Sunday, June 25, 2006

மனிதர்கள்

கடந்த வாரம் ஒரு நாள் இரவு 10 மணி அளவில் என்னுடைய நண்பர் ஒருவர் மற்றொரு நண்பருடன் மின்சார ரயிலில் தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த முதல் வகுப்பு பெட்டியில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் வழக்கம் போல கதவோரத்தில் நின்றுக்கொண்டு பயணம் செய்திருக்கிறார். மனிதருக்கு சற்று இரத்த அழுத்தம் உண்டு. மின்சார வண்டி சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடைப்பட்டு பயணித்துக் கொண்டிருந்தபோது நண்பர் blank-out ஆகி ஓடும் வண்டியிலிருந்து விழுந்து விட்டிருக்கிறார். உடன் பயணம் செய்த நண்பர் செய்வதறியாது வண்டியின் alarm chain-ஐ இழுக்க முற்பட்டபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் அவரை தடுத்திருக்கின்றனர். “உங்களை யார் கதவருகில் நின்றுக் கொண்டு பயணம் செய்யச் சொன்னது?” என்று சத்தம்போட்டு கத்தி அவரை செயல்படாமல் தடுத்திருக்கின்றனர். அவர்கள் கூறிய மற்றொரு காரணம், அவர்கள் வீட்டுக்குச் செல்ல நேரமாகும் என்பது! என்னவொரு மனித நேயம் பாருங்கள்!

உடன் பயணம் செய்த நண்பர் செல்போன் மூலமாக மற்ற நண்பர்களுக்கு விஷயம் சொல்லியிருக்கிறாா. கிண்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் ஓடிப்போய் நிலைய அதிகாரியிடம் விஷயம் சொல்லிவிட்டு ரயில்பாதையில் வண்டி வந்த திசை நோக்கி ஓடியிருக்கிறார். அந்த இருட்டில் நண்பனை அவரால் காணமுடியவில்லை. இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் கீழே விழுந்தவருடைய செல்போனுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். கிண்டி ரயில் நிலைய அதிகாரி சைதாப்பேட்டை நிலைய அதிகாரியிடம் விஷயம் சொல்லி ஒரு பணியாளை இருப்புப்பாதையில் விழுந்தவரை தேடச்சொல்லியிருக்கிறார். இந்த பணியாள் கீழே விழுந்தவரையும் அருகே கிடந்த அவருடைய செல்போனில் அழைப்பு வருவதையும் பார்த்து attend செய்திருக்கிறார். ரத்தக்களறியாக இருந்தவரை எதிர் திசையில் சென்னை பார்க் செல்லும் மின்வண்டியில் ஏற்றி General Hospitalக்கு அனுப்பியிருக்கிறார். இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்ட மற்ற நண்பர்கள் அடிப்பட்டவரை அழைத்துப்போய் அட்மிட் செய்து அந்த இரவில் டாக்டர்கள் துரித கதியில் அடிப்பட்டவரை கவனித்து... நூற்றுக்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு... இப்போது நண்பர் சற்று தேறிவருகிறார். கீழே விழுந்தவரை ஆஸ்பிடலில் சென்று அட்மிட் செய்ய ஆன நேரம் ஒரு மணி நேரம் தான். ஓடும் ரயிலில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவர் எனக்குத் தெரிந்து இவர் மட்டும்தான்.

விஷயம் இதுவல்ல. மனிதனுக்கே மனித உயிரின் மதிப்பு தெரியாமலிருக்கிறதே என்கிற ஆதங்கம் தான் இதை நான் எழுத காரணம். தனக்கு நேராவிடில் நல்லது என்கிற மெஷினாகிவிட்ட மனிதனின் இந்த மனோபாவம் இனிமேலா மாறப்போகிறது? இந்த அழகில் நாம் ஈழத்தையும் ஈராக்கையும் பார்த்து அந்த மனிதர்களைப்பற்றி விமரிசனம் செய்து வருகிறோம்.
நாம் அனைவரும் தாலிபானை விட எந்த விதத்தில் உசத்தி?

5 comments:

priya said...

நம் சமுதாயம் சிறிது சிறிதாக நேர்மை, நியாயம், மனிதநேயம் அனைத்தயும் இழந்துகொண்டு இருக்கின்றது. கொடுமை என்னவென்றால் நேர்மை, நியாயம், மனிதநேயத்தோடு நடந்து கொள்பவர்களை சமுதாயம் கேலி பேசவும் தயங்குவதில்லை.

Anonymous said...

well said, sir, people are becoming more& more selfish and narrowminded nowadays.its really a shameful mentality. if i were there i would help the other guy to stop the train for sure (by shouting & confronting those mercyless assholes)
you post will make people think on this deeply.thats great.

வடுவூர் குமார் said...

என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.நாளை நமக்கும் நேரலாம் என்று கூடவா தோனவில்லை.
ஹும்!!! பெருமூச்சு தான் விடமுடிகிறது.

சந்தர் said...

சிந்திப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. அனைத்திலும் ஓர் அவசரம். எறும்புவரிசைப்போல நாம். இடையில் யார் இறந்தாலும் இடறி விழுந்தாலும் மற்ற எறும்புகள் பயணிப்பது போல நாமும்... எறும்புகளாகிப் போனோம், நாமும் எறும்புகளாகிப் போனோம்!!!

சந்தர் said...

உண்மைதான் இனியன். நாம் மாக்களாகிப்போனோமே என்று கவலையாகத்தான் இருக்கிறது.

Yes Guru, people are becoming shameless of their selfishness. Had it not been for the timely action taken by his friends, the accident victims list would have another name added to it.

வடுவூர் குமார் நீங்கள் சொன்னது எனக்கு மஹாபாரதத்தில் தருமரிடம் யக்ஷன் "உமக்கு ஆச்சரியமான விஷயம் எது" என்று கேட்டபோது தருமன் சொன்னானாம். "தினமும் யாதேனும் மக்கள் மரித்துப்போய் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். பிற மக்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள் தங்களுக்கும் நாளை இதே நிலைமை என்ற பிரதிக்ஞை இல்லாமல். இதுதான் எனக்கு ஆச்சரியமான விஷயம்" என்றானாம். கஷ்டங்கள் மற்றவர்களுக்குத்தான் என்கிற மனோபாவம் மாறதவரையில் நாம் பெருமூச்சுதான் விடமுடியும்.