Wednesday, April 12, 2006

அப்பா

 ஊனும் உதிரமுமாய், உயிரும் உணர்வுமாய் கலந்திட்ட என் தந்தைக்கு...


    தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது. வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டிவிட்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். ஹாலில் படித்துக்கொண்டிருந்த தங்கை உள் அறையைக்காட்டி, “அப்பா” என்றாள் சன்னமாக.

   உள்அறையில் அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்ருந்தார். சமையலறையில் அம்மா. "கைகாலை அலம்பிண்டு வாடா, சாப்பிடுவே” என்றாள். அவன் "சரி" என்றான்.

“அப்பா?”
“எல்லோரும் சாப்பிட்டாச்சு. நீயும் சாப்பிட்டு முடிச்சியானா, சமையல்கட்டை ஏறக்கட்டணும்” என்றாள்.

சாப்பிடும்போது கேட்டான். “அப்பாகிட்ட சொல்லிட்டியாம்மா?”
“அவர் வந்தபோதே சொல்லிட்டேன். சரின்னார். நீயும் அவர்கிட்டசொல்லிடு” என்றாள் அம்மா. தலையாட்டினான். மெளனமாக சாப்பிட்டுவிட்டு, தட்டை அலம்பிவைத்துவிட்டு, அப்பா இருந்த அறைக்குள் வந்தான். அப்பா இன்னமும் படித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா என்று மெதுவாகக் கூப்பிட்டான். அவர் படிப்பதை நிறுத்திவிட்டு ஏறிட்டுப் பார்த்தார்.

“நாளைக்கு ஒரு இன்டர்வியூ போகனும்பா” என்றான் மெதுவாக.

அப்பா ‘சரி’ என்பதுபோல ஆமோதித்துவிட்டு, புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தார். மெல்ல அங்கிருந்து நகர்ந்தான். ஹாலில் தங்கை படித்துக் கொண்டிருந்தாள். நாளைக்கு ஏதோ பரீட்சை போல. சமையலறையில் அம்மா அலம்பிவிட்டுக்கொண்டிருந்தாள். மறுநாள் வெள்ளிக்கிழமை என்பது ஞாபகம் வந்தது.

மெதுவாக பின்கட்டுக்கு வந்து துவைக்கிற கல் மேல் உட்கார்ந்துக்கொண்டான். யோசித்துப் பார்த்ததில்ஈ நாளைக்குப் போவது ஒன்பதாவது இன்டர்வியூ. முதல் இன்டர்வியூவில் இருந்த பரபரப்போ அல்லது நம்பிக்கையோ துளியும் இப்போது இல்லாமல் இருந்தது. அம்மாதான் பாவம். ஒவ்வொருமுறையும் அத்தனை நம்பிக்கையோடு இன்டர்வியூக்கு அனுப்புவாள். அதேபோல, தேராமல் போணாலும் அதே வாத்சல்யத்தோடு ஆறுதல் சொல்வாள்.
“இது போனா போறதுடா. உனக்கு பகவான் நல்ல வேலையா நினைச்சுண்டிருக்கார். அதுதான் இதெல்லாம் தள்ளி போறது” என்பாள்.

நன்றாகவே தெரியும். சிலசமயம், இதுபோல எத்தனைமுறை இன்னமும் சொல்லப் போகிறாள் என்றுகூட நினைத்துக் கொள்வான்.

அப்பா... அவர் எப்போது வேலைக்குப் போவார்? எப்போது வருவார்? என்று தெரியாது. அவர் இரயில்வேயில் கார்டு. ஆனால் ஒன்று கவனித்திருக்கிறான். தேவையானபோது அவர் எப்போதும் வீட்டில் இருந்திருக்கிறார். வேலைக்குப் போய்வந்தாரென்றால், இந்த சாய்வு நாற்காலியும் புத்தகங்களும் தான்...
ஒவ்வொருமுறை இன்டர்வியூ போகுமுன்னரும் அப்பாவிடம் இதுபோலத்தான். அவருக்கு எல்லாம் முன்னமே தெரிந்திருக்கும். அம்மா சொல்லியிருப்பாள். இவன் சொல்லும்போதும் பேசாமல் கேட்டுக்கொள்வார். அவ்வளவுதான். மறுநாள், அம்மா இவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து, “அப்பா கொடுக்கச் சொன்னாருடா” என்பாள். இன்டர்வியூ போவதற்கு சட்டைபேண்ட் எல்லாம் அயர்ன் செய்து வைத்திருப்பாள்.

