Saturday, September 06, 2008

எங்கு போய் முட்டிக்கொள்வது?








விநாயகர் சதுர்த்தி வந்தாலே பயமாக இருக்கிறது.  நம்முடைய முழு முதல் கடவுள்.  ஓம்கார வடிவானவர். சித்திக்கும் புத்திக்கும் நாயகன். பிடித்து வைத்தாலே போதும் என்ற அளவில் எளிமையானவர். அரசமரத்தடியில் அமர்ந்துக்கொண்டு, வேண்டுவோருக்கு அருள காத்திருப்பவர்.

“கணானாம்த்வா கணபதிம் ஹவாமகே” என்று வேதம் கணபதியை போற்றுகிறது! சைவத்தில் சிவபெருமானுக்கே தடைகளை நீக்கி அருளியவர் அவர் என்று புராணம் சொல்கிறது. வைணவத்தில் கஜானனர் என்ற நாமத்துடன் மஹாவிஷ்ணுவின் சேனை முதலியாக இருப்பவர். இவ்வளவு ஏன், ஹிந்து மதத்துக்கு மாற்றானது என்று  சொல்லப்பட்ட பௌத்த - ஜைன மதங்களில் கூட விநாயகர் உண்டு. ஸ்ரீலங்கா எடுத்து செல்லவிருந்த ரங்கநாதரை விபீஷனரிடம் இருந்து சாமர்த்தியமாக வாங்கி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப்பண்ணிவிட்டு மலையுச்சில் போய் அமர்ந்தவர். அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட காவிரியை காக்கையாய் வந்து விடுவித்தவர் அவர். அத்தகைய விநாயகருக்கு இன்னமும் சில நாட்களில் கொடுமை நடக்க இருக்கிறது.  அத்தனை ஆத்திகர்களும் நாத்திகர்களை விட கேவலமாக நடக்கப் போகிறார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் சாதாரணமாக புழங்கும் தேவையற்ற வார்த்தைகளுக்கெல்லாம் சண்டை பிடிப்பவர்கள், அறிக்கை விடுபவர்கள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அரசியல் வாதிகளின் சிலைகளை அங்கஹீனம் செய்யப்படும்போதெல்லாம் கொதிக்கும் மக்கள் இதற்கென்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இந்துக்களை காப்பதற்காகவே முன்னணியில் இருப்பவர்களிடம் இந்த கொடுமைகளுக்கு ஏதும் பதில் உண்டா?

இராமாயணத்தில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. 

இராமர் ஒருமுறை சந்தியாவந்தனம் செய்வதற்காக ஒரு ஆற்றங்கரையில் தன்னுடைய வில்அம்பை மணலில் நட்டுவிட்டு ஆற்றில் இறங்கி கைகால்களை சுத்தம் செய்ய சென்றாராம். திரும்பி வந்து அம்பை மணலி்ல் இருந்து எடுத்துப் பார்த்தால் அந்த அம்பில் ஒரு தேரை குத்துப்பட்டு இருந்ததாம்.  அப்போது இராமர் அந்த தேரையை பார்த்துக் கண் கலங்கிக் கேட்டாராம், “நான் அம்பை குத்தபோகும்போது நீ சத்தமிட்டுஇருந்தால் இந்த குற்றம் நேர்ந்திராது அல்லவா?” அதற்கு அந்த தேரை,”எனக்கு யாரும் தீங்கிழைக்க முற்பட்டால் ஸ்ரீராமா என்று உன்நாமத்தை விளிப்பேன். ஆனால் ஸ்ரீராமனே இவ்வாறு செய்யும்போது நான் யாரை அழைப்பேன்?” என்றதாம்.

அது போல இருக்கிறது.  மாற்றுமதத்தவர் ஏதேனும் தீங்கிழைத்தால் நாம் பொங்கி எழலாம்.  செய்வதெல்லாம் சார்ந்த மதத்தினரே என்னும்போது எங்கு போய் முட்டிக்கொள்வது?

