‘லக்னோ சிக்கான்’ என்கிற துணி வகை மிகவும் பிரபலம். லக்னோ காட்டன் துணியில் எம்பிராய்டரி வேலை செய்திருக்கிறார்கள். சாதாரணத்துணியில் இருந்து மிகவும் காஸ்ட்லியான துணிவகைகள் வரை கையால் எம்பிராய்டரி செய்வது சிக்கான். குர்த்தாவாகட்டும் சுரிதார் ஆகட்டும் அல்லது புடவைவகைகளாகட்டும், துணிதரத்திற்கும் வேலைப்பாடுக்கேற்ப விலை. அசால்ட்டாக ஆயிரங்களில் விலை சொல்கிறார்கள். இலட்சங்கள் எல்லாம் சாதாரணம் என்கிறார்கள்.
லக்னோவில் நமது அடையார் அண்ணாநகர் போல கோமதி நகர். கோமதி நதியின் இருபுறமும் அமைந்திருக்கும் காஸ்ட்லி ஏரியா. பெரும்பாலான அமைச்சர்களின் மற்றும் அதிகாரிகளின் வீடுகள் இந்த ஏரியாவில் தான் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதுபோலவே இங்கு மால்களும் எக்கச்சக்கம்.
நம்முடைய ரிட்சி ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் இடத்தைப்போல இங்கும் லால்பாக் என்று ஒரு இடம் இருக்கிறது. இந்த இடத்தில் நுழைந்தால் நாம் இருப்பது சென்னையில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் ரிட்சி ஸ்ட்ரீட்டா என்று வியப்பு மேலிருகிறது. அவ்வளவு ஒற்றுமை.
அருகருகே இரண்டு இரயில்வே ஸ்டேஷன்கள். ஒன்று லக்னோ சிடி வடக்கு இரயில்வேயை சேர்ந்தது. மற்றொன்று லக்னோ ஜங்ஷன். வடகிழக்கு இரயில்வேவை சார்ந்தது. இரண்டும் மிகப்பழைய கட்டிடங்கள். ஊரின் மையப்பகுதியில் இருக்கிறன. இரண்டு இரயில்வே கோட்டங்களின் தலைமையகம் இங்கு இருக்கிறது. அமெளசி ஏர்போர்ட் என்ற பெயர் கொண்ட மிகச் சிறிய லக்னோ ஏர்போர்ட் ஊரைவிட்டு 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. அதுபோலவே லக்னோவுக்கு பெருமை சேர்க்கும் ஐஐஎம் லக்னோவும் ஒரு 15 கிமீ தள்ளி இருக்கிறது.
பொதுவாக லக்னோவில் முக்கிய சாலைகளும் நெருக்கமாக இருக்கிறது. தெருக்களும் குமட்டிக்கொண்டு வருகிறது. கன்ஷிராம் பார்க் அமைப்பதில் காட்டும் அக்கறையை இந்த ஊரை தேற்றுவதில் காட்டலாம். இத்தனைக்கும் லக்னோவில் வியாபாராத்தில் கோடிகோடியாக பணம் புரளுகிறது என்பதற்கு இங்கு இருக்கும் எல்லா முன்னனி நிறுவனங்களே சாட்சி. உள்கட்டுமான வசதிகள் மட்டும் அதிகரித்தால் லக்னோ மும்பையை தூக்கி சாப்பிட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.
1 comment:
Tourism blog post,mikavum pirapala title.innum eluthalaame?Nalla eluththaatralum kooda ☺
(http://enpathikai.blogspot.com)
Post a Comment