Wednesday, November 17, 2010

ஒரு நாள் …. ஒரு கனவு!



ஒரு நாள் …. ஒரு கனவு!


ஓடி ஓடி மூச்சிறைத்தது. திரும்பிப் பார்த்தேன். அவர்கள் இன்னமும் துரத்தி வருவது அந்த இருட்டிலும் நன்றாகத் தெரிந்தது. இதயம் துடிப்பது dts சப்தமாக காதில் இறைந்தது. வயிற்றில் தேவையற்ற அமினோ அமிலங்கள் சுரக்க, நின்று மூச்சு வாங்க நேரமில்லாமல் ஓடினேன். தெருக்களில் ஜனநடமாட்டம் இல்லாமல் இருந்தது. மணி பதினொன்னா பனிரெண்டா? தெரியவில்லை. இது எந்த இடம் என்பது புரியாமல் வலது பக்கம் இருந்த தெருவில் திரும்பினேன். போறாத
காலம். அது ஒரு முட்டுச் சந்து. ஒரு காலனி போலிந்த வீடுகளின் பின்புறம். இருபுறமும் வீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு மறைந்துக்கொள்ள சிறு இடம் கூட இல்லாமல் ஒரு சுவற்றில் போய் முடிந்திருந்தன. சுதாரித்துக்கொண்டு அந்த முட்டுச்சந்தில் இருந்து வெளியேற முயற்சிப்பதற்குள் அந்தத் தெருவின் முனையில் அவர்கள் திரும்புவது தெரிந்தது. சுவரோடு சுவராக ஒட்டிக் கொள்ள செய்த முயற்சி பலனளிவில்லை. ஓடிவந்த அந்த நான்கு பேரில் ஒருவன் என்னைப் பார்த்துவி்ட்டு “இதோரா” என்றான். நான் நன்றாக சுவற்றில் ஒட்டிக் கொள்ள, அந்த நான்கு பேரும் சுற்றி நின்றார்கள். அவர்களில் ஒருவன் முதுகில் இருந்து ஒரு வீச்சரிவாளை நிதானமாக உருவினான். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அந்த வீச்சரிவாள் பளபளத்து அதன் கூர்மையை பறைசாற்றியது. இடது கையால் என்னைச் சுவரோடு அழுத்திக் கொண்டு வலது கையால் வீச்சரிவாளை என் கழுத்தை நோக்கி வீச…

முகத்தில் ‘சரேலென’ ஈரம் தெரிக்க திடுக்கிட்டு விழித்தேன். வாசல் தெளித்த அம்மா மிச்ச தண்ணீரை படுத்திருந்த என் மேல் தெளித்து “எழுந்திரேண்டா. எங்கேயோ போகணும்னு சொன்னீயே” என்றாள். ஒரு நிமிடம் ஏதும் புரியாமல் உட்கார்ந்துக் கொண்டு மலங்க மலங்க விழித்தேன். நடந்தது கனவுதான் என்றும், நான் உயிரோடு இருப்பதையும் நம்ப சற்று நேரம் பிடித்தது. திரும்பத் திரும்ப கனவை நினைத்துப் பார்த்தேன். ஏன் ஓடினோம் எதற்குத் துரத்தினார்கள் என்று தெரியாமல் பதட்டமாக இருந்தது. என்னைக் கொலை செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்திருப்போம் என்றும் புரியாமல் இருந்தது. விடியும்போது காணும் கனவு பலிக்குமாமே… நினைக்கும்போதே பயமாக இருந்தது.

“என்னடா, இன்னுமா எழுந்திருக்கல” என்ற அம்மாவின் குரலைக் கேட்டு உதறிக் கொண்டு எழுந்தேன். ஆபீஸ் வேலையாக தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் கூடூர் என்னும் ஊருக்கு போக வேண்டியிருந்தது.