Tuesday, August 26, 2008

ஊருக்குள்ளே ஒரு அரசமரம்...




சென்னை பொது மருத்துவமனையை ஒட்டினால் போல ஒரு அரசமரம். நேற்று அங்கு போலீஸ்படையின் அதிரடியினால் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது . அங்கு சென்றுக் கொண்டிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டிக்கொண்டிருந்தார்கள். காரணம்?

சில ஆண்டுகளுக்கு முன்னால் யாரோ ஒரு பக்தர் (?) மர அடிபக்கத்தில் மஞ்சளையும் குங்குமத்தையும் தெளித்து மரத்தில் மஞ்சள் தடவி குங்குமம் பூசிவிட்டார். சிலநாட்களில் யாரோ ஒரு சிறிய அம்மன் சிலையை வைக்க, பொதுமக்கள் கற்பூரம் காட்டி பரவசம் அடைந்தார்கள். சிறிய பூக் கடைகள் கற்பூரம் விற்கும் கடைகள் அவ்வபோது தோன்றி போலீஸ் விரட்டும்போது மறைந்துக் கொண்டிருந்தது.
இருந்த அம்மன் சிலை சிறியதாக இருப்பதாக யாருக்கோ தோன்றியிருக்க வேண்டும். மிகப்பெரியதாக ஒரு அம்மன் சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வளவுதான் அங்கு ஒரு முழுக்கோயில் தோண்றிவிட்டது. அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. பொது மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்கிய அந்த அம்மன், யாருக்கோ இடைஞ்சலாகத் தோன்றியிருக்க வேண்டும்.

அந்த அம்மன் சிலை நடைப்பாதையில் சற்றே குறுகலான இடத்தில் இருந்தபோதிலும், மற்ற இடைஞ்சல்களை காட்டிலும் போக்குவரத்துக்கு மிக்ப்பெரிய இடைஞ்சலாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அந்த அரசமரம் மிகப்பெரியது, நடைப்பாதையை முழுமையாக அடைத்திருந்தது.

நேற்று காலை போலீஸ் படையின் உதவியோடு அந்த அம்மன் சிலை அகற்றப்பட்டது.

மாலையில் நான் அந்த வழியாகப்போன போது திடுக்கிட்டேன். அந்த அரசமரத்தடியில் புதியதாக மூன்று செங்கற்களை வைத்து, மஞ்சள் குங்குமம் பூசி கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இன்னமும் சில நாட்களில் அந்த செங்கற்களுக்குப் பதிலாக புதியதாக ஒரு அம்மன் சிலை தோன்றலாம். மீண்டும் அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப்படலாம். மீண்டும் ஒரு கோவில் கட்டப்படலாம்... மீண்டும் அந்தக் கோவில் இடிக்கப்படலாம்... மீண்டும்… மீண்டும்…

Friday, August 22, 2008

அதற்காக இப்படியா ஒன்றுமில்லாமல்… சே!

     நான் நினைக்கவேயில்லை. இப்படியெல்லாம் இருப்பார்கள் என்று. நானும் பார்க்கக்கூடாது என்றுதான் நிறையமுறை நினைத்திருக்கிறேன். ஆசை யாரைவிட்டது? சில சமயம் என்னோட பாழும் மனசுகூட, ‘ஒன்றுமே இல்லாதது கூட நன்றாகத் தான் இருக்கிறது’ என்று நினைக்கிறது. மனசை அடக்க முடிந்தால்தான் நாம் எல்லோரும் ஞானம் பெற்றிருப்போமே! ஒரே தரம் ஒரே தரம் என்று ஓராயிரம் தரம். ஓரக்கண்ணால் பார்க்கிறேன் பேர்வழி என்று வெட்கம்கெட்டு… ஏதோ இருக்கும்… ஏதோ இருக்கும் என்று ஒன்றுமே இல்லாத விஷயத்திற்காக…

      இனிமேல் ஆகட்டும். நான் பார்ப்பேனா. ஹூஹூம். சரி என்னை விடுங்கள். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை என்ன சொல்வது? இப்படியா? ஒன்றுமில்லாமல். சே! வெட்கமே இல்லாமல் எப்படித்தான் முடிகிறதோ இவர்களால்? 

