Wednesday, February 14, 2007

காதல் போயின்... மினி தொடர் கடைசி பகுதி

காதல் போயின்...


மு.க.சு: ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேர்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ்... போலீஸ் ஸ்டேஷனில் கவிதா... இன்ஸ்பெக்டர் கொலை முயற்சி என்கிறார். லாயர் அங்கிளின் உதவியோடு விளக்கம் எழுதிகொடுத்துவிட்டு குழப்பத்தோடு வீடு வந்து சேர்கிறான் ஆனந்த். தூங்கி எழுந்தால் போனில் கவிதா!

போனில் கவிதா! விதி துரத்துகிறதா? பயமாக இருந்தது ஆனந்துக்கு. எதற்கு இவள் மறுபடியும் போன் செய்கிறாள்? எச்சரிக்கையாகத்தான் இவளை கையாளவேண்டும்.

“என்ன கவிதா? என்ன விஷயம்?”

“இத்தனை அமளியிலும் என்ன விஷயம்னு எப்படி கேட்க முடியுது ஆனந்த்?”
“கவிதா என்னை நம்பு. எனக்கு என்ன நடந்ததுனே தொியலை. நான் வேண்டும்ன்னே பண்ணலை. எனக்கு உயிர் பிழைக்கணும்னு தோணிண உடனே உன்னைத்தான் தேடினேன் கவிதா. Please என்னை நம்பு.”

“என்னை இதெல்லாம் நம்பச் சொல்றியா ஆனந்த்?”
“God promise கவிதா. உன்னை எப்படி புரியவைக்கறதுனு எனக்குத் தெரியலை”
“நாம இன்னிக்கு சாயந்திரம் 6 மணிக்கு வழக்கமா சந்திக்கிற restaurant -ல meet பண்ணலாம். நீ தவறாம வந்தா உன்னை நம்பறத்துக்கு try பண்றேன்.” கவிதா போனை வைத்துவிட்டாள்.

ஆனந்த் என்ன செய்வது என்று யோசித்தான். வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். போலீஸ்ஸ்டேஷனில் இருக்கும் complaint -ஐ வாபஸ் வாங்க வைக்க வேண்டும். கொஞ்சம் நடிப்புத்திறமையை காட்டினால் கவிதா நம்பிவிடுவாள். எத்தனைபேரை நம்ப வைத்திருக்கிறேன். ஆண் அழுதால் தாங்குவாகளா பெண்கள்? Sentimental -ஆ பேசினா கவுந்திடமாட்டாகளா? எத்தனைப் பேரை கவுத்திருக்கிறேன். கவிதாவை இன்றைக்கு அழுது ஒழித்துவிட வேண்டியது தான். ஆனந்த் மாலை 6 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

மாலை 6:10க்கு restaurant -க்கு கவிதா வந்தபோது ஆனந்த் முன்னதாகவே வந்து காத்திருந்தான். ஒரு மூலையில் டேபிள் பிடித்திருந்தான். கவிதாவை கண்டதும் கையசைத்தான். டேபிள் மீது அவனது mobile phone.

கவிதா மௌனமாக போய் அவனருகில் உட்காந்தாள். வந்த சர்வரிடம் இரண்டு coca-cola ஆடர் செய்தாள். சற்று நேரம் இருவரும் அமைதியாக உட்காந்திருந்தாகள். பிறகு கவிதா ஆனந்தின் கண்களைப் பாத்துக் கொண்டு, “ஏன் ஆனந்த்? ஏன் இப்படி பண்ணினே?”

“அது தான் சொன்னேனே கவிதா. இப்படி ஆகும்னு நானே நினைக்கலை. என்னோட கட்டு அவிழ்ந்ததும் எனக்கு பயமாயிடுச்சு. வாழணும்னு நினைப்பு வந்துடுச்சு. உடனே உன்னைத் தேடினேன். நீ கிடைக்காமல் நான் அழுத அழுகை எனக்குத்தான் தெரியும்”
“So, உனக்கு நீச்சல் தெரியும் இல்லையா?

இந்தக் கேள்வியை ஆனந்த் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. “வந்து ஏதோ கொஞ்சம் தெரியும். அதனால தானே நான் நம்ப இரண்டுபேரையும் கயிற்றால கட்டிவிடச் சொன்னேன். தப்பித்தவறி நான் பிழச்சி நீ போயிடக்கூடாதுன்னு தான் கயிற்றால கட்டிக்கிட்டு...”
“அது சரி. நீ எப்படி?”
“நான் S.I.E.T collegeல படிச்சப் பொண்ணு”
“So?” என்றான் ஒன்றும் புரியாமல்.

‘சென்னையிலேயே swimming pool இருக்கிற women’s college என்னோடது. எங்க காலேஜ்ல swimming compulsory’. என்று சொல்ல நினைத்ததை சொல்லாமல் ‘பச்’ என்றாள் சுவாரசியம் இல்லாமல். “எப்படியோ பிழைச்சேன்” என்னும் போது ஆனந்தின் mobile phone சிணுங்கியது. நம்பரைப் பாத்த ஆனந்த் திடுக்கிட்டான். ஷீலா!. மனதில் bulb எரிந்தது.

“ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சற்றுதூரம், கவிதாவுக்கு கேட்காத தூரம் சென்றான். அவன் திரும்ப வந்தபோது இருவருக்கும் coca-cola காத்திருந்தது. கவிதா அந்த coca-colaவையே வெறித்துப் பாத்துக்கொண்டிருந்தாள். “sorry கவிதா என்னுடைய old friend” என்று சொல்லிவிட்டு coca-cola ஒரே மூச்சில் குடித்தபின் கேட்டான் “இப்போ எங்கேயாவது போலாமா கவிதா? சினிமா ஏதாவது?”