“இந்த தடவை உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கப்போறது பாரேன்” என்பாள். இந்த தடவை, இந்த தடவை என்று எத்தனை தடவை......

யோசித்துப் பார்க்கையில், அப்பா இவனிடம் பேசியதுண்டா எ்னறு ஆச்சரியமாக இருந்தது. +2வில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியபோதுக்கூட, அவர் ஏதும் பேசாமல் இவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். அவ்வளவுதான். பள்ளியில் ப்ரேயர் ஹாலில் மொத்த பள்ளிமாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் பாராட்டியபோதுகூட ஏற்படாத மகிழ்ச்சி அப்பா தட்டிக்கொடுத்தபோது ஏற்பட்டது.

அப்பா இவனிடம் பேசியதில்லையே தவிர, அவரது எண்ணங்கள் எல்லாவற்றையும் இவன் அறிந்தே இருந்தான். அம்மாவிடம் கூட அப்பா பற்றி விவாதித்திருக்கிறான்.

“ஏம்மா, அப்பா என்னிடம் ஏதும் பேசமாட்டேங்கிறார்?”

அப்பாவைப்பற்றி அறிந்துக்கொள்ள இவனுக்கு வயது போதாதென்றாள். “உங்கப்பா ஒரு ஞானிடா” என்றாள்.

“இல்லேமா, அவர் என்னிடம் பேசினால் எத்தனையொ விஷயங்களை நான் தெரிந்தக்கொள்ளலரம் இல்லையா?” என்று வாதிட்டிருக்கிறான்.

“ஏண்டா வாய்வார்த்தையாய் பேசினால் தானா? அவரப்பற்றி உனக்கு எதுடா தெரியாது?” என்று சிரித்திருக்கிறாள்.

உண்மைதான். அப்பாவிடம் வார்த்தையாய் பேசவில்லையே தவிர, அப்பாவைப்பற்றி எல்லாமே தெரிந்திருந்தது. அவர் பழக்க வழக்கங்கள், அவர் படிக்கும் புத்தகங்கள், அவரது எண்ணங்கள்... அம்மாகூட ஞானி என்று தோன்றியது. அப்பாவுக்கு வெளியில் நல்ல மரியாதை. சிடுமூஞ்சியாக எல்லோரையும் எடுத்தெரிந்து பேசும் ஸ்டேஷன் மாஸ்டர் கந்தசாமிகூட ஒருமுறை, “நீங்க கேவி சாரோட ஸன்னுங்களா?” என்று மரியாதையொடு கேட்டது ஞாபகம் வந்தது.

அம்மா எப்போதும் சொல்வாள். ‘அப்பாவோட பழக்கவழக்கங்கள் பிள்ளைகள் மீது பாயும்’ என்பாள். உண்மைதான். சிலசமயம் தனக்கு அப்பா போ குணநலன்கள் வந்து விட்டதாகத் தோன்றும். யாராவது பித்துக்குளிபோல பேசினால் சிரிப்பு வரும். யோசித்துப் பார்த்தால், அப்பா மேல் இருப்பது பயமில்லைஈ மரியாதை. அதையும் தாண்டி பக்தி என்பதாகப் பட்டது. வெளியே மிகவும் சில்லென்றிருந்தது. இரவு மழை பெய்யும் போல.

“சீக்கிரம் வந்து படேன்டா. நாளைக்கு இன்டர்வியூ போகனும்னு சொன்னீயே” எ்னறு அம்மா குரல் கொடுத்தாள். பின்கதவை அடைத்துவிட்டுப் போய் படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை.