      பட்டினத்தார் பாடியது போல “ காயமே இது பொய்யடா… காற்றடித்தப் பையடா…” என்பது நினைவுக்கு வந்தாலும், இந்த வெட்கம் கெட்ட மனசென்னமோ கேட்பதில்லை. ஏதோ இருக்கும்… ஏதோ இருக்கும் என்று, எத்தனைமுறை ஏமாந்தாலும்… மீண்டும் மீண்டும் எத்தனையோமுறை…

   நம்முடைய வேலையையை பார்த்துக்கொண்டு போகலாம். யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்றும் விட்டுப்போக முடியவில்லை. இந்த பொல்லாத மனசுக்கு பவித்ரம் என்பதே தெரியாது போல இருக்கிறது.

      அட, நாம் தாம் இப்படி என்று நினைத்தால், நிறையபேர் இப்படித்தான் போல இருக்கிறது. இது கூட பரவாயில்லை. இதை சிலாகிக்கிறவர்கள் எத்தனைப் பேர். அடடா… அற்புதம் என்று பரவசப்படுவர்கள் வேறு. 

       இதைக்கூட விடுங்கள். புற்றீசலைப்போல எத்தனைப்பேர் கிளம்பிவிட்டார்கள் ஒன்றுமே இல்லாமல். இதெல்லாம் நல்லதற்கா என்று தெரியவி்ல்லை.

      கொஞ்சம் விஷயத்தோடு வலைப்பூவில் எழுதுங்கப்பா…


Wednesday, August 13, 2008

பூட்டிய அறைக்குள் ப்ரேயர் பண்ணுங்கள்.


ஆலந்தூர் ஜோதிக்கும் ஆதம்பாக்கம் ஜெயலட்சுமிக்கும் அடிக்கடி செல்பவர்கள் நலன் கருதி இந்த செய்தியினை தெரிவிக்கிறேன்.

The Times of India, Chennai Edition 13-08-2008

Chennai: In what seems to be an act of moral policing, a special team from the Triplicane police station raided a mansion in Triplicane and arrested four persons, including three software professionals, for watching blue films in their room. Police claimed to have seized 57 digital video discs containing pornography from the room of three software professionals and seven more DVDs from the room of a mechanic. 
  The police team, which is now engaged in daily checks at lodges and mansions as part of security measures prior to Independence Day celebrations, raided a mansion on Triplicane High Road and arrested three software engineers in their late twenties, and a mechanic. The four were remanded in judicial custody. 
  Their ‘offence’ was watching blue films in their room, behind locked doors. “They had many pornography movie discs with them. Why should they have so many discs? There is a possibility that they might sell them in the market. That is why we arrested them,” S Lakshmi, deputy commissioner, Triplicane, said. 
  Police seem to have forgotten that such DVDs with pornographic content are available freely in markets like Burma Bazaar for just Rs 15 onwards. By selling 57 discs, the men could have made a maximum of Rs 1,000. “The claim of the police does not make any sense as the youth are paid a handsome salary,” another resident of the mansion said. 
  “The police have no right to intrude on us. We pay rent for our rooms and it is our private space. We are not criminals. We choose to stay in mansions because most landlords in the city refuse to rent their houses to bachelors. This incident is an example of police high-handedness,” Krishna Prabu, who stays in a mansion in Royapettah, said. 
  MORAL POLICING 
Police claim to have seized 57 DVDs containing pornography from three software professionals 
Seven more DVDs were seized from a mechanic 
Porn DVDs are available freely in markets like Burma Bazaar for as low as Rs 15 
By selling the 57 discs, the men could have made a maximum of only Rs 1,000