“எனக்கு அந்த முட்டுக்காடு பாலத்துக்கு மறுபடியும் போகணும்னு ஆசையா இருக்கு ஆனந்த். போலாமா?” ஆனந்துக்கு சற்று சந்தேகம் வந்தது.
“முட்டுக்காடுக்கா எதற்கு?”
“இல்ல, ஆனந்த் நீங்க என்னைவிட்டு பிரிய முயற்சி பண்றீங்களோன்னு நினைச்சுத்தான் போலீஸ் கேஸ் எல்லாம் கொடுத்தேன். இப்போ நல்லா தெரிஞ்சிபோச்சு எல்லாம் என் தப்புதான்னு. அதான் கொஞ்ச நேரம் முட்டுக்காடு பாலத்துக்குப்போய் பேசிட்டு அப்படியே வழியில் போலீஸ் ஸ்டேஷன் போய் என்னுடைய complaintயும் வாபஸ் வாங்கிட்டு வந்துடலாம்னு..”

ஆனந்துக்கு இது நல்லதாகப் பட்டது. இந்தப் பொண்ணை இப்போது விட்டால் மனசு மாறி... நமக்கும் காலம் கடத்துவது நல்லதல்ல என்று பட்டது.
“முட்டுக்காடுக்கா சரி. நீ ஆசைபடற. அப்படியே நம்ப கல்யாணம் எங்கேன்னு அங்கேயே பேசிக்கலாம்” என்றான் சற்று உற்சாகத்துடன். அவர்கள் முட்டுக்காடு வந்தபோது மணி 8 ஆகிவிட்டிருந்தது. வாகன போக்குவரத்து அவ்வளவாக இல்லாமல் இருந்தது. நேற்று நிறுத்திய அதே இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தான் ஆனந்த். கவிதா நினைத்துக் கொண்டாள். ‘நேற்றைக்கும் இன்றைக்கும் தான் எத்தனை வித்தியாசம்?’

“என்ன கவிதா என்ன யோசனை?”
“ஒன்னுமில்ல. நேத்தைக்கும் இன்னிக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். நேத்து சாகத்துடிச்சோம். இன்னிக்கு வாழ ஆசைப் படறோம். சரி கல்யாணத்தை எங்க வைச்சுக்கலாம் எப்ப வைச்சுக்கலாம்?”
“கவிதா போலீஸ் ஸ்டேஷன்ல complaint ஐ வாபஸ் வாங்கிட்டு அப்படியே நேரா கோவிலுக்குப் போய்..”
“அது சரி எந்த கோவில் இந்த நேரத்தில் கல்யாணத்துக்கு திறந்து இருக்கும்? நேரம் காலம் எல்லாம் பாக்க வேண்டாமா?”
“இல்ல கவிதா நான் முடிவு பண்ணிட்டேன். இப்பவே நீ தாலி கட்டுன்னா கூட நான் ரெடி” என்ற ஆனந்த் “என்னவோ தெரியலை கொஞ்ச நேரமா தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. நெஞ்ச கரிக்குது”. என்றான்.

அவன் நிற்கவே சற்று தடுமாறுவது தொந்தது. கவிதா அதை கண்டுக் கொள்ளாமல் “ஆனந்த் அந்த நிலா வெளிச்சம் பாலத்துக்கடியிலே எவ்வளவு நல்லா இருக்கு பாரேன்!” என்றாள்.
ஆனந்த் மிகுந்த பிரயாசைப்பட்டு பாலத்திலிருந்து எட்டிப்பாக்க முயலும்போது அப்படியே தடுமாறி மேலிருந்து தண்ணீல் விழுந்தான். விழுந்தவன் மிகவும் பிரயாசைப்பட்டு நீச்சலடிக்க முயல முடியாமல் சோர்ந்துப் போய் மூழ்குவது தெரிந்தது. அவன் மூழ்கிய இடத்திலிருந்து வட்டவட்டமாய் நீரலைகள் பரவி கடல் அலைகளோடு கலந்தது.

நிலா வெளிச்சம் பாக்க ரம்யமாகத் தொந்தது. கடலில் நிலா தீற்றலாகத் தெரிந்தது. கடலலைகள தட்..தட்டென்று பாலத்தடியில் மோதும் சத்தம் சற்று சங்கீதமாகக்கூட இருந்தது. கடல் காற்று சற்று ஈரப்பசையுடன் இனம்புயாத மணத்துடன்... இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் இந்த கடல் தான் எவ்வளவு அழகு! எத்தனை கம்பீரம்!! எவ்வளவு பிரம்மாண்டம்!!!

கவிதா அவன் மூழ்குவதையே கண்கொட்டாமல் பாத்துக் கொண்டிருந்தாள். பிறகு கைப்பையில் இருந்து விஷம் என்று சிகப்பு எழுத்தில் எழுதியிருந்த சிறிய குப்பியை எடுத்தாள். “thank you coca-cola” என்று தண்ணீல் வீசியடித்தாள். அது யாருக்கும் அதிக சத்தம் கேட்காமல் ‘க்ளக்’ என்று முழ்கியது. கைப்பையில் இருந்த கடிதங்களை எடுத்தாள். அவளும் ஆனந்தும் அவகள் பெற்றோகளுக்கு எழுதிய, அவள் தபாலில் சேர்க்காத கடிதங்கள். தன்னுடைய கடிதத்தை மட்டும் சுக்கு நூறாகக் கிழித்து தண்ணீல் வீசியெறிந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் வழியில் ஆனந்துடைய கடிதத்தை தபால் பெட்டியில் சேர்த்தாள். “sorryடா ஆனந்த். என் வழி தனி வழி”. வழியில் எதிர்பட்ட ஆட்டோவில் ஏறி வீட்டை அடைந்தபோது மணி 10 ஆகிவிட்டிருந்தது. வீட்டு வாசலில் அம்மா. “எங்கடி போயிட்ட?” என்றாள் பதறிப் போய்.

