விநாயகர் சதுர்த்தி வந்தாலே பயமாக இருக்கிறது. நம்முடைய முழு முதல் கடவுள். ஓம்கார வடிவானவர். சித்திக்கும் புத்திக்கும் நாயகன். பிடித்து வைத்தாலே போதும் என்ற அளவில் எளிமையானவர். அரசமரத்தடியில் அமர்ந்துக்கொண்டு, வேண்டுவோருக்கு அருள காத்திருப்பவர்.
“கணானாம்த்வா கணபதிம் ஹவாமகே” என்று வேதம் கணபதியை போற்றுகிறது! சைவத்தில் சிவபெருமானுக்கே தடைகளை நீக்கி அருளியவர் அவர் என்று புராணம் சொல்கிறது. வைணவத்தில் கஜானனர் என்ற நாமத்துடன் மஹாவிஷ்ணுவின் சேனை முதலியாக இருப்பவர். இவ்வளவு ஏன், ஹிந்து மதத்துக்கு மாற்றானது என்று சொல்லப்பட்ட பௌத்த - ஜைன மதங்களில் கூட விநாயகர் உண்டு. ஸ்ரீலங்கா எடுத்து செல்லவிருந்த ரங்கநாதரை விபீஷனரிடம் இருந்து சாமர்த்தியமாக வாங்கி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப்பண்ணிவிட்டு மலையுச்சில் போய் அமர்ந்தவர். அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட காவிரியை காக்கையாய் வந்து விடுவித்தவர் அவர். அத்தகைய விநாயகருக்கு இன்னமும் சில நாட்களில் கொடுமை நடக்க இருக்கிறது. அத்தனை ஆத்திகர்களும் நாத்திகர்களை விட கேவலமாக நடக்கப் போகிறார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் சாதாரணமாக புழங்கும் தேவையற்ற வார்த்தைகளுக்கெல்லாம் சண்டை பிடிப்பவர்கள், அறிக்கை விடுபவர்கள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அரசியல் வாதிகளின் சிலைகளை அங்கஹீனம் செய்யப்படும்போதெல்லாம் கொதிக்கும் மக்கள் இதற்கென்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இந்துக்களை காப்பதற்காகவே முன்னணியில் இருப்பவர்களிடம் இந்த கொடுமைகளுக்கு ஏதும் பதில் உண்டா?
இராமாயணத்தில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.
இராமர் ஒருமுறை சந்தியாவந்தனம் செய்வதற்காக ஒரு ஆற்றங்கரையில் தன்னுடைய வில்அம்பை மணலில் நட்டுவிட்டு ஆற்றில் இறங்கி கைகால்களை சுத்தம் செய்ய சென்றாராம். திரும்பி வந்து அம்பை மணலி்ல் இருந்து எடுத்துப் பார்த்தால் அந்த அம்பில் ஒரு தேரை குத்துப்பட்டு இருந்ததாம். அப்போது இராமர் அந்த தேரையை பார்த்துக் கண் கலங்கிக் கேட்டாராம், “நான் அம்பை குத்தபோகும்போது நீ சத்தமிட்டுஇருந்தால் இந்த குற்றம் நேர்ந்திராது அல்லவா?” அதற்கு அந்த தேரை,”எனக்கு யாரும் தீங்கிழைக்க முற்பட்டால் ஸ்ரீராமா என்று உன்நாமத்தை விளிப்பேன். ஆனால் ஸ்ரீராமனே இவ்வாறு செய்யும்போது நான் யாரை அழைப்பேன்?” என்றதாம்.
அது போல இருக்கிறது. மாற்றுமதத்தவர் ஏதேனும் தீங்கிழைத்தால் நாம் பொங்கி எழலாம். செய்வதெல்லாம் சார்ந்த மதத்தினரே என்னும்போது எங்கு போய் முட்டிக்கொள்வது?