நரேந்திரன் நாராயணஸ்வாமி என்கிற நரேன் என்னும் நான் வேலை செய்வது ஒரு பிரபல உரக் கம்பெனியின் தமிழ்நாடு ஆந்திரா பகுதிக்கு விற்பனை மேலாளராக. அடிக்கடி வேலை நிமித்தமாக ஊர் சுற்றும் வேலை. விற்பனை பிரதிநிதிகள் சரியாக எல்லா ஏரியாக்களையும் திறம்பட கையாளுகிறார்களா என்று பார்ப்பது முதல் தேவையான இருப்பை ஏற்படுத்துவது வரை என்னுடைய மேலாண்மை. ஆதலால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம். அதுபோல இன்றைக்கு நான் போக வேண்டிய இடம் ‘கூடூர்’.

நான் இருப்பது மைலாப்பூர். என்னுடைய மோட்டார் சைக்கிளை சென்ட்ரல் ஸ்டேஷனில் வைத்துவிட்டு டிரெயினில் செல்ல முடிவெடுத்தேன். கூடூர் ஸ்டேஷனில் என்னுடைய உதவியாளர் வந்து அழைத்துபோவதாக முன்னமே ஏற்பாடு செய்திருந்தேன்.

நேரமாகிவிடவே ‘விடுவிடு’வென்று தயாரானேன். அலுவலகப் பணி என்னை மிகவும் ஆக்கிரமித்திருந்தது. அம்மா செய்திருந்தது பொங்கலா அல்லது உப்புமாவா என்று எதுவும் தெரியவில்லை. “ரவா பொங்கல் நல்லா இருக்காடா. இன்னும் கொஞ்சம் தரட்டுமா?” சமையலறையில் இருந்த அம்மாவின் குரல் சரியாகக் கேட்காமல், ஏதோ ஒன்று சாப்பிட்டுவிட்டு அல்லது சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு “வரேம்மா…” என்று சொல்லிவிட்டு எனது மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்தேன். வழக்கம் போல அம்மா “பத்திரம்… ராத்திரி சீக்கிரம் வந்துடுடா” என்றதுக்கு பதிலளிக்காமல் புல்லட்டின் பட்டன் ஸ்டார்ட்டை அழுத்தினேன்.

மற்ற மோட்டார் சைக்கிள்களுக்கும் புல்லட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. புல்லட்டின் ‘தட்தட்…தட்தட்’ சத்தம் ஒரு தெய்வீக கானம். மற்ற மோட்டார் சைக்கிள்களைப் போல் ‘விர்ர்ர்….புர்ர்ர்…..’ எல்லாம் இல்லை. எப்போதும் சீரான ‘தட்தட்…தட்தட்’ தான். வேகமாகப் போணால் ‘தட்தட்தட்தட்’. சாதாரணமாக நிதானமாகத்தான் போவது போலிருக்கும், ஆனால் ஆக்ரோஷமானால் ‘சும்மா அதிருதுல்ல’ என்பது போலத்தான். புல்லட்டில் உட்கார்ந்தால் ஏதோ தேரில் உட்கார்ந்திருப்பது போலத் தான் இருக்கும். நான் புல்லட்டில் பயனிக்கும் போது மற்ற பயணிகள் என்னை ஏக்க பெருமூச்சோடு ஒரு கதாநாயக அந்தஸ்த்தோடு பார்ப்பது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். என்னோடு ஆபீஸில் பணிபுரியும் நிஷாவை ஒரு முறை புல்லட்டில் ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரைச் சாலையி்ல் 100 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு… ஹூம்… இப்போதைக்கு புல்லட்டை துடைப்பதுதான் என்னுடைய ஒரே பொழுதுபோக்கு.

மைலாப்பூர்-மவுண்ட்ரோடு ட்ராஃபிக்கை கடந்து சென்ட்ரலை அடையும் போது மணி 6-50 ஆகிவி்ட்டிருந்தது. அரக்கப்பரக்க புல்லட்டை விட்டுவிட்டு விஜயவாடா செல்லும் ஜன்ஷதாப்தியில் AC chair car கம்ப்பார்ட்மெண்டைத் தேடி ஏறி C-18 ல் உட்காரவும் வண்டி புறப்படவும் சரியாக இருந்தது. மணி சரியாக 7-03. கூடுரை அடைய இன்னமும் 2 மணி நேரம் இருந்தது. லேப்டாப்பை ஆன் செய்து வேலையில் மூழ்கிப் போனேன். கூடூரில் முக்கியமான பெரிய இரண்டு மெயின் டீலர்களை எங்கள் கம்பெனி வசப்படுத்தும் முக்கியமான வேலை இருக்கிறது.