“முக்கியமான உயிர் போற வேலை” என்று முணுமுணுத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கப் போணாள். நாளைக்காலை ‘marie stoppes clinic’ போகவேண்டும் என்று நினைத்தவாறே தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை பத்து மணிக்கு முட்டுக்காடு படகுத் துறையில் சிறு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்திலிருந்த ஒருவன் ‘பாவம் சின்ன வயசுப்பா’ என்று பரிதாபப்பட்டான். ‘போலீஸ்க்கு சொல்லியாச்சு. இப்போ வந்திருவாங்க’ என்றான் இன்னொருவன். அந்த சிறு கூட்டத்தின் நடுவில் ஒரு கால் மடங்கி முகமெல்லாம் வீங்கி வாயில் நுரை தள்ளி திறந்த கண்களில் ஈ மொய்க்க... யாரோ ஒரு பரோபகாரி தன்னிடம் இருந்த துண்டால் பிணத்தை மூடினான்.

மறுநாள் தினமலர் பத்திரிக்கையில் எட்டாம்பக்கம் மூலையில் சின்னதாக ஒரு பெட்டிசெய்தி வந்திருந்தது.


வாலிபர் தற்கொலை
சென்னை: முட்டுக்காடு பாலத்திலிருந்து ஒரு வாலிபர் கடலில் குதித்து நேற்று தற்கொலை செய்துக் கொண்டார். கடலில் குதிக்கும் முன்னர் அவர் விஷம் அருந்தியிருப்பது தொிய வந்துள்ளது. அந்த இளைஞன் பெயர் ஆனந்த் என்பதும் அவர் ஒரு பிரபல தொழிலதிபாின் ஒரே மகன் என்பதும் தொியவந்துள்ளது. அவருடைய தந்தைக்கு இறக்கும் முன்னர் எழுதிய கடிதத்தில் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் காரணம் என்று தொிகிறது. விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த இளைஞர் ஏற்கனவே ஒருமுறை தன்னுடைய கைகால்களைக் கட்டிக்கொண்டு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தொிவித்தார். அந்த முயற்சியில் வெற்றிப் பெறாததால் இம்முறை விஷம் அருந்திவிட்டு கடலில் குதித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.


- : முற்றும் : -

Wednesday, January 31, 2007

காதல் போயின்...2 (மினி தொடர் பாகம் 2)

காதல் போயின்

மு.க.சு: ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேர்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ்...

ஆனந்த் உணர்வுக்குவர சற்று நேரம் பிடித்தது.
“இங்கே ஆனந்த்ன்றது யாரு?” சரியான போலீஸ் தோரணை.
“நா.. நான் தான்”
“இன்ஸ்பெக்டர் ஐயா கூட்டியாரச் சொன்னார்”
“ஏன்? எதுக்கு?”
“அதெல்லாம் தெரியாது. ஸ்டேஷனுக்கு வந்து தெரிஞ்சிக்குங்க”
“விடிஞ்சதும் வரேன்”
போலீஸ்காரர் குரல் மாறியது. “யோவ். முதல்ல ஜீப்ல ஏறுயா”
ஆனந்த் ஆடிப்போனான்.
“டிரெஸ் மாத்திகிட்டு வந்துடரேன்” என்றான் கீழ் ஸ்தாயில்.
“சீக்கரம் ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் சாய்ந்துக் கொண்டு ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார் போலீஸ்.
ஆனந்துக்கு என்ன ஏதுவென்று புரியவில்லை. கவிதாவுடைய dead-bodyயை இதற்குள் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. ஒருவேளை தப்பி பிழைத்திருப்பாளோ? இல்லையே! அவள் உள்ளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்ததே. வந்து காப்பாத்தக்கூட யாரும் அருகில் இல்லையே!

அந்தக் குழப்பத்தோடு family லாயர் தினேஷ்க்கு போன் செய்தான். ஐந்து ரிங் அடித்தப்பின்பு லாயர் தினேஷ் அரைகுறையான தூக்கத்துடன் ‘ஹலோவ்’ என்றார்.
ஆனந்த் அவரிடம் போலீஸ் தன்னை அழைத்துக்கொண்டு போக வந்திருப்பதை அழாதகுறையாக தெரிவித்தான்.

“என்ன விஷயம்? தப்புதண்டா ஏதாவது செஞ்சியா என்ன? சிங்கப்பூரில் இருக்கிற உங்கப்பன் கேள்விபட்டா என்னை கொன்னுடுவான்”
“இல்லை அங்கிள். நான் எதுவும் பண்ணலை”
“சரி சரி. நீ அவங்களோட போ. நான் போலீஸ் ஸ்டேஷன் வரேன்.”

ஆனந்த் டீசர்ட் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு வீட்டு வாசலை அடைந்தபோது போலீஸ் கடுகடுவென்று இருந்தார்.
“எவ்ளோ நேரம்யா. அப்படியே ‘டிமிக்கி’ குடுக்கலாம்னு பாக்கறியா?”