சென்னையில் நேற்று அதிரடியாக நான்கு பேரை போலீஸ் கைது செய்தது. காரணம் அவர்கள் ‘பலான படங்களை’ பார்த்துக்கொண்டிருந்தது. அதுவும் எங்கே? அவர்களுடைய மூடிய அறையில். போலீஸ் கூறிய காரணங்கள், அவர்களிடம் 57 பலான டிவிடி தட்டுக்கள்இருந்தது . எதற்கு இத்தனை டிவிடிக்கள். இதை அவர்கள் விற்பனை செய்வதனால் தானே என்பதாகும். The Times of India, பர்மா பஜாரில் ரூபாய் 15க்கு இத்தகைய ‘பலான படங்கள்’ இலகுவாக கிடைப்பதை ஏனோ போலீஸ் மறந்துவிட்டது. 57 டிவிடி தட்டுக்களை விற்பதன் மூலம் இந்த கணிப்பொறியாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடியது ரூபாய் 1000 மட்டுமே என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.

எது எப்படியோ. படம் பார்த்த அந்த நான்குபேர் தற்போது சிறைச்சாலையில். தாழிட்ட அறைக்குள் தனியாக உடை மாற்றிக்கொள்வதுகூட பயமாக இருக்கிறது. 


Thursday, April 17, 2008

எப்படி இருந்த நான்...