கூடூரில் என்னடைய உதவியாளர் காத்திருந்தார். நான் நினைத்தற்குமாறாக உடனடியாகவே இரண்டு பெரிய டீலர்களும் என்னுடைய கம்பெனி தயாரிப்பை கூடூர் முழுமைக்கும் கையாள ஒப்புதல் அளித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. எனது வேலையும் மதியத்துக்குள்ளாகவே முடிந்து விட்டது. என்னுடைய உதவியாளன் தயங்கித் தயங்கி தன்னுடைய சொந்த வேலை நிமித்தமாக சொந்த ஊருக்கு போகவேண்டியத் தேவையை சொன்னான். வந்த வேலை சுலபமாகவும் சுமுகமாவும் முடிந்ததில் எனக்கு இருந்த மகிழ்ச்சியில் பத்து நாட்கள் விடுப்பு கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பேன். மதிய உணவு முடிந்ததும் என் உதவியாளர் புறப்பட்டு போக நான் நெல்லூர் செல்ல முடிவெடுத்தேன். அங்கு நெடுநாளாக ஒரு தீர்க்க வேண்டிய பிரச்சனை இருந்தது. நெல்லூரில் இருந்து இரவு வண்டியில் சென்னை சென்றுவிடலாம். நான் இன்று நெல்லூர் செல்ல முடிவெடுத்தது தான் என் வாழ்நாளில் நான் செய்த மிகப் பெரிய தவறு என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

நெல்லூரில் நான் பேருந்தில் சென்று இறங்கியபோது மணி மாலை ஆறு 15ஐ நெருங்கியிருந்தது. பஜார் வீதி சென்று உடனடியாக வம்சி என்ட்ர்பரைசஸ் – நெல்லூரின் முக்கிய டீலரை சந்திக்க முடிவு செய்தேன்.

வம்சி என்ட்ர்பரைசஸ் – கிருஷ்ண வம்சி நெல்லூரின் மிகப் பெரிய புள்ளி. பழங்கால நடிகர் எஸ்.வி. ரங்காராவ் போல இருப்பார். அரசியல், சினிமா, வணிகம் என்று அவர் கால் பதிக்காத இடமே இல்லை. ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல உயர்மட்ட ஆந்திரபிரதேஷ அரசியல்வாதிகளுடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அடிக்கடி நெல்லூர் செல்லும் நானே அவரை மூன்று நான்கு முறை தான் பார்த்திருக்கிறேன். மிகவும் வாஸல்யத்துடன் பழகுவார். அவருடன் பேசும்போது ஏதோ சொந்த பெரியப்பாவுடன் பேசுவது போல இருக்கும். அவரது தெலுங்கு கலந்த தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அபார ஞாபக சக்தி. யாரையும் ஒருமுறைப் பார்த்தாலும் போதும் மிகவும் ஞாபகத்துடன் பெயர் சொல்லி அழைப்பார். வம்சி என்ட்ர்பரைசஸ் எல்லாம் அவருக்கு ஜூஜுபி. ஆனால் இதுதான் அவருடைய ஆபீஸ். நெல்லூரில் இருந்தால் பெரும்பாலான நேரம் இங்குதான் இருப்பார்.

நான் சமீபத்தில் பலதடவை இங்கு வந்திருந்தாலும் அவரைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் சரியாக வாய்க்கவில்லை. இம்முறை அவரை சந்தித்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. எங்கள் கம்பெனிக்கு அவருடைய கணக்கிலிருந்து 6½ லட்சம் ரூபாய் வரவேண்டியிருந்தது. நான் வரும் போதெல்லாம் அவரைக் காணமுடியாமல் அவருடைய மேனேஜர் பாஸ்கர் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருந்தார். கடிதங்களுக்கும் பதிலில்லை. ஏறத்தாழ எங்கள் கம்பெனி அதனை வாராக்கடன் என்று முடிவு செய்திருந்தது. ஏதும் நடவடிக்கை எடுக்கமுடியாமல் இருந்தது. நாங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்து அது ஏடாகூடமாக முடிந்தால்… அவருடைய செல்வாக்கு அப்படி. ஆனால் அவருக்கு இது விஷயம் தெரியுமா என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. இன்று கடைசியாக முயற்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன்.