ஆனந்துக்கு என்ன ஏது என்று யூகிக்க முடியாவிடினும் ஏதோ விபரீதம் என்று உ.கை.நெ.கனியாக புரிந்தது. லாயர் அங்கிள் சீக்கிரமாக வரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டு ஜீப்பில் ஏறினான்.
ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது அதிகாலை மணி 3 ஆகிவிட்டிருந்தது.
வானம் குளிருக்கு மேகத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளி பனிபடுகை ஊடே சன்னமாகத் தெரிந்தது. விழித்திருந்த யாவிலும் இரவுப் பணி செய்த களைப்பு தெரிந்தது. போலீஸ் ஸ்டேஷனை ஒட்டிய டியூப்லைட்டின் வெளிச்சம் அதன் கம்பத்துக்கே போதுமானதாக இல்லை. அருகில் இருந்த டீ கடையை திறக்க ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த நாயர் அநியாயத்திற்கு பாலில் தண்ணீரை விளாவிக் கொண்டிருந்தார். சைக்கிளில் சென்ற நைட் ஷிப்ட் முடித்த இருவர் தங்கள் சூபவைசரை கெட்ட வார்த்தையில் சத்தமாகத் திட்டிக்கொண்டு சென்றார்கள் ஒதுங்கிய ஒற்றை நாய் ஜீப் அருகில் வந்துவிட்டு போலீஸ் லட்டி பயத்தில் வேகமாக எட்டிச் சென்றது.

“உள்ள போய்யா” என்றார் போலீஸ். கொஞ்சம் விட்டால் கழுத்தை நெட்டித் தள்ளுவார் போலிருந்தது. உள்ளே நுழையும்போது லாயர் தினேஷ் எதிர்பட்டார்.
“எதுவும் கவலைப்படாதே. எல்லாத்தையும் இன்ஸ்பெக்டாிடம் பேசிட்டேன். அது சரி அந்த பொண்ணை ஏண்டா கொலை பண்ற லெவலுக்குப் போனே?”

ஆடிப்போணான ஆனந்த். “எந்தப் பொண்ணு?”
“அது சரி. ஒண்ணு ரெண்டுன்னா ஞாபகம் வைச்சுப்பே!”

“உள்ள போய்யா” என்றார் போலீஸ் மறுபடியும்.
“வாய்யா மன்மதா” என்றார் இன்ஸ்பெக்டர் கிண்டலாக. “பயங்கரமான ஆளய்யா நீ. உன்னையெல்லாம் straight- ஆ encounter -ல போட்டுத் தள்ளணும்”

“இன்ஸ்பெக்டர். நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்றார் லாயர்.
“மொதல்ல இந்த லாயரை போட்டுத் தள்ளணும்” என்று முணுமுணுத்தவாறே, “ஏம்மா லட்சுமி அந்தப் பொண்ணை இட்டாமா” என்றார் வெறுப்புடன்.

அந்தப் பொண்ணு என்றதும் ஆனந்த் நிஜமாகவே அதிர்ந்துப் போணான். என்ன எப்படி என்று யோசிப்பதற்குள் உள்ளிருந்து கவிதா பெண் போலீஸ் துணையுடன் சற்றே ஈரத்தலையுடன் ஈர உடையுடன் உள்ளிருந்து வெளியே வந்தாள். ஆனந்தை கண்ணுக்குள் பார்க்க முற்பட்டாள். ஆனந்த் தலையை தாழ்த்திக் கொண்டான்.

“இந்தப் பொண்ணை நீ கொலை செய்ய முயற்சி செய்ததாக complain செய்திருக்காங்க. இதுக்கு நீ என்னா சொல்ற?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இன்ஸ்பெக்டர் சார் இந்தப் பையனும் அந்தப் பொண்ணும் தற்கொலை பண்ணிக்க பாத்திருக்காங்க. அதுல இவன் முதல்ல பொழச்சுக்கிட்டான். அந்தப் பொண்ணு அப்புறம் பொழச்சு எழுந்து பாத்திருக்கிறாங்க. இவன் இல்லாததனால கொலை அது இதுன்னு...”

“லாயர் சார். பையனை enquiry பண்ணும்போது நீங்க கொஞ்சம் சும்மா இருங்க”
“பையன் சார்பாத்தான் பேசறேன்”
“அதெல்லாம் கோர்ட்ல வைச்சுகங்க. நீங்க இது போல பேச ஆரம்பிச்சா பையனை இப்பயே கொலை முயற்சி அது இதுன்னு உள்ளத் தள்ள வேண்டி வரும். நான் இப்போதைக்கு 309ல விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். அநாவசியமா என்னை 120,307ல எல்லாம் கேஸ் போட வைச்சிராதிங்க. 10 வருஷம். non-bailable வேற. தெரியுமில்ல? தம்பி நீ சொல்லு இன்னா நடந்துச்சு?”
----------------------------------------------------------------------------------------------------------------------------
IPC 309. Attempt to commit suicide: Whoever attempts to commit suicide and does any act towards the commission of such offence, shall he punished with simple imprisonment for a term which may extend to one year 151[or with fine, or with both].
IPC 307. Attempt to murder : Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty or murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and if hurt is caused to any person by such act, the offender shall be liable either to 104[imprisonment for life], or to such punishment as is here in before mentioned.
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆனந்துக்கு எங்கு ஆரம்பிப்பது எப்படி கோவையாகச் சொல்வது என்று புரியாமல் சற்று மௌனமாக இருந்தான். பிறகு நிதானப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தான்.
“சார், நானும் கவிதாவும் lovers சார். வெவ்வேற ஜாதி. எங்கப்பாவும் சாி அவள் அப்பாவும் சாி ரொம்பவும் prestige பாக்கறவங்க. அடுத்த ஜன்மத்திலாவது சேரலாம்னு தற்கொலைப் பண்ணிக்க முடிவு பண்ணி கைகாலை கட்டிக்கிட்டு பாலத்து மேல இருந்து விழுந்தோம். விழுந்ததில் என்னோட கட்டு அவுத்துகிச்சி. அதே நேரம் நாம செத்துப் போப்போறோம்னு பயமாயிடுச்சு. அப்பிடிஇப்படின்னு நீச்சல் அடிச்சு கவிதாவை தேடினேன். கிடைக்கல. சாின்னு வீட்டுக்கு வந்துட்டேன்”

