Monday, May 22, 2006

எழுத நினைத்த கதை

எல்லோரும் எழுதும்போது நான் மட்டும் விதிவிலக்கா? என்தான் நான் எழுத ஆசைப்பட்டேன். எங்கள் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்துகிறார்கள். அதில் எழுத தீர்மானித்தேன்.

எதைப் பற்றி எழுதுவது? “போலியோ தடுப்பு மருந்து போடுவதின் அவசியம்” குறித்து எழுதலாமா அல்லது “கண் தானம்”, “இரத்த தானம்”, “சிறுகுடல், பெருங்குடல் தானம்” போன்ற இன்ன பிற தானங்கள் குறித்து எழுதலாமா என்று யோசித்தேன். ஏதாவது மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள அறிவிப்பு பலகையில் இருந்து எழுதிக்கொண்டு வந்துவிடலாம். சுலபமான வேலை. ஆனால் முந்தைய இதழ்களில் இவையாவும் வெளியானது ஞாபகம் வந்தது. தீவிரமாக யோசித்தபோது தான் யாருமே எழுதத்த தயங்கும் விஷயங்களை நாம் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றியது.

சற்றேறக்குறைய தீர்மானித்து என் மனைவியிடம் சொன்னபோது “உங்களுக்கு ஏன்தான் இவ்வாறு புத்தி போகிறதோ” எ்னறு என் குமட்டில் குத்தாத குறையாக நொடித்துக் கொண்டாள். இதற்கெல்லாம் அசருபவனா நான்? நான் தீர்மானித்தால் தீர்மானித்தது தான்!

சற்று நேரத்திற்கெல்லாம் ‘என்னடா இது’ என்று கேட்டுக்கொண்டே வந்த என் அப்பா ‘எது’ என்று சொல்லாமலேயே ‘எக்கேடு கெட்டுப்போ!’ என்பது போல போய்விட்டார்.

சமையலறைக்குள் நுழைந்தேன். “அம்மா, கொஞ்சம் காபி கொடேன். எழுத நிறைய யோசனை செய்யவேண்டியிருக்கிறது” என்றேன். அம்மா காபி கலந்துக்கொண்டே, “ஏண்டா, இந்த கதை, கண்றாவியெல்லாம் உனக்கெதுக்குடா?” என்றாள். நான் ஏதும் பேசாமல் காபியைக் குடித்துவிட்டு நகர்ந்தேன்.

“அப்பா, நான் உனக்கு ஹெல்ப் பண்றேம்பா” என்று கத்திக்கொண்டு வந்த என் பத்துவயது அருமை புத்திரனின் குரல் திடீரென்று “ஐயோ” என்று மாற திரும்பிப் பார்த்தேன். என் மனைவி அவன் காதை திருகிக் கொண்டிருந்தாள். கதை எழுதும் என் தீர்மானம் வலுவுற்றதை உணர்ந்தேன். நான் எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது!

மேஜையில் பேப்பர் பேனா. அருகில் இருக்கையில் நான். “நகரும் கை எழுதுகிறது. எழுதியதுமே நகருகிறது” என்றாரே கலில் ஜிப்ரான். அதுபோல என் கை பேனா பிடித்து பேப்ப்ர் மேல் நகர எத்தனிக்கையில் எங்கிருந்தோ வந்தாள் என் தங்கை.
“அண்ணா, நான் கேள்விப்பட்டது உண்மையா” என்றாள் மொட்டையாக.
“நீ என்ன கேள்விப்பட்டாய்?” என்றேன் நானும் வம்படியாய்.
“கண்ட கண்ட குப்பையெல்லாம் ஆபீஸ் பத்திரிகையில் எழுதி பேரைக் கெடுத்துக்காதே” என்றாள். “ஏற்கெனவே உன் பேர் சரியில்லை” என்ற த்வனி இருந்தது அவள் குரலில்.