என் நல்ல காலம் நான் வம்சி என்ட்ர்பரைசஸ் அடைந்தபோது கிருஷ்ண வம்சி இருந்தார். என்னைப் பார்த்ததும் “తమ్ముడు గారు రండి” (வாங்க தம்பி) என்று வாய் நிறைய கூப்பிட்டார். வேலையாளைப் பார்த்து, “తొరగ వెళ్లి పెప్సి తీస్కురా” (டேய், சீக்கிரம் போய் பெப்ஸி வாங்கி வா) என்று விரட்டினார். பிறகு என்னிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். நான் மிகவும் தயங்கித் தயங்கி ரூபாய் 6½ லட்சம் அவர் கணக்கிலிருந்து வரவேண்டியதைத் தெரிவித்தேன்.

அடுத்த நொடியே அவர் முகம் கோபத்திலும் வெட்கத்திலும் சிவந்ததை அந்த வெளிச்சத்திலும் என்னால் பார்க்க முடிந்தது. “బాస్కరా ఇక్కడకి రా” (பாஸ்கரா இங்க வா!) என்று அவர் கத்த அடு்த்த வினாடி அவருடைய மேனேஜர் பாஸ்கர் பதைபதைத்து ஓடி வந்தார். எனக்கு கிருஷ்ண வம்சியை பார்க்கவே மிகவும் சங்கடமாக இருந்தது.

அவர் தனது மேனேஜரைப் பார்த்து, நான் சொல்வது உண்மையா என்று கேட்க மேனேஜர் தயங்கி “ஆமாம்” என்று தலையசைக்க கிருஷ்ண வம்சியின் கோபம் இன்னமும் அதிகமானது.


அவரது தூயத் தெலுங்கு வசவுகள் அச்சிடத் தகுதியில்லாதவை. அமைதியாக எனக்குத் தெரிந்த கிருஷ்ண வம்சியின் மற்றொரு முகம் எனக்கு அச்சமூட்டியது. பிறகு சற்று மெளனமாக யோசித்த கிருஷ்ண வம்சி, என்னிடம் “தம்பி நான் செக் தரவா அல்லது கேஷாகத் தரவா” என்றவர், “வேண்டாம், நான் கேஷாகவே தருகிறேன். உங்களுக்கு ஏதும் கஷ்டம் இல்லையே?”

நான் என் மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று தலையசைத்தேன். கிருஷ்ண வம்சி அவராகவே எழுந்துச் சென்று பணத்தை எடுத்து வந்தார் – 6 ஆயிரம் ரூபாய் கட்டுக்களும் 1 ஐநூறு ரூபாய் கட்டும். எனது லேப்டாப் பையில் அதனை வைத்துக் கொள்வது ஏதும் சிரமமாக இருக்கவில்லை. கிருஷ்ண வம்சி மீண்டும் நான் பணமாக எடுத்துச் செல்வதில் சிரமம் ஏதுமில்லையே என்பதை உறுதிசெய்துக் கொண்டார்.
பிறகு “కూర్చోండి భోజనం చేసి వెళ్ళండి” (உட்காருங்கள். சாப்பிட்டுவிட்டு போகலாம்) என்றார். எனக்கு பணம் கிடைத்ததும் உடனடியாக கிளம்புவதில் குறியாக இருந்தேன். மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

“இல்லை சார், நான் கிளம்புகிறேன்” என்றேன். “బండి పంపించిన?” (வண்டி அனுப்பட்டுமா?) என்பவரை மறுத்துவிட்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். விஷயம் இத்தனை சுமுகமாக முடிந்ததை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்னுடைய M.D. வரை என் மதிப்பு உயர்வதை என்னால் உணரமுடிந்தது.