“கல்யாணத்துல பிரச்சனைனா பேசாம ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது தானே. இப்பதான் போலீஸ் ஸ்டேஷன்லேயே கல்யாணம் கருமாதி எல்லாம் பண்ணி வைக்கறாங்களே. அது சரி உனக்கு போலீஸ்ல சொல்லணும்னு தோணலையா?”

“பயந்துட்டேன் சார். கொஞ்சம் நிதானப் படுத்திகிட்டு கிளம்பும்போது போலீஸ் வந்துட்டார்”

“கொஞ்சநேரம் கழிச்சி வந்திருந்தா சவாரி உட்டுருப்பே!” என்ற இன்ஸ்பெக்டர் நயன head constable பக்கம் திரும்பி, “சரி.. சரி ஏகாம்பரம் இவன் கிட்ட எழுதி வாங்கிக்க. லாயர் கிட்டயும் கையெழுத்து வாங்கிக்க”. என்றார். பிறகு லாயரைப் பாத்து “லாயர் சார். நான் ஏதும் FIR போடலை. திருப்பியும் enquiry ஏதும் கூப்பிட்டா வரணும்;. நான்; totalஆ release பண்ற வரைக்கும் பையன் எங்கும் ஊர் கீர் போகக்கூடாது” என்ற இன்ஸ்பெக்டர் நாற்காலியில் சாய்ந்து உட்காந்தார். “சே! என்ன கேஸ்டா இது. காலங்காத்தால” என்றார் அலுப்புடன்.

பிறகு கவிதாவைப்பார்த்து, “ஏம்மா. புடிச்சப்பொண்ணுதான நீ. இவனைமாதிரி காவாலிபசங்க கூப்பிட்டா உடனே போயிடுவியா? உன்னைச் சொல்லி பிரயோஜனம் இல்ல. உன்னோட அப்பன் ஆத்தாளைச் சொல்லணும்”. என்ற இன்ஸ்பெக்டர் “யோவ் டிரைவர் ராமசாமிகிட்டச் சொல்லி ஜீப்ல இந்தப் பொண்ணை அவ வூட்டாண்ட உட்டுட்டுவரச் சொல்லுயா. விடியறத்துக்குள்ள பொண்ணு வூடுபோய் சேரட்டும். ராவு பூரா பொண்ணு வரலேன்னு அவ அப்பனாத்தா என்னாபாடு படராங்களோ!” என்றவர், ‘கண்டவன் கஷ்டமெல்லாம் நாம பட வேண்டியிருக்கு’ என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைபேசியில் விடுவிடுவென பட்டனை அழுத்தினார். எதிர்பக்கம் attend பண்ண சற்று நேரம் ஆயிற்று போலும். ‘சே! இந்த காலத்துப் பொம்பளைங்க என்னா தூக்கம் தூங்கறாங்கப்பா’ என்று அலுத்துக் கொள்ளும்போது எதிர்பக்கம் ஒரு பெண் குரல் “அலோ யாருங்க பேசறது?’ என்றது தூக்கக் கலக்கத்துடன்.
“ஜானகி நான்தான் பேசறேன். நம்ப பொண்ணு கல்யாணி எங்கே?” என்றார் சற்று பதட்டத்துடன்.
“உள்ரூம்ல தூங்கறா. என்ன விஷயம்ங்க? எழுபட்டுங்களா?”
“ஒன்னுமில்ல.. சரி சரி தூங்கட்டும் எழுப்பாதே” என்றார் சற்று நிம்மதியுடன்.

ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒருவழியாக கிளம்பி லாயர் அங்கிளின் தொணதொணப்பிலிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்த போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. ஆனந்துக்கு எதுவுமே புயவில்லை. ‘சே! எப்படி ஆச்சு! எங்கே தப்பு செய்தோம்?’ என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தூங்கிப் போணான்.


தூக்கம் கலைந்து எழுந்த போது mobile போன் மணி கிணுகிணுத்துக் கொண்டிருந்தது. காலை 10½ ஆகிவிட்டிருந்தது. ஒரு வேளை மறுபடியும் போலீஸா என்ற பதட்டத்தோடு mobile போனை எடுத்தான். எதிமுனையில்.. கவிதா!


- தொடரும்

Tuesday, January 30, 2007

காதல் போயின்...1 (மினி தொடர்)

சாதல் என்பது பிறருக்குறியதாதலால்
அன்பே வா! காதல் செய்வோம்!!

காதல் போயின்



அன்புள்ள அம்மா அப்பாவுக்கு

பரிதாபத்துக்குரிய உங்கள் மகள் எழுதிக் கொள்வது.

இந்த உலகத்தில் காதலிப்பது என்பது ஏழேழு ஜன்மத்துக்கும் பாவம் என்பது தொயாமல் காதலித்த பாவத்திற்காக உயிரைவிட தீமானித்து விட்டேன். உலகத்தில் உள்ள எல்லா பெற்றோகளைப் போல கௌரவத்தையும் இறந்து விட்ட பின் என் உடலையும் கட்டிக் கொண்டு அழுங்கள்.

நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன். என்னுடைய சாவுக்கு யாரும் பொறுப்பல்ல.

- பரிதாபத்துக்குறிய அபலை.

“இது போதுமா ஆனந்த். வேற எதுனா எழுதணுமா?”
“போதும் கவிதா. கையெழுத்துப் போட்டுக் கொடு. போஸ்ட் பண்ணலாம்.”

இதேபோல ஆனந்தும் எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினான். ஏறத்தாழ இதே போல அவன் பெற்றோருக்கு. கவிதாவுக்கு திடீரென்று வேத்தது. ஆனந்தையே வெறிக்கப் பாத்ததாள். அவனிடம் சாகப்போகிற பயமே ஏதும் இல்லை. அனைத்துக்கும் துணிந்தவன் போல முற்றும் துறந்த முனிவன் போல ஏதொரு பதட்டமும் இல்லாமல்.

“நாம எப்போ கல்யாணம் செஞ்சிக்கப்போறோம் ஆனந்த்?”
“நாம கொஞ்சம் different இல்லையா அதனால..”
“அதனால?”
“நாம குழந்தை பிறந்தபிறகு கல்யாணம் பண்ணிக்கிலாம்!”
“என்னது?”
“அதற்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பிக்கலாமா?”
சற்று அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சற்று லேட்டாக புரிந்துக் கொண்டு,
“செருப்பு பிஞ்சிடும்” என்றாள் செல்லக் கோபத்தோடு.
“அதுக்குத்தான் படுக்கையில் செருப்பு போடக்கூடாது” என்றான் விடாமல்.

“என்ன கவிதா பயமாக இருக்குதா?”
“நாம தற்கொலை செய்துக் கொள்ளத்தான் வேண்டுமா ஆனந்த்? உயிரோட போராடி பார்த்தால் என்ன?”


“பைத்தியம் போல உளராத கவிதா. உன்னை விடு. நாம காதலித்தப் பாவத்துக்காக உன்னோட குடும்பம் நாசமா போகணுமா? என்னோட அப்பாவைப் பத்தி உன்கிட்ட எவ்வளவு சொல்லியிருக்கேன். பணம் பத்தும் செய்யும் கவிதா. கொலைகூட. உங்கள் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிடுவார் என் அப்பா. உனக்கு அவருடைய வேரொரு முகத்தை பற்றித் தொயாது. இவ்வளவு நேரம் இதெல்லாம் பேசிதானே இந்த முடிவுக்கு வந்தோம். சரி விடு. உனக்கு பிடிக்கலைனா வேணாம். ஆனா நாம இந்த ஜன்மத்துலே ஒன்னு சேறது முடியாத விஷயம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழறது முடியாததுனால சேர்ந்து சாக முடிவெடுத்தோம் இப்போ நான் மட்டும் தான் தனியா சாகணும் போல...”

“இல்ல ஆனந்த். நானும் நீயும் சேர்ந்து சாகலாம். வாழ ஒரு சந்தப்பம் கிடைக்காதபோது சாகும்போதாவது நம்மோட காதலின் அர்த்தம் புரியட்டும்.”

“நம்ப கல்யாணம் ரொம்ப simpleஆ இருக்கணும் ஆனந்த். just a register marriage and a reception”
“ஏன் பிரம்மாண்டமான கல்யாணம்னா வேணாமா?”
“வேணும்தான். ஆனா எங்க வீட்டையும் உங்க வீட்டையும் நினைச்சாதான் பயமா இருக்கு!”
“அதெல்லாம் கவலைப்படாதே. ஒரு குழந்தையோட போய் நின்னா எல்லாம் சாியாப் போகும்!”
“உன்கிட்ட எனக்கு பிடிக்காததே அதுதான். உன்கிட்ட எதுபத்தி பேசினாலும் - குழந்தை பிறக்கறதுலே தான் போய் முடியும்”
“உன்கிட்ட எனக்கு பிடித்ததே அதுதான்” என்றான் ஆனந்த்.

“சரி வா! சாகலாம்!!”
“எங்கே?”
“முட்டுக்காடு பக்கத்தில் ஒரு பாலம் இருக்கு. அடியில் கடல் தண்ணீர். ஒரு பத்து ஆள் ஆழம் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு ஈ காக்கா இருக்காது”
“ஈ காக்கா எல்லாம் தான் நாம செத்துட்டப்புறம் வருமே” என்றாள் சோகமாக.
“அது சரி, உனக்கு நீச்சல் தெரியுமா?” என்றான் ஆனந்த் திடீரென.
“உங்களுக்கு?”
“நீச்சல்னு எழுதினா படிக்கத் தெரியும்”
“உங்களுக்கே தெரியாது. எனக்கு எப்படித் தெரியும்?”
“சாிதான். city girl. சென்னை ரோடுல மழைகாலத்துல நீச்சல் அடித்தால் தான் உண்டு”

ஆனந்த் அவனுடைய கடிதத்தை ஒரு கவரில் வைத்து ஒட்டி அவனுடைய வீட்டு விலாசம் எழுதினான். அவளும் அஃதே. அங்கே பக்கத்தில் ஒரு தபால் பெட்டி இருந்தது. அடுத்த தபால் எடுக்கும் நேரம் காலை 8 மணி என்று இருட்டில் கஷ்டப்பட்டு படித்தான் ஆனந்த். இரவு மணி 10 ஆகிவிட்டிருந்தது. வீதியில் இரெண்டொருவர். இவர்களை யாரும் சட்டை செய்யவில்லை.