ஒருமுறை இப்படி வேலைக்கிடைக்காத விரக்தியில், ஓட்டல் ஒன்றில் க்ளீனர் வேலைக்காவது போக முடிவெடுத்து, அப்பாவிடம் சொன்னான்.
“அப்பா, நம்ப ராமசுப்பைய்யர் மெஸ்ஸில் வேலைக்குச் சொல்லியிருந்தேன். நாளைக்கு வரச்சொன்னார்”
அப்பா சரேலென்று ஒரு அடிப்பட்ட பார்வைப் பார்த்தார். வேறு எதுவும் பேசவில்லை. சற்றுநேரம் அங்கேயே மெளனமாக நின்றுவிட்டு நகர்ந்தான். எதுவும் தோன்றாமல் வெளியே சென்றுவிட்டான்.
அவன் திரும்பி வந்ததும் அம்மா பிடித்துக்கொண்டாள்.
“ஏன்டா அப்பாவிடம் ஏதோ ஓட்டல் வேலைக்குப் :போறேன்னியாமே?”
“ஆமாம்மா” என்றான் இவன் சன்ன குரலில்.
“அப்பா எவ்வளவு மனசொடிந்து போயிட்டார் தெரியுமா? உன்னை எதுக்கும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லச் சொன்னார்”
“ஏம்மா, அதை அவரே என்னிடம் சொல்லியிருக்கலாமேம்மா” என்றான் உடைந்த குரலில்.
“நானே அப்பாகிட்ட சொன்னேன்டா. நீங்களே அவன்கிட்ட ஒரு வார்த்தை ஆறுதல்ா சொல்லக்கூடாதான்னு கேட்டேண்டா. அப்பா சொன்னார், ‘நான் பேசினால் குழந்தை இன்னும் மனசொடிந்து போயிடுவான்னாருடா” என்றாள்.

உண்மைதான். அப்பா நேரிடையாக ஆறுதல் சொல்லியிருந்தால், அவனால் தாங்கியிருக்க முடிந்திருக்காது என்று பட்டது. ஆனால் அப்பா மனசை காயப்படுத்தியிருப்பது புரிந்தது. மனசுக்குள் “ஸாரிப்பா” என்று சொல்லிக்கொண்டான்.

நாளைக்கு போவது ஒன்பதாவது இன்டர்வியூ. ஒன்பதாம் நம்பர் எல்லோருக்கும் ராசியாமே? சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும். தங்கைக்கு தானே கல்யாணம் செய்யவேண்டும். அம்மாவை, அப்பாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கனவுகள்... கனவுகள் ... கனவுகள்... அப்படியே தூங்கிப் போணான்.

காலையில் எழுந்தபோது அம்மா குளித்துவிட்டு சமையலறையில் வேலையாக இருந்தாள். தங்கை படித்துக்கொண்டிருந்தாள். மெதுவாக அப்பாவைத் தேடினான். இல்லை. வேலைக்குப் போய்விட்டார் போல. இத்தனைக் காலம் தாழ்த்தி எழுந்ததில் சற்று வெட்கமாகக்கூட இருந்தது. முகம் கழுவிக்கொண்டு அம்மாவிடம் போய், அம்மா கொடுத்த காபியைக் குடித்துக்கொண்டே, மெதுவாகக் கேட்டான்.
“அப்பா எங்கேம்மா?”
“அவர் காலம்பர அஞ்சு மணிக்கே கிளம்பி போயிட்டாருடா” என்றாள் அம்மா.
“சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகனுமில்ல. இன்னிக்கு இன்டடர்வியூ இருக்குன்னியே” என்று ஞாபகப்படுத்தினாள்.

குளித்துமுடித்து, பூஜை செய்து ரெடியானபோது, தங்கை வழக்கம் போல கோவிலுக்குப் போய் வந்திருந்தாள்.
“அண்ணா, இன்னிக்கு கண்டிப்பாக வேலைக் கிடைக்கும் பாரேன்” என்றாள் விபூதி பிரசாதத்தை நீட்டியபடி. விபூதி இட்டுக்கொண்டு மெளனமாகப் புன்னகைத்தான்.

அம்மா உள்ளிருந்து வந்து, “இதை அப்பா குடுக்கச் சொன்னாருடா” என்று வழக்கம்போல பணத்தைக் கொடுத்தாள். “இந்த வேலை கண்டிப்பாகக் கிடைக்கப்போறது பாரேன்” என்றாள். இப்போது இந்த வாசகங்கள் எல்லாமும் பழகிவிட்டது. ‘இவர்களுக்காவது வேலை கிடைக்கவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.

நேற்றிரவு பெய்த மழையில் தெருவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. சீராக நடப்பதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. உடைகள் அழுக்காகாமல் இன்டர்வியூ போகமுடியுமா என்று கவலைப்பட்டான். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சென்னைக்கிளையில் வேலைக்கான இன்டர்வியூ. வேலைக்கிடைத்தால் நிஜமாகவே அதிர்ஷ்டம் தான். வேலைக் கிடைத்தால்...