நெல்லூர் வழியாக செல்லும் இரயில் வண்டிகள் இரவு 2 மணிக்கு மேல் தான். பஸ்ஸில் போவதை விட இரயிலில் செல்வதே பாதுகாப்பானது என்று முடிவு செய்தேன். அதற்கு முன் நல்ல சாப்பாடு. முடிந்தால் ஏதாவது இரவு காட்சி.

சென்னையில் ஆந்திரா மீல்ஸ்க்கு அடிமையான நான் நிஜமாகவே ஆந்திராவில் இருக்கும் போது விடுவேனா? நெல்லூரில் உள்ள கோமளா உணவு விடுதி மிகவும் பிரசித்தம். வெஜிடேரியன் தான். பெஸரெட்டு, டிப்பரொட்டி, கார்லு (நம்ப ஊர் வடை தான்!) கோவாகஜ்ஜூலு, பூரலு, பொப்பட்லு(போளி) என்று அமர்களமாக இருக்கும். இவற்றில் நம் ஊரில் ஒரு சிலது தான் கிடைக்கும். எனவே இந்தப் பக்கம் வரும்போது நாக்கு சப்புக்கொட்டிக் கொண்டு வருவது வழக்கம். எனக்கிருந்த சந்தோஷத்துக்கு இரண்டு நாள் தங்கி ஒரு வெட்டு வெட்ட வேண்டும் போலிருந்தது.


இந்த இரவு உணவைப் போல நான் சமீபத்தில் சாப்பிட்டதில்லை. சந்தோஷம் கலந்த உணவல்லவா அது. மணி் ஒன்பது. எனக்கு இரயில் இரவு 2 மணிக்கு மேல் தான். ஆகவே நான் பக்கத்தில் இருக்கும் ராகவா காம்ப்ளக்ஸ் செல்ல முடிவு செய்தேன். ராகவா காம்ப்ளக்ஸ் 3 திரையரங்குகளை - கல்யாணி, காவேரி, கிருஷ்ணா - உள்ளடக்கிய, நெல்லூரின் மிகப் பெரிய காம்ப்ளக்ஸ். நான் நெல்லூர் போகும்போதெல்லாம் மூன்று திரையரங்குகளிலும் தெலுங்கு படங்கள் தான் திரையிடப்பட்டிருக்கும். நானும் அவ்வளவு ஆர்வமில்லாததாலும் நேரமின்மையாலும் இந்த திரைப்படங்களுக்கு செல்வதில்லை. ஆனால் இப்போது நேரம் இருக்கிறது.

நான் ராகவா காம்ப்ளக்ஸ் அடைந்த போது இந்த முறையும் மூன்று திரையரங்குகளிலும் தெலுங்கு படங்கள் தான் திரையிடப்பட்டிருந்தது. மூன்று தெலுங்குப் படங்களும் எனக்கு புரியாததாகவும், புதிதாகவும் இருந்ததால் எனக்கு டிக்கட் கிடைக்கும் ஒரு படத்திற்கு செல்ல முடிவெடுத்தேன்.

டிக்கட் எடுக்கும் கெளண்ட்டருக்கு செல்லும் போது என்னை நெருக்கியபடி 4 பேர் கூடவே வந்ததை நான் பொருட்படுத்தவில்லை. பொதுவாகவே ஆந்திர மக்கள் சினிமாவுக்கு அடிமை என்பதால் அவர்களும் டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற படப்படப்பில் செல்கிறார்கள் என்று இருந்துவிட்டேன். சினிமா படுசுமார். நாடகம் போலிருந்தது. நகைச்சுவை காட்சிகள் படு மட்டம். போதாத குறைக்கு எனக்கு அந்த அளவுக்கு தெலுங்கு தெரியாததால், சில சமயம் எரிச்சலாகக்கூட இருந்தது. பார்த்தது போதும் என்று எழுந்துக்கொண்டேன். திரையரங்கு பணி ஆளிடம் கேட்டுக் கொண்டு வெளியே வந்தேன். மணி பத்தேமுக்காலுக்கெல்லாம் நெல்லூரின் பிரதான சாலை வெறிச்சோடியிருந்தது. ஏதாவது ஒரு ஆட்டோ பிடித்து இரயில் நிலையம் அடைய எண்ணினேன். ஒரு ஆட்டோகூட கண்ணில் படவில்லை. அப்போதுதான் பார்த்தேன். திரையரங்கில் என்னை தள்ளிக்கொண்டு சென்ற அந்த நான்குப் பேர் என் அருகில் மிக அருகில் நின்றிருந்ததைப் பார்த்ததும் தான் எனக்கு உறைத்தது, அவர்கள் குறி நான் – நான் வைத்திருக்கும் 6½ லட்சம் என்பது. நான் பணம் வைத்திருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?