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!” நடிகர் விவேக் நடித்த இந்த நகைச்சுவை காட்சி பலரை கவர்ந்திருக்கும். சொல்லும்போதே சிலருக்கு சிரிப்பு வரக்கூடும். ஆனால் எனக்கு அப்படியல்ல. இதைச் சொல்லும்போதே என் கண்களில் கண்ணீர் கரைத்தட்டுகுகிறது. ஒரிரு சொட்டு கன்னத்தில் வழிந்தோட நான் மேலும் விவரம் சொல்லும்முன்னர் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறேன். காரணம் என் மனைவி.! கற்பனையை கன்னாபின்னா என்று ஓடவிடவேண்டாம். நானே சொல்கிறேன்.
என் மனைவிக்கு திருமணத்தின் போதே சற்று கனத்த சரீரம். ஏறத்தாழ என்னைப்போல. எங்கள் இருவருக்கும் ஏகப்பொருத்தம். உருவத்திலும் எண்ணத்திலும் மற்ற எல்லாவற்றிலும். நிறையமுறை என்னை வியக்கவைத்த உண்மை நான் சொல்ல வந்ததை அவள் சொல்வதும், என் மனைவி நினைப்பதை நான் சொல்வதும். இத்தனை இருந்தும் என் மனைவியிடம் இருக்கும் பலவீனம் சாதாரண விஷயங்களுக்குக்கூட டென்ஷன் ஆவது தான். தானும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்கி... பிள்ளைகள் படிக்கவில்லை என்றால், வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றால், அலாரம் வைத்த பிள்ளைகள் எழுந்திருக்கவில்லை என்றால், இவ்வளவு ஏன்? சாதாரண பென்சிலை மறந்து பள்ளிக்குப் போய்விட்டார்கள் என்றால் கூட அவ்வளவு தான். டென்ஷனில் இரண்டுபட்டுப் போகும் வீடு. என் பாடும் திண்டாட்டம் தான். (ஹமாம் சோப் விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதெல்லாம் சாதாரணம்!)
இத்தகைய டென்ஷன் பார்ட்டிகள் நேரத்துக்கு சாப்பிட்டார்கள் என்பது உலக நியதிகளில் கிடையாது. அதுகூட பரவாயில்லை. நிறைய நேரம் கவலைப்பட்டு சாப்பிடாமலேயே கழித்த நேரங்கள் பல உண்டு. நானும் கூடுமானவரை சொல்லிப்பார்த்துவிட்டு விட்டுவிட்டேன். எனக்கு உருப்படியான வேலை நிறைய இருக்கிறது. அங்குதான் நான் தவறிழைத்தேன்!
ஒரு நாள் இரவு திடீரென நெஞ்சு பிடிக்கிறது வலிக்கிறது என்று அவளாகவே ஆறிய பாலில் சிறிது சர்க்கரையை போட்டு குடித்து சிநிது நேர வேதனைக்குப் பிறகு சற்று தெளிவடைந்தாள். அவளாகவே கண்டுபிடித்த வைத்தியம். எப்போதாவது வந்துக் கொண்டிருந்த வலி அடிக்கடி வர ஆரம்பித்தது. சாப்பாடு சாப்பிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் மொத்தமும் வாந்தி.. சாப்பாட்டை விடுங்கள். சில சமயம் காபி சாப்பிட்டால் கூட வாந்தி. அரண்டு போனேன். அக்கம் பக்கம் இருந்த மருத்துவர்களிடம் படையெடுத்தேன். இரண்டு நாட்களில் சரியாகிவிடும் அவர்கள் கொடுத்த மருந்து மாத்திரை. எதற்கும் அசையவில்லை. நாளாக நாளாக சாப்பாடு கரண்டி அளவில் இருந்து ஸ்பூன் அளவுக்கு குறைந்து பின் அதுவும் குறைந்து திரவமாகி அந்த திரவமும் வாந்தியாகி...
இந்த இரண்டு ஆண்டுகளில் 25 கிலோ எடை குறைந்து, பிந்துகோஷ் போல இருந்த என் மனைவி (அந்தக் கால) கமலாகாமேஷ் போல ஆகிப்போனாள். நான் ஆடிப் போய்விட்டேன். என்னுள் குற்ற மனப்பான்மை குறுகுறுக்க நான் மிகவும் சிறுத்துப் போனேன். போதாதகுறைக்கு என் எடை குறையாமல் அப்படியே இருக்க, காண்போர் - தெரிந்தோர் எல்லாம் என்னை ஏளனமாகப் பார்த்து மிகுந்த கரிசனத்தோடு “என்ன சார் உங்கள் மனைவிக்கு சாப்பாடு போடாமல் எல்லாவற்றையும் நீங்களே சாப்பிட்டு விடுவீர்களா?” என்று கேட்க ஆரம்பிக்க, நான் வாழ்க்கையே வெறுத்துப்போய், உடனடியாகபோர்க்கால நடவடிக்கை எடுத்தேன்.
அரும்பாக்கத்திலிருக்கும் ஒரு பிரபல மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துப் போனேன். அந்த மருத்துவனையின் தலைமை மருத்துவர் என்ன விஷயம் என்று விசாரித்தார். அடுத்த கணம் ‘எப்போதும் போல சோதனைகள்’ என்று அவர் சொல்ல அதை ஒரு செவிலியர் எழுத தலைமை மருத்துவர் தன் கையெழுத்தை கிறுக்க எனக்கு கிறுக்கு பிடிக்க ஆரம்பித்தது. அந்த மருத்துவசோதனைகளில் பல தேவையில்லாதது என்று பாமரன் ஆகிய எனக்கே தெரிந்தது. என்ன தெரிந்து என்ன செய்ய?
இதெற்கெல்லாம் தலையானது, என் மனைவிக்கு செய்யப்பட்ட ‘பேரியம் டெஸ்ட்’ தான். இதை செய்ய ஒரு தனி மருத்துவரை அழைத்தார்கள். (அந்த மருத்துவர் ஏதோ ஒரு அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவராக தெரிந்தார்). என்ன விஷயம் என்று என்னைக் கேட்டு தெரிந்துக் கொண்டதும், என்னைப் பார்த்து “என்ன சார்... இப்படி பண்ணிட்டீங்களே” என்றார். ஏற்கெனவே குற்ற மனப்பான்மையில் இருந்த நான் மேலும் குறுகிப் போனேன். “இல்ல சார்... வந்து...” என்று முனங்கினேன். அந்த மருத்துவர் என்னை விடுவதாக இல்லை. “நீங்க எல்லாம் படிச்சி என்ன லாபம்” என்றார் காட்டமாக. நான் அவமானமாக, அழுகை வராதகுறையாக உணர்ந்தேன். என்ன செய்வது? முன்பே கவனிக்காதது என் தவறு தான். “சரி... சரி... டெஸ்ட்டுக்கு பணம் கட்டிட்டீங்களா” என்று நிச்சயப்படுத்திக்கொண்டு டெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துக் கொண்டார். ஒரு செவிலியர் என் மனைவின் நகைகளை தாலி உட்பட