“இன்னமும் 10 மணி நேரம் கழித்துத் தான் நம்முடைய விதி எல்லோருக்கும் தெரியும். கவிதா இந்த கடிதங்களை நீயே தபால் பெட்டியில் போட்டுவிடு” என்று இரண்டு கடிதங்களையும் கவிதாவிடம் கொடுத்தான் ஆனந்த்.

“நம்ப கல்யாணப் பத்திரிக்கை ரொம்ப grandஆ இருக்கணும் ஆனந்த்”
“கல்யாண பத்திகையில் எதுக்கு grand?”
“என்னோட friends எல்லாம் invitationஐ பார்த்து அசந்துடணும்”
“அவங்க அசந்து போறத்துக்கு வேற விஷயம் வைச்சுருக்கேன்.”
“என்ன?” என்றவள் சற்று நேரம் கழித்து புரிந்தவுடன் “சீ!” என்றாள்

கவிதாவுக்கு மனம் கனத்தது. அவளால் துக்கத்தை அடக்கமுடியாமல் அழுகையாக வந்தது. சுரிதார் துப்பட்டாவில் கண்களை துடைத்துக் கொண்டாள். கையை தபால் பெட்டிக்குள் நுழைத்து அப்படியே சற்று நேரம் நின்றுக் கொண்டிருந்தாள்.
“என்ன கடிதங்களை போட்டுவிட்டாயா?”
துப்பட்டாவை சாிசெய்துக் கொண்டு தன்னுடைய கைகளை விரித்துக் காட்டினாள்.
“ஆச்சு! எல்லாம் ஆச்சு!”

ஆனந்துடன் மோட்டாபைக்கில் போனபோது அந்த நேரத்தில்கூட ஆனந்தமாக இருந்தது. அவனின் அருகாமையும் manlyயான அவனின் deodrant வாசனையும் அவளை அந்த நேரத்திலும் மிகவும் ஈர்த்தது. ஏதோ கதை சொல்வாகளே சாகும்போது தேன்துளியை ருசித்தவனைப் பற்றி. அதுபோல.

அந்த பதினொருமணி ராத்திரிவேளையில் அந்த பாலம் அம்போ என்று அனாதையாக யாருமில்லாமல் இருந்தது. பாலத்துக்கடியில் நீ மோதுவது digital stereo effectல் பிரம்மாண்டமாக, சற்று பயமாகக் கூட இருந்தது. ஆனந்த் சற்று நேரம் கவிதாவையே பாத்துக் கொண்டிருந்தான்.

“நம்ப குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம் ஆனந்த்”
“என்ன? என்ன சொன்ன?” என்றான் ஆனந்த் அதிர்ந்துப் போய்.
“ஆமா. ஆனந்த். இன்னும் 8 மாசத்துல நீங்க அப்பா ஆகப் போறீங்க!”
“அப்படீங்கற?”
“நம்ப கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல நடந்தாத்தான் நல்லது ஆனந்த். இல்லேன்னா நமக்கு அசிங்கமாயிடும்”
“என்ன அசிங்கம்?”
“அது சாி. கல்யாணப் பொண்ணு pregnant ஆ இருந்தா பாக்கறவங்க என்ன சொல்வாங்க?”
“அதுவும் சரிதான்”

“என்ன ஆனந்த் என்னையே பாத்துக்கிட்டிருக்கே?”
“ஒன்னுமில்லை கவிதா. இன்னும் கொஞ்சநேரத்தில் நாம அவ்வளவுதான்”
“நாம பிரியப் போறோம் இல்லை அதுதான் எனக்கு கவலையா இருக்கு, ஆனந்த்”
“என்ன சொல்ற கவிதா?”
“ஆமா! நாம கடல்ல விழுந்தவுடன் உங்களுக்கு ஒரு அலை எனக்கு இன்னொரு அலை”
“நாம பிரியப் போறதில்லை கவிதா. சேர்ந்தேதான் சாகப்போறோம்” என்றவன் மோட்டாபைக்கின் side-boxஐ திறந்து ஒரு நைலான்கயிறை எடுத்தான். கவிதா அவனை ஆச்சாயம் + கேள்விக்குறி கலந்த முகபாவனையோடு அவனை நெருங்கினாள்.
“இந்த கயிற்றால் நம்மை நாம் கட்டிக்கொள்ளப் போகிறோம். இரண்டுபேரும் சேர்ந்தேதான் சாகப்போகிறோம்”
கவிதா முகத்தில் ஆச்சாயம்+குழப்பம்+பயம் அனைத்தும் அந்த இருட்டிலும் டாலடித்தது.
“நான் ரெடி. நீ ரெடியா?” என்றான் ஆனந்த் கோடிஸ்வரன் ஸ்டைலில்.

கவிதாவுக்கு அந்த இரவு நேரத்திலும் வேர்த்தது. மனதுக்குள் ஆண்டவனை ப்ராத்தித்துக் கொண்டாள். அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டாள். மனம் மிகவும் கனமாகிப் போனது. எதற்காக அழுகிறோம் என்று தொியாமல் அழுதாள். ஆனந்த் அவளை அணைத்துக் கொள்ள வந்தாள். வேண்டாம் என்று விலகினாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, “சரி. நான் ரெடி” என்றாள் பலஹீனமாக.
“இந்த கயிற்றால் நீயே நம்மிருவரையும் கட்டிவிடு கவிதா”

கவிதா குழப்பத்தோடு ஆத்திரத்தோடு கவலையோடு பயத்தோடு கயிற்றால் தன்னையும் அவனையும் சேர்த்துக் கட்டினாள். ஆனந்தோடு பழகிய நாட்கள் சுற்றிய இடங்கள் எல்லாம் நினைவுக்கு வர இன்னமும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. இருவரும் மெல்ல நகர்ந்து பாலத்தின் விளிம்புக்கு வந்து, மேலே இருந்து கீழே குதித்தார்கள்.

குதித்த அவர்கள் அந்த 27 அடி உயரத்திலிருந்து கடலின் மேல் மட்டத்தில் ‘தட்’ என்று மோத சாியாக 1.3 வினாடிகள் பிடித்தது. அவர்கள் விழுந்ததன் ஒலிஅலைகள் 79 அடி சுற்றளவு தூரத்துக்கு பரவியது. கீழே விழுந்ததும் கடலடியில் 12 அடி செங்குத்தாக சென்றார்கள். விழுந்த இடத்தில் இருந்து நீர்வட்டங்கள் தோண்றி 23 அடி ஆரம் அளவு பொிதானபின் காணாமல் போக ஏறத்தாழ 16 வினாடிகள் ஆயிற்று. கவிதாவின் தலைமுடி தண்ணீர் அடியில் பரவி அலைந்தது. சற்று மூச்சு திணறுவது போல தோன்றியது. கவிதா கயிறு கட்டியிருந்தது மிகவும் பலவீனமாக இருந்தது. அவள் தன்னை விடுவித்துக் கொள்ள ஏதும் பிரயத்தனம் செய்யாதது ஆனந்துக்கு சற்று வியப்பாகக்கூட இருந்தது. ‘கடலில் குதித்தவுடன் அற்பாயுசில் போய்விட்டாளா?’ அவள் உடல் கனமடைந்து அவனையும் இழுத்துக் கொள்ளும் முன்னர் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். சற்று சிரமப்பட்டாலும் ஆனந்துக்கு தனது கைகளை விடுவித்துக் கொள்ள முடிந்தது. விடுவித்துக்கொண்ட கைகளை தன்னுடைய பாண்ட் பாக்கட்டில் நுழைத்து சிறிய கத்தியை எடுத்தான். சற்று உடலை வளைத்து ஒரு தேர்ந்த gymnast போல கால்கட்டை வெட்டினான். கவிதாவிடமிருந்து விடுவித்துக் கொண்டு மெல்ல மேலெழும்பி கடல் மேல் மட்டத்துக்கு வந்து காற்றை சுவாசித்தபோது அப்பாடா என்றிருந்தது ஆனந்துக்கு. இந்நேரம் கவிதா கடலடியில் போயிருப்பாளா? திரும்பிக்கூட பார்க்கத் தோணவில்லை ஆனந்துக்கு. காரியம் ஆனதும் கழட்டிவிட என்னவெல்லாம் நாடகம் ஆட வேண்டியிருக்கிறது!!!

கவிதாவுடைய friend யாரது ஆங் ஷீலா! முதலில் வீட்டுக்கு போய் கொஞ்சம் நேரம் rest. காலையில் முதல் வேலையாக போஸ்ட்மேனைப் பார்த்து லெட்டரை வாங்கணும். முதலில் வீடு. கொஞ்சம் நேரம் தூக்கம். ஆனந்த் பாலத்தின் மேலிருந்த மோட்டார் சைக்கிளை உதைத்து start செய்தபோது சற்று உற்சாகமாக உணந்தான். என்ன ஒரு planning. என்ன ஒரு execution! ஈர உடம்பில் காற்று வருடியது சற்று சுகமாக இருந்தது.
இளம்பெண் தற்கொலை
சென்னை: இளம்பெண் ஒருவர் தன் காலைக் கட்டிக் கொண்டு பாலத்தில் இருந்து விழுந்து நேற்று தற்கொலை செய்துக் கொண்டாள். அவளுடைய அப்பாவுக்கு இறக்கும் முன் எழுதிய கடிதத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தான் காரணம் என்று தெரிகிறது. இறந்துப் போன பெண்ணின் காதலன் அவள் மேல் விழுந்து கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது.




இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கக்கூட இல்லை. நாளைக் காலையில் தினத்தந்தியில் ஒரு பத்தி செய்தி. பிறகு ஒரு மாதம் தாடியுடன் திரிந்துவிட்டு அதையே french cut ஆக மாற்றிவிட்டு... ஷீலா நினைவுக்கு வரஆனந்துக்கு சற்று சந்தோஷமாக இருந்தது. விசிலடித்த படி வீடு போய் சேந்தபோது மணி 1 ஆகி விட்டிருந்தது. தலையை துவட்டிக்கொண்டு படுக்கையில் சாய்ந்தவுடன் ஆனந்தை தூக்கம் தழுவிக் கொண்டது. கனவில் கவிதா தோன்றி அது..! படத்தில் வரும் பேய் ஸ்நேகாவைத் துரத்துவது போல முட்டைக் கண்களுடன் விரட்டிக்கொண்டு வந்தாள். ஆனந்த் வேகமாகப் ஓடிப்போய் மூச்சு வாங்க வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டான். கவிதா விடாமல் கதவைத் தட்டிக்கொண்டிருக்க திடீரென முழித்துக் கொண்டான். கதவை தட்டும் சத்தம் மட்டும் நிற்கவில்லை. கனவா இல்லை நிஜமா என்று புரியாமல் சற்றுநேரம் இருந்தான். கதவு தட்டும் சத்தம் வலுக்கவே மெதுவாக எழுந்துப் போய் கதவை திறக்க வெளியே போலீஸ்..



தொடரும்.