நான் மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தேன். அந்த 4 பேரும் என்னை பின்தொடருவது நிச்சயமாகத் தெரிந்தது. சற்று நடையை எட்டிப் போட்டேன். அவர்களும் அதேபோல... மெதுவாக... விரைவாக ஓட்டம் பிடித்தேன். லேப்டாப் பையை வைத்துக்கொண்டு ஓடுவது அவ்வளவு எளிதாக இல்லை. இருப்பினும் பள்ளியிலும், கல்லூரியிலும் நான் பயின்ற பயிற்சி, மாநில அளவில் ஓட்டப் பந்தய வீரன் என்கிற தகுதி என்னை செலுத்தியது. இங்கிருந்து இரயில் நிலையம் 1½ - 2 கி.மீ தான் இருக்கும். வழியில் சற்றேனும் கூட்டம் தென்படலாம். என் போறாத காலம் யாருமே தென்படவில்லை.

நான் ஓட அவர்கள் துரத்த... நான் களைப்டைவது எனக்கு நன்றாகத் தெரிந்தது. வெகுதுரத்தில் தெரிந்த மல்லிகார்ஜூனா ஸ்வாமி கோவிலின் கோபுரத்தை கும்பிட்டுக்கொண்டே ஓடினேன். அவர்கள் வெகு அருகாமையில் வருவது தெரிந்தது. உடனே நான் பக்கத்தில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் திரும்பினேன். பாலாஜி நகர் என்கிற அந்த குடியிருப்பு மிகவும் அமைதியாக இருந்தது. எல்லோருமா அதற்குள் படுத்து விட்டார்கள்?


ஓடி ஓடி மூச்சிறைத்தது. திரும்பிப் பார்த்தேன். அவர்கள் இன்னமும் துரத்தி வருவது அந்த இருட்டிலும் நன்றாகத் தெரிந்தது. இதயம் துடிப்பது dts சப்தமாக காதில் இறைந்தது. வயிற்றில் தேவையற்ற அமினோ அமிலங்கள் சுரக்க, நின்று மூச்சு வாங்க நேரமில்லாமல் ஓடினேன். தெருக்களில் ஜனநடமாட்டம் இல்லாமல் இருந்தது. மணி பதினொன்னா பனிரெண்டா? தெரியவில்லை. இது எந்த இடம் என்பது புரியாமல் வலது பக்கம் இருந்த தெருவில் திரும்பினேன். போறாத காலம். அது முட்டுச் சந்து. ஒரு காலனி போலிருந்த வீடுகளின் பின்புறம். இருபுறமும் வீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு மறைந்துக்கொள்ள சிறு இடம் கூட இல்லாமல் ஒரு சுவற்றில் போய் முடிந்திருந்தன. சுதாரித்துக்கொண்டு அந்த முட்டுச்சந்தில் இருந்து வெளியேற முயற்சிப்பதற்குள் அந்தத் தெருவின் முனையில் அவர்கள் திரும்புவது தெரிந்தது. சுவரோடு சுவராக ஒட்டிக் கொள்ள செய்த முயற்சி பலனளிவில்லை. ஓடிவந்த அந்த நான்கு பேரில் ஒருவன் என்னைப் பார்த்துவி்ட்டு “இதோரா” என்றான். நான் நன்றாக சுவற்றில் ஒட்டிக் கொள்ள, அந்த நான்கு பேரும் சுற்றி நின்றார்கள். அவர்களில் ஒருவன் முதுகில் இருந்து ஒரு வீச்சரிவாளை நிதானமாக உருவினான். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அந்த வீச்சரிவாள் பளபளத்து அதன் கூர்மையை பறைசாற்றியது. இடது கையால் என்னைச் சுவரோடு அழுத்திக் கொண்டு வலது கையால் வீச்சரிவாளை என் கழுத்தை நோக்கி வீச…