என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தாள். எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஆண்டவனை பிராத்தனை செய்தேன். உள்ளே என் மனைவியை அந்த செவிலியரும் மருத்துவரும் ஏதோ அதட்டுவது எனக்கு கேட்டது. கையாளாகதவனாக உட்கார்ந்திருந்தேன். சற்று நேரம் கழித்து என் மனைவி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உயிர்க்கோழி போல வெடவெடவென்று வந்தாள். அவள் கண்களில் நான் அவளை சித்திரவதை செய்வதுபோல ஒரு குற்றச்சாட்டு தெரிந்தது. என்ன நடந்தது என்று கனிவுடன் கேட்டேன். “என்னங்க பேரியம் கொடுத்துட்டு என்னை படுக்கவைச்சு எக்ஸ்ரே எடுத்தால் எப்படிங்க? ஏற்கெனவே என்ன சாப்பிட்டாலும் நிக்காமல் வாந்தி வந்துடுது. ஏன் வாந்தி எடுக்கறேன்னு என்னை திட்ராங்க. நான் என்ன செய்வது?” என்றாள் அழமாட்டாகுறையாக. “இந்த ஆஸ்பத்திரி வேண்டாங்க” என்றாள் முத்தாய்ப்பாக.
வெளியே வந்த அந்த மருத்துவர், “என்ன சார், இவங்க.” என்று ஏதோ சொல்ல வந்தவர், “சரி.. சரி.. நாளைக்கு வந்து ‘ரிப்போர்ட்’ எல்லாம் வாங்கிக்குங்க” என்று சொல்லிவிட்டு, ஏதோ செத்த எலியைப் பார்ப்பது போல எங்களைப் பார்த்துவிட்டு போய்விட்டார்.
மறுநாள் என் மனைவியின் அதீத எதிர்ப்பையும் மீறி அந்த மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்து வந்தேன். எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் பார்த்த அந்த தலைமை மருத்துவர் (இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்!) சினிமா படங்களில் வரும் மருத்துவர்களைப் போல கண்ணாடியை கழட்டிக்கொண்டு சற்று யோசனையில் இருந்துவிட்டு, “அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும்” என்று சொல்ல எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என் மனைவி “வாங்க போலாம், ஆண்டவன் விட்ட வழி” என்று எழுந்துக் கொண்டாள்.
ரூபாய் பதினைந்தாயிரம் போனதுகூட பெரிய விஷயமாகப் படவில்லை. இதுபோன்ற பெரிய மருத்துவமனைக்கு அழைத்துப்போய் அவமானப்பட்டு என்னைநானே ஏமாற்றிக் கொண்டதுதான் எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அப்போதுதான் என்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், நான் படும் அவஸ்தையைப் பார்த்து “ஏன் சார், எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் அரசாங்க மருத்துவமனையில் இருக்கிறார். அவர் ஏதாவது செய்வார்” என்று சொல்லி அங்கு போகுமாறு பணித்தார். மீண்டும் ஏகமாய் என் மனைவியை சமாதானப்படுத்தி அங்கு அழைத்துச் சென்று, இரண்டு நாட்களில் முடிய வேண்டிய வேலையை இரண்டு வாரங்களுக்கு இழுத்தடித்து ஏதும் நடக்காமல், உடலளவில் சோர்ந்துப் போன என் மனைவியை மனதளவிலும் நோகடித்து... நானும் நொந்துப் போய் நடைப்பிணமாய் ஆகிப்போனேன்.
நான் குமுதம், விகடன் இன்னும் இன்னப்பிற சஞ்சிகைகளை அதிகம் படிப்பவன் அல்ல. நான் படித்த இந்த பத்திரிக்கைகளின் பக்கங்கள் மிஞ்சிப் போனால் மளிகைக் கடைகளில் மடித்துக் கொடுப்பது தான். இந்தப் பத்திரிகைகளை படிப்பதை விட உருப்படியான வேலைகள் எனக்கு இருக்கிறது. அலுவல் வேலையாக பயணம் செய்யும்போதும் கூட சஞ்சிகைகளைவிட தினசரிகளை அதிகம் படிப்பவன் நான். அப்படிபட்ட நான் அலுவல் நிமித்தமாக டெல்லி செல்ல நேரிட தினசரி பத்திரிக்கைகள் ஏதும் கிடைக்காமல் ஒரு வாரஇதழை வாங்க நேரிட்டது ஒரு அதிசயம் தான். அதிசயங்கள் தினந்தோறும் நடப்பதில்லை. அந்த வாரஇதழை ஒரு எழுத்து விடாமல் படித்து முடித்துவிட்டு விளம்பரங்களை படிக்கும்போது அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது! “விருந்தா…மருந்தா?” என்று தலைப்பிட்டு “மெடிந்தியா” (MedIndia) மருத்துவமனையின் விளம்பரம் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நடையில் எழுதப்பட்டிருந்தது. அவ்வளவும் என் மனைவியின் வலிகள்… அவஸ்த்தைகள்…. எனக்கு அப்போதே ஊருக்குத் திரும்பிப்போய் என் மனைவியிடம் அந்த விளம்பரத்தை க் காட்டவேண்டும் என்று என் மனம் பரபரத்தது.
ஒருவாரம் கழித்து நான் வீடு திரும்பியதும் நான் செய்த முதல் காரியம் என் மனைவியை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தான். (அது ஒன்றும் சாதாரணமான காரியமாக இல்லை. என் மனைவி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மேல் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாகியிருந்தது!) சுதந்திரதின நன்னாளில் என் மனைவியை அந்த மருத்துவமனையில் சேர்த்தேன். நம்பினால் நம்புங்கள்! ஒரே நாள்!! என்டொஸ்கொபி பலூனீங் (endoscopy ballooning) என்ற பலூன் டைலடேஷன் (Balloon Dilatation)முறையில் உணவுக்குழாயில் ஒரு பலூனை செலுத்தி குறுகலான உணவுக் குழாயை விரிவுப்படுத்தி...
என் மனைவிக்கு ஏற்பட்டிருந்த நோய் அக்கலெஸியா (Esophageal Achalasia) உணவுக்குழாய் சிறுத்துப்போகும் நோய். உலகம் முழுவதும், ஒவ்வொரு வருடமும் லட்சத்தில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்களாம். இந்நோய் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள கீழ் கண்ட உரலை சுட்டவும்.