“நான் எழுதுவது தப்பா” என்றேன் பரிதாபமாக.
“நீ எழுதுவதை தப்பென்று சொல்லல. ஆனா கண்ட கண்ட விஷயங்களை எழுதி இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்காதேன்னு தான் சொல்றேன்” என்றாள். “உன் ஆபீஸில்தான் என் ஃபிரண்டோட அண்ணனும் வேலைப்பாக்கிறார் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் முத்தாய்ப்பாக.

இதை ஏன் என்னிடம் சொல்கிறாள் என்பது புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் சரி, நான் எழுதுவதில் இருந்து பின் வாங்கப் போவதில்லை!

‘சரி. வீட்டில் எழுதினால்தானே இத்தனை கலாட்டாவும். ஆபீஸில் பெரியதாக என்ன குப்பை கொட்டுகிறோம். அங்கே வைத்துக் கொள்வோம் கச்சேரியை’, என்று தீர்மானித்தேன்.

வருகை பதிவேட்டில்கையொப்பம் இடுவது தவிர வேறு எதற்கும் பேனா எடுக்காத நான் பேனாவும் கையுமாக உட்கார்ந்திருந்தது என் சக அலுவலரை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.

“என்ன சார், ஏதோ எழுதறீங்க?” என்றார். குரலில் சற்று நக்கல் இருந்தாற் போலிருந்தது.
“இல்ல, நம்ப ஆபீஸ் கையெழுத்து பிரதிக்கு...” என்று இழுத்தேன்.
அப்போதுதான் நான் எழுதியிருந்த தலைப்பை பார்த்தவர், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு சரேலென விலகினார். நான் கவலைப்படவில்லை. தலைப்பைத் தவிர வேறு ஏதும் தோன்றாமல், பரிட்சைக்கு வந்த படிக்காத மாணவன் போல வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சார், குமுதம் வாரஇதழில் இருந்து உங்களுக்கு போன்” என்று என்னுடைய முதன்மை அலுவலர் என்னை விளித்தார். என்னால் நம்ப முடியாமல்ஈ தொலைப்பேசியை எடுக்க, “நீங்கள் உங்கள் அலுவலகத்தில் நடத்தும் கையெழுத்துப் பிரதியில் எழுதியிருந்ததை எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஒருவர் படித்து மிகவும் நன்றாக இருப்பதாக சிலாகித்தார். நீங்க எங்களுக்கு ஒரு கதை எழுதவேண்டும். தொடர்கதையாக இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்” என்றார்.
“சார், நான் வந்து...” என்பதற்குள், அவரே மீண்டும், “நீங்கள் எதுவும் சொல்லக்கூடாது. கல்கி ராஜேந்திரன் உங்களை அப்ரோச் பண்ணுவார். விகடன் பாலசுப்ரமணியன் கூட உங்களை நேரில் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தார். ஆனால், நீங்க எங்களுக்குத்தான் முதலில் எழுதவேணும்” என்றார். நான் பதில் சொல்லும் முன்னர், பக்கத்து மேஜைக் காரர் ‘தொப்’பென்று ஃபைலை போட்ட சத்தத்தில் கனவு கலைந்தேன்.

‘அட, கனவா!’ என்று வியந்தேன். இதெல்லாம் நிஜமாகப்போகிறது என்று நினைத்தபோது, “சார்... சார்...” என்ற குரல். “ஆ! நிஜமாகவே ஃபோனா! ஒரு வேளை விகடன் ஆபீஸில் இருந்து தானோ?” என்று நினைத்தபோது, என்னுடைய முதன்மை அலுவலர், என்னை அழைத்துக் கொண்டு வந்தார்.
“வாங்க சார்” என்றேன் சம்பிரதாயமாக.
“நீங்க ஏதோ எழுதுவதாக கேள்விப்பட்டேன்” என்றேன் நேரிடையாக.
“ஆமாம் சார். நம்முடைய கையெழுத்துப் பிரதிக்காக...” என்றேன்.
“அதெல்லாம் வேண்டாம். நன்றாக எழுதத்தெரிந்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றார் அதிரடியாக.
“சார், நான்கூட நன்றாக எழுதுவேன்” என்றேன் அழாதகுறையாக.
“எது? இதுவா?” நான் எழுதி வைத்திருந்த தலைப்பைக் காட்டினார். சற்று கேலியாக சிரித்தது போலிருந்தது. போய்விட்டார்.

என்னுடைய எழுத்துக்கு, எழுதும் முன்னரே இருக்கும் எதிர்ப்பு என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இன்னமும் எழுதியபிறகு எப்படி இருக்குமோ என்று பயமாக இருந்தது. என்னைப் போன்ற எழுத்தாளர்களை இந்த உலகம் புரிந்துக் கொள்ளப் போவதில்லை என்ற அலுப்புடன், தலைப்பு மட்டிலும் எழுதியிருந்த காகிதத்தை கசக்க மனமில்லாமல் அப்படியே குப்பைக் கூடையில் வீசினேன்.
‘கில்லி விளையாடுவது எப்படி?’ என்ற அந்தத் தலைப்பு என்னைப் பார்த்து ‘ஸில்லி’ என்பது போல இருந்தது.

7 comments:

Sivabalan said...

//‘கில்லி விளையாடுவது எப்படி?’//


நல்ல பதிவு!!

நன்றி!!

கோவி.கண்ணன் said...

உங்களுக்கு எழுத்து நன்றாகவே வருகிறது. வாருங்கள் வாருங்கள் வலைவுலகில் வாழ்வதற்கு

சந்தர் said...

நன்றி சிவபாலன், நன்றி கோவிகண்ணன். கொஞ்சம் கதை கொஞ்சம் கவிதை என்பதுதான் வாழ்க்கையின் பிணிகளை களைய மருந்து என்பது என் தாழ்மையான கருத்து.

அடிக்கடி என் வலைப்பக்கத்துக்கு வருகை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மஞ்சூர் ராசா said...

வணக்கம் அண்ணா,

அந்த கில்லி விளையாடுவது எப்படின்னு சொல்லாமெ அப்படியே விட்டுட்டா எப்படிங்க்ண்ணா, கொஞ்சம் சொல்லிக்கொடுங்கண்ணா. ஏதோ கிராமத்தானுகளுக்கு தெரியும், இந்த நகரத்து பசங்களுக்கு அதெல்லாம் எங்கெண்ணா தெரியப் போகுது. கொஞ்சம் எடுத்துவுடுங்கண்ணா.

வாழ்த்துக்கள். நன்றாக உங்களால் எழுதமுடியும் என்பது உங்கள் எழுத்திலிருந்து தெரிகிறது.

சந்தர் said...

//ஏதோ கிராமத்தானுகளுக்கு தெரியும், இந்த நகரத்து பசங்களுக்கு அதெல்லாம் எங்கெண்ணா தெரியப் போகுது.//
இந்த நகரத்து பசங்க ஆடற கில்லி சூப்பர் கில்லிண்ணா.
மஞ்சூர் ராசாவுக்கு வணக்கம் பல. வாழ்த்துக்கு நன்றி.

சந்தர் said...

இந்த கில்லி கோலி பம்பரம் பாண்டி எல்லாம் முன்ன எப்பவோ கேள்வி பட்டது. பம்பரம் மட்டும் அரசியல் சின்னமாயிட்டது. மீதி எல்லாம் எப்ப ஆவும்னு தெரியல.

சந்தர் said...

///பம்பரம் மட்டும் அரசியல் சின்னமாயிட்டது. மீதி எல்லாம் எப்ப ஆவும்னு தெரியல. ///
உங்களுடைய ஆதங்கம் நியாயமானது. அரசியல் கட்சிகள் தோன்றும் வேகத்தைப் பார்த்தால் வெகுவிரைவில் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.
உங்கள் வரவுக்கு நன்றி ப்ரதிமா. அடிக்கடி வந்து போங்க.