நான் பலம்கொண்ட மட்டும் என் வலது முழங்காலை மடக்கி அவனுடைய கால்களுக்கிடையே மோதினேன். அதே சமயம் என்னுடைய இரண்டு கிலோ லேப்டாப்பை கையில் இறுக பற்றிக் கொண்டு 50 கி.மீ வேகத்தில் அடித்தேன். அது அவன் தலையை 100 கிலோ எடையில் தாக்கியது. சரியான அடி. பக்கத்தில் இருந்தவர்களுக்கும் வலித்திருக்கும். கண்டிப்பாக ரத்த காயம். அவன் “அம்மா“ என்று கத்திக் கொண்டு வீச்சறிவாள் கை நழுவி விழ, நிலைகுலைந்து சாய்ந்தான். மற்றவர்கள் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் நான் வந்த வழியில் தலைதெறிக்க ஓடினேன். என்னுடைய நல்ல காலம் நான் மெயின் ரோட்டை அடைவதற்கும் அந்த குடியிருப்பு பகுதியில் யாரையோ இறக்கிவிட்டு ஒரு ஆட்டோ காலியாகத் திரும்புவதற்கும் சரியாக இருந்தது. நான் ஆட்டோ என்று அலற, அந்த ஆட்டோ ‘கீரீச்சென்று’ நின்றது. நான் மூச்சிறைக்க ஓடிப்போய் ஏறிக்கொண்டு இரயில்வே ஸ்டேஷன் என்று கத்த, அந்த ஆட்டோ ஓட்டுநர் என் அவசரத்தை புரிந்துக் கொண்டு ஏதும் கேட்காமல் உடனடியாக ஆட்டோவைக் கிளப்பினார்.

நான் போகும் வழியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் தெரிவித்ததும், இரயிலைப் பிடித்து சென்னையில் வீடு வந்து சேர்ந்ததும், எனது அலுவலகத்தில் என்னை பெரிய ஹீரோவாகக் கொண்டாடியதும், வெகு நாட்களாக இரகசியமாக நான் ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்த நிஷா, கண்கள் நிறைய காதலோடு என் கையை தன் இரண்டு கைகளாலும் நீண்ட நேரம் பற்றி குலுக்கியதும், சில ஆண்டுகள் கழித்து வரவேண்டிய பதவி உயர்வு இப்போதே கிடைத்ததும், வம்சி என்ட்ர்பரைசஸ் – கிருஷ்ண வம்சி நடந்த சம்பவங்களைக் கேள்வியுற்று வருத்தப்பட்டதும் பெரிய விஷயமில்லை.

பத்து நாட்கள் கழிந்து விட்டது. நேற்று ஞாயிறு நிஷாவை அழைத்துக் கொண்டு என்னுடைய புல்லட்டில் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு சென்று வந்தது தான் என் நினைவு முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அந்த நெல்லூர் பற்றிய சங்கதி எல்லாம் ஏறத்தாழ மறந்தே போய் விட்டேன், இன்று காலை அந்த தொலைபேசி வரும் வரை.

நெல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு காவல் அதிகாரி என்னிடம் பேசினார். என்னைக் கொலை செய்யத் துரத்திய அந்த நால்வரையும் பிடித்துவிட்டதாகவும், அவர்களுடைய தலைவன் பாஸ்கர் என்கிறவனையும் மற்ற நால்வரையும் அடையாளம் காட்ட வரச் சொல்லியிருந்தார்கள்.

நான் மீண்டும் நெல்லூர் செல்ல நடுங்கிக் கொண்டிருக்கிறேன்!