http://www.gastrointestinalatlas.com/English/Esophagus/Esophageal_Achalasia_/esophageal_achalasia_.html
மருத்துவமனையிலேயே என் மனைவிக்கு ஒரு டம்ளர் பழச்சாறு வாங்கிக் கொடுத்தேன். அவள் அதை சாதாரணமாக சாப்பிட்டபோது என் வயிறு நிரம்பிப்போனது.
சிகிச்சைமுடிந்து இப்போது ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிவிட்டது. என் மனைவி தற்போது நன்றாகத் தேறி வருகிறாள். அவள் சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்கும்போதும் நான் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால், “போங்க, எனக்கு வெட்கமாக இருக்கு!” என்று அகன்றுவிடுவாள். கமலா காமேஷ் போல ஆகிவிட்டிருந்த என் மனைவி தற்போது பிந்துகோஷ் போல அல்லாவிடினும், உடல் தேறிவிட்டது தெரிகிறது.
நேற்று என் மனைவி கீழே உட்கார்ந்துக்கொண்டு கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தவள் என்னிடம் “வரவர என்னால் கீழே உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு பெருத்துவிட்டது” என்றாள். அப்போது நான் சொன்னேன்,

“எப்படி இருந்த நீ, இப்படி ஆகிவிட்டாய்!”


***