நிறுவனத்தை அடைந்தபோது ஏற்கெனவே நிறையபேர் அங்கு காத்திருந்தார்கள். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான். பக்கத்திலிருந்தவன்ஈ “ஹலோ” என்று கைநீட்டினான். ‘இது எனக்கு 13வது. உங்களுக்கு?” என்றான். மெதுவாக “ஒன்பதாவது” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாதவனாக மெளனமானான். அவன் விடவில்லை. “மொத்தம் 3 வேகன்ஸின்னு சொன்னாங்க. இப்ப என்னடானா, 2 ஏற்கெனவே முடிஞ்சிபோச்சாம். ஒரு போஸ்ட்க்கு எத்தனைப் பேர் பாருங்க.” என்றான். “இந்த போஸ்ட்டும் ஏற்கெனவே ரிசர்வ் ஆகியிருக்கும். நமக்கு வெட்டிவேலை” என்று அலுத்துக் கொண்டான். இவனுக்கு பகீரென்றது. அம்மா, அப்பா, தங்கை என்று எல்லோரும் கண்ணெதிரே வந்து போனார்கள். மிகவும் சோர்ந்துப்போய் பேச்சற்று இருந்தபோது இவனைக் கூப்பிட்டார்கள்.
இன்டர்வியூ முடிந்து வெளியே வந்தபோதுஈ எல்லோரும் இவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். யாரிடமும் பேசத்தோன்றாமல், மெதுவாக வெளியே நடந்தான். கேள்விகள்... கேள்விகள்... கேள்விகளின் முடிவில் மீண்டும் கேள்விகள்! இதெற்கெல்லாம் முடிவே இல்லையா என்று தோன்றியது. இந் வேலை கிடைக்கும் எ்னற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டதாக உணர்ந்தான்.

தெருவில் நடந்தபோது மிகவும் ஈரமாக இருந்தது. மெதுவாக நடந்தவன், ஊர்க்கோடியில் இருந்த கோவிலில் சென்று உட்கார்ந்துக் கொண்டான். கோவில் நடை அடைத்திருந்தது. யாரும் இல்லை. ஒவ்வொரு இன்டர்வியூ சென்றதும் ஏனோ ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது. ஒவ்வொரு இன்டர்வியூக்கும் ஏக நம்பிக்கையாக அனுப்பும் அம்மா, வாழ்த்துச் சொல்லும் தங்கை, எதிர்பார்ப்புடன் அப்பா... இதெற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? ஏனோ நெஞ்சில் துக்கம் அடைத்தது. எத்தனை நம்பிக்கைகள்... எத்தனை எதிர்பார்ப்புக்கள்... மீண்டும் மீண்டும் எத்தனைமுறை? எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு...

திடீரென முடிவுக்கு வந்தவனாக எழுந்தான். தன்னுடைய சான்றிதழ் ஃபைலை கீழே வைத்து, அதன்மேல் ஒரு கல்லை வைத்தான். மெதுவாக குளக்கரைக்குச் சென்று ஒவ்வொரு படியாக இறங்கி காணாமல் போணான்.

மூன்று நாட்களாகியும் வீடு சோகத்தில் இருந்தது. வேலைக்குப் போகாத அப்பா. வீட்டு வேலை செய்யத் தோன்றாக அம்மா. பள்ளிக்குச் செல்லாத தங்கை. அழுது அழுது அனைவரின் கண்களும் வீங்கியிருந்தன. யாரும் யாரோடும் பேசத் தோன்றாமல் ஒவ்வொரு இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
வெளியே “சார் போஸ்ட்” என்று போஸ்ட்மேன் குரல் கொடுக்க, அப்பா மெதுவாகப்போய் கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தார். ஏதும் தோன்றாதவராக சற்றுநேரம் சும்மா இருந்தவர், கவரை மெதுவாகப் பிரித்து படிக்கத் தொடங்கினார். திடீரென்று “ஹோ” என்று பெருங்குரலில் ஆரம்பித்தவர், “ஏமாந்திட்டேயேடா கடைசியில்” என்றார் சத்தமாக. பிறகு உடம்பு குலுங்க அழ ஆரம்பித்தார் அப்பா.

***








No comments: