பாலகுமரன் எப்போது எழுதத்தொடங்கினார் என்பது எனக்குத் தெரியாது. நான் படித்த பாலகுமரனது முதல் கதை 1977 ஆண்டு மாலைமதியில், இரண்டாம் வெளியீட்டில் மகரிஷி எழுதிய “புவனா ஒரு கேள்விக்குறி“ (பின்னர் வெற்றிகரமான திரைப்படமானது. சிவக்குமார் அயோக்கிய ஹீரோவாகவும் ரஜனிகாந்த் அற்புதமான குணசித்திர வேடத்திலும் நடித்திருப்பார்கள்) கடைசிபக்கங்களில் ”ப்ளீஸ் பாலா” என்ற சிறுகதை வெளியாகி இருந்தது. மிகவும் அற்புதமான நடை. அதன்பிறகு பாலகுமரனது சிறுகதைகளை மட்டும் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். (எனக்கு ஏனோ பாலகுமரனது சிறுகதைகளில் இருந்த ஆழம் தொடர்கதைகளிலோ நாவல்களிலோ இல்லை என்றே இன்றும் படுகிறது.) அந்த காலத்தில் சாவி அவர்கள் பாலகுமரனுக்கு ”ஏதோ ஒரு நதியில்” என்ற தலைப்பிலும் சுப்ரமணியராஜுவுக்கு (இவர் இளம் வயதில் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் காலமானார்) ”எங்கோ ஒரு இரவில்” என்றும் தலைப்புக் கொடுத்து ஒரு மாத இதழில் வெளியிட்டார். இந்த “ஏதோ ஒரு நதியில்“ இருக்கிறது பாருங்கள் நான் இன்று வரையில் ஸ்லாகிக்கும் ஒரு அற்புதமான கதை. இ்ந்த கதையை படிக்கக்கூடாது. அனுபவிக்க வேண்டும்! பிறகு மெல்ல மெல்ல “யாதுமாகி நின்றாள்” “மெர்க்குரிப்பூக்கள்“ என்று பல கதைகள். நான் சிலவருட காலமாக பாலகுமரனது கதைகளை படிப்பதில்லை. எனக்குத் தெரிந்த பாலகுமரன் வேறு. இப்போது இருக்கும் பாலகுமரன் வேறு. அதை விடுங்கள். மீண்டும் எழுபதின் கடைசி ஆண்டுகளில் பாலகுமரன் எழுதிய கவிதைகள் இருக்கிறதே அவை ஒரு சுகானுபவம். எழுபதின் கடைசியிலும் என்பதின் ஆரம்பத்திலும் மாலன் அவர்கள் “திசைகள்” என்றொரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். (திரு சாவி அப்போது ஏகப்பட்ட பத்திரிக்கைகள் நடத்தி வந்தார். அவற்றில் திசைகளும் ஒன்று.) “திசைகள்“ குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வந்தது. (அந்த காலத்தில் ஆங்கிலத்தில் Youth Times என்றொரு பத்திரிக்கை இதுபோல வெளிவந்துக்கொண்டிருந்தது. அதனுடைய பாதிப்பாக இருக்கலாம்). அதில் மாலனும் பாலகுமரனும் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைகள் எழுதினர். ”வீடென்று எதைச்சொல்வீர்… அதுவல்ல எனது வீடு…“ என்ற மாலனது கவிதைகள் அற்புதமானவை. (வைரமுத்து கூட ஒரு கவிதை எழுதியதாக ஞாபகம். “அது ஒரு காலம் கண்ணே கனாக்காலம்” என்று தொடங்கும் அந்த கவிதை என்னுடைய ஞாபகப்பெட்டகத்தில் இருந்து எடுத்து பின்னொரு காலத்தில் தருகிறேன். அந்தக்கால வைரமுத்து நிஜமாகவே ஒரு வைரப் பெட்டகம்!) குறிப்பாக பாலகுமரனது இரண்டு கவிதைகள் எனக்கு இன்னமும் மறக்காமலிருக்கிறது.
”உனக்கென்ன கோவில் குளம்
சாமிபூதம் ஆயிரம் ஆயிரம்
வலப்பக்க கடல் மண்ணை
இடப்பக்கம் இரைத்திரைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே, நாளைக்கேணும் தவறாமல் வா!”
கடற்கரையில் காத்திருந்த காதலனை, வேறு எப்படியும் சொல்ல முடியாது. இந்தகால பாஷையில் சொல்லவேண்டுமென்றால் “சான்ஸே இல்லை!”
இதே போல மற்றொரு கவிதை. அட்டைபடத்தில் வந்திருந்தது என்று நினைக்கிறேன். சுகாசினி படம் போட்டிருந்தாக நினைவு.
‘பறித்து எறிந்தவைக் கொஞ்சம்
உருவி அறுத்தவைக் கொஞ்சம்
புரண்டு படுக்கையில்
நசுங்கி மடிந்தவைக் கொஞ்சம்
பதறி தவிக்கையில்
வேறுடன் போனவை ஆயிரம்…
நீயின்றி தளர்ந்த நாளில்
இப்புற்களின் மேலே அமர்ந்து
மொத்தமும் மீண்டும் நினைக்க
மனசுக்குள் சோகம் வளரும்
புற்களாய்… புதராய்… காடாய்…’
ஹும்… எனக்குத் தெரிந்த பாலகுமரன் வேறு. அது அந்தக் காலம்!
7 comments:
நீங்கள் சொல்லும் பிரியட்டில் நானும் இருந்தவன்.வார,மாத இதழ் எல்லாம் சூப்பர் ஹிட் அப்போ.
//”ஏதோ ஒரு நதியில்” என்ற தலைப்பிலும் சுப்ரமணியராஜுவுக்கு (இவர் இளம் வயதில் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் காலமானார்) ”எங்கோ ஒரு இரவில்”//
”மனசு ஒட்டாம அதர்மம பண்ணிட்டு அத தர்மம்ன்னு” அப்படின்னு ஒரு லைன் வரும்.மாத இதழ் மோனா?
பால குமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் கதைத் தொகுப்பு அருமை.
உண்மைதான். சுஜாதா இறுதிவரை சுவாரசியமாகவே படைப்புகள் தந்தார். பாலகுமாரன் பாதை மாறிவிட்டார்.
புதிய பாலகுமாரன் ஆன்மீகம் பக்கம் போய் விட்டாரா..
வருகைக்கு நன்றி. ரவிஷங்கர், துபாய் ராஜா, அமுதாகிருஷ்ணா அவர்களுக்கு.பழைய பாலகுமாரனும் Ayn Rand பாதிப்புடன்தான் எழுதிவந்தார் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஆன்மீகம் எழுதட்டும். சுஜாதா எழுதாத ஆன்மீகமா? நடைமாறிப்போன பாலகுமாரன் தான் என்னுடைய ஆதங்கம்.
பாலகுமாரனின் சிறுகதைகளில் இருந்த சுவாரஸ்யம் நாவல்களில் இல்லை என்பது எனக்கும் ஏற்புடையது.
http://kgjawarlal.wordpress.com
வயது முதிர்ச்சி இவர்களை ஒருவித பயத்தில் தள்ளுகிறது. அதற்க்கு ஆன்மிகம் உதவும் என்று நினைத்து அங்கேயே சரணாகதி ஆகிவிடுகிறார்கள். அதனால் (எழுத்து)நடைத் தளர்ந்து போகிறார்கள். அமரர் சுஜாதாவிற்கும் அப்படிப்பட்ட பயம் இருந்திருக்கிறது.,ஆனால் அவர் அதையே சிலாகித்து, நகைச்சுவையாகத் தந்தார். என்றுமே அவர் எழுத்து நடைத் தளர்ந்துப் போகவில்லை. அது சிலப்பேருக்குதான் வந்திருக்கிறது. என்ன செய்வது, பாலாவின் அந்தக் கால எழுத்துக்களைப் எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளவேண்டியதுத்தான்.
வாங்க ஜவர்லால், M.S.E.R.K.
//பாலாவின் அந்தக் கால எழுத்துக்களைப் எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளவேண்டியதுத்தான்.//
உண்மை தான்.
